ஆபிராமுடைய மந்தைமேய்ப்பருக்கும் லோத்துடைய மந்தைமேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. அக்காலத்திலே கானானியரும் பெரிசியரும் அத்தேசத்தில் குடியிருந்தார்கள்.
ஆபிராம் லோத்தை நோக்கி: எனக்கும் உனக்கும், என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்.
இந்தத் தேசமெல்லாம் உனக்குமுன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம்; நீ இடதுபுறம் போனால், நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால், நான் இடதுபுறம் போகிறேன் என்றான்.
அப்பொழுது லோத்து தன் கண்களை ஏறெடுத்துப்பார்த்து: யோர்தான் நதிக்கு அருகான சமபூமி முழுவதும் நீர்வளம் பொருந்தினதாயிருக்கக் கண்டான். கர்த்தர் சோதோமையும் கொமோராவையும் அழிக்கும்முன்னே, சோவாருக்குப் போம் வழிமட்டும் அது கர்த்தருடைய தோட்டத்தைப் போலவும் எகிப்துதேசத்தைப்போலவும் இருந்தது.
அப்பொழுது லோத்து யோர்தானுக்கு அருகான சமபூமி முழுவதையும் தெரிந்துகொண்டு, கிழக்கே பிரயாணப்பட்டுப் போனான்; இப்படி அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரிந்தார்கள்.
ஆபிராம் கானான்தேசத்தில் குடியிருந்தான்; லோத்து அந்த யோர்தானுக்கு அருகான சமபூமியிலுள்ள பட்டணங்களில் வாசம்பண்ணி, சோதோமுக்கு நேரே கூடாரம் போட்டான்.
சோதோமின் ஜனங்கள் பொல்லாதவர்களும் கர்த்தருக்கு முன்பாக மகா பாவிகளுமாய் இருந்தார்கள்.
லோத்து ஆபிராமைவிட்டுப் பிரிந்தபின்பு, கர்த்தர் ஆபிராமை நோக்கி: உன் கண்களை ஏறெடுத்து, நீ இருக்கிற இடத்திலிருந்து வடக்கேயும், தெற்கேயும், கிழக்கேயும், மேற்கேயும் நோக்கிப்பார்.
நீ பார்க்கிற இந்தப் பூமி முழுவதையும் நான் உனக்கும் உன் சந்ததிக்கும் என்றைக்கும் இருக்கும்படி கொடுத்து,
உன் சந்ததியைப் பூமியின் தூளைப்போலப் பெருகப்பண்ணுவேன்; ஒருவன் பூமியின் தூளை எண்ணக்கூடுமானால், உன் சந்ததியும் எண்ணப்படும்.
நீ எழுந்து தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டோ, அம்மட்டும் நடந்து திரி; உனக்கு அதைத் தருவேன் என்றார்.
அப்பொழுது ஆபிராம் கூடாரத்தைப் பெயர்த்துக்கொண்டுபோய், எபிரோனிலிருக்கும் மம்ரேயின் சமபூமியில் சேர்ந்து குடியிருந்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.
சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகும், ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலும் இருந்த நாட்களில்;
அவர்கள் சோதோமின் ராஜாவாகிய பேராவோடும், கொமோராவின் ராஜாவாகிய பிர்சாவோடும், அத்மாவின் ராஜாவாகிய சிநெயாவோடும், செபோயீமின் ராஜாவாகிய செமேபரோடும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவோடும் யுத்தம்பண்ணினார்கள்.
இவர்களெல்லாரும் உப்புக்கடலாகிய சித்தீம் பள்ளத்தாக்கிலே கூடினார்கள்.
இவர்கள் பன்னிரண்டு வருஷம் கெதர்லாகோமேரைச் சேவித்து, பதின்மூன்றாம் வருஷத்திலே கலகம்பண்ணினார்கள்.
பதினாலாம் வருஷத்திலே கெதர்லாகோமேரும், அவனோடே கூடியிருந்த ராஜாக்களும் வந்து, அஸ்தரோத்கர்னாயீமிலே இருந்த ரெப்பாயீமியரையும், காமிலே இருந்த சூசிமியரையும், சாவேகீரியத்தாயீமிலே இருந்த ஏமியரையும்,
சேயீர் மலைகளில் இருந்த ஓரியரையும், வனாந்தரத்துக்கு அருகான எல்பாரான்மட்டும் முறியடித்து,
திரும்பிக் காதேஸ் என்னும் என்மிஸ்பாத்துக்கு வந்து, அமலேக்கியருடைய நாடனைத்தையும், அத்சாத்சோன் தாமாரிலே குடியிருந்த எமோரியரையும்கூடச் சங்கரித்தார்கள்.
அப்பொழுது சோதோமின் ராஜாவும், கொமோராவின் ராஜாவும், அத்மாவின் ராஜாவும், செபோயீமின் ராஜாவும், சோவார் என்னும் பேலாவின் ராஜாவும் புறப்பட்டுச் சித்தீம் பள்ளத்தாக்கிலே,
ஏலாமின் ராஜாவாகிய கெதர்லாகோமேரோடும், ஜாதிகளின் ராஜாவாகிய திதியாலோடும், சிநெயாரின் ராஜாவாகிய அம்ராப்பேலோடும், ஏலாசாரின் ராஜாவாகிய அரியோகோடும் யுத்தம்பண்ணப் புறப்பட்டு, அந்த ஐந்து ராஜாக்களோடும் இந்த நாலு ராஜாக்களும் யுத்தம்பண்ணினார்கள்.
அந்தச் சித்தீம் பள்ளத்தாக்கு எங்கும் நிலக்கீல் உண்டாகும் கேணிகள் இருந்தது. சோதோம் கொமோராவின் ராஜாக்கள் முறிந்தோடி அங்கே விழுந்தார்கள்; மீந்தவர்கள் மலைகளுக்கு ஓடிப்போனார்கள்.
அப்பொழுது அவர்கள் சோதோமிலும் கொமோராவிலுமுள்ள பொருள்கள் எல்லாவற்றையும், போஜனபதார்த்தங்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.
ஆபிராமின் சகோதரனுடைய குமாரனாகிய லோத்து சோதோமிலே குடியிருந்தபடியால், அவனையும், அவன் பொருள்களையும் கொண்டுபோய்விட்டார்கள்.
தப்பியோடின ஒருவன் எபிரெயனாகிய ஆபிராமிடத்தில் வந்து அதை அறிவித்தான்; ஆபிராம் தன்னோடே உடன்படிக்கை செய்திருந்த மனிதராகிய எஸ்கோலுக்கும் ஆநேருக்கும் சகோதரனாகிய மம்ரே என்னும் எமோரியனுடைய சமபூமியிலே அப்பொழுது குடியிருந்தான்.