உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும்,
உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்,
உன்னுடைய பின்நாட்களில் உனக்கு நன்மை செய்யும்பொருட்டு, உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைச் சோதித்து, கொள்ளிவாய்ச் சர்ப்பங்களும் தேள்களும், தண்ணீரில்லாத வறட்சியுமுள்ள பயங்கரமான பெரிய வனாந்தரவழியாய் உன்னை அழைத்துவந்தவரும், உனக்காகப் பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர் புறப்படப்பண்ணினவரும்,
உன் பிதாக்கள் அறியாத மன்னாவினால் வனாந்தரத்திலே உன்னைப் போஷித்துவந்தவருமான உன் தேவனாகிய கர்த்தரை நீ மறவாமலும்,
என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,
உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக் கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.
உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.
உன் தேவனாகிய கர்த்தருடைய சத்தத்திற்கு நீங்கள் கீழ்ப்படியாமற்போவதினால், கர்த்தர் உங்களுக்கு முன்பாக அழித்த ஜாதிகளைப்போல நீங்களும் அழிவீர்கள்.
இஸ்ரவேலே, கேள்: நீ இப்பொழுது யோர்தானைக் கடந்து, உன்னிலும் ஜனம் பெருத்ததும் பலத்ததுமான ஜாதிகளைத் துரத்தி, வானத்தையளாவிய மதில் சூழ்ந்த பெரிய பட்டணங்களைப் பிடித்து,
ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்; இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய்.
உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு முன்பாகக் கடந்துபோகிறவர் என்பதை இன்று அறியக்கடவாய்; அவர் பட்சிக்கிற அக்கினியைப்போல அவர்களை அழிப்பார்; அவர்களை உனக்கு முன்பாக விழப்பண்ணுவார்; இவ்விதமாய்க் கர்த்தர் உனக்குச் சொன்னபடியே, நீ அவர்களைச் சீக்கிரமாய்த் துரத்தி, அவர்களை அழிப்பாய்.
உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்துகையில், நீ உன் இருதயத்திலே: என் நீதியினிமித்தம் இந்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி கர்த்தர் என்னை அழைத்துவந்தார் என்று சொல்லாயாக; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமே கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்தி விடுகிறார்.
உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.
ஆகையால், உன் நீதியினிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் உனக்கு அந்த நல்ல தேசத்தைச் சுதந்தரிக்கக் கொடார் என்பதை அறியக்கடவாய்; நீ வணங்காக் கழுத்துள்ள ஜனம்.
நீ வனாந்தரத்தில் உன் தேவனாகிய கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதை நினை, அதை மறவாயாக; நீங்கள் எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட நாள் முதல், இவ்விடத்தில் வந்து சேருமட்டும், கர்த்தருக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.
ஓரேபிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதினால், கர்த்தர் உங்களை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார்.
கர்த்தர் உங்களோடே பண்ணின உடன்படிக்கைப் பலகைகளாகிய கற்பலகைகளைப் பெற்றுக்கொள்ளும்படி நான் மலையில் ஏறினபோது, நாற்பதுநாள் இரவும் பகலும் மலையில் தங்கி அப்பம் புசியாமலும் தண்ணீர் குடியாமலும் இருந்தேன்.
அப்பொழுது தேவனுடைய விரலினால் எழுதியிருந்த இரண்டு கற்பலகைகளைக் கர்த்தர் என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்; சபை கூடியிருந்த நாளில் கர்த்தர் மலையிலே அக்கினியின் நடுவிலிருந்து உங்களுடனே பேசின வார்த்தைகளின்படியே அவைகளில் எழுதியிருந்தது.
இரவும் பகலும் நாற்பதுநாள் முடிந்து, கர்த்தர் எனக்கு அந்த உடன்படிக்கையின் இரண்டு கற்பலகைகளைக் கொடுக்கிறபோது,
கர்த்தர் என்னை நோக்கி: நீ எழுந்து, சீக்கிரமாய் இவ்விடம் விட்டு, இறங்கிப்போ; நீ எகிப்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்; நான் அவர்களுக்கு விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாக விட்டு விலகி, வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தைத் தங்களுக்காக உண்டாக்கினார்கள் என்றார்.
பின்னும் கர்த்தர் என்னை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; அது வணங்காக் கழுத்துள்ள ஜனம்.
ஆகையால், நான் அவர்களை அழித்து, அவர்கள் பேரை வானத்தின்கீழ் அற்றுப்போகப்பண்ணும்படி, நீ என்னை விட்டுவிடு; அவர்களைப்பார்க்கிலும் உன்னைப் பலத்ததும் ஜனம் பெருத்ததுமான ஜாதியாக்குவேன் என்றார்.
அப்பொழுது நான் திரும்பி மலையிலிருந்து இறங்கினேன், மலையானது அக்கினி பற்றி எரிந்துகொண்டிருந்தது; உடன்படிக்கையின் இரண்டு பலகைகளும் என் இரண்டு கைகளில் இருந்தது.
நான் பார்த்தபோது, நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்து, வார்ப்பிக்கப்பட்ட கன்றுக்குட்டியை உங்களுக்கு உண்டாக்கி, கர்த்தர் உங்களுக்கு விதித்த வழியைச் சீக்கிரமாய் விட்டு விலகினதைக் கண்டேன்.
அப்பொழுது நான் என் இரண்டு கைகளிலும் இருந்த அந்த இரண்டு பலகைகளையும் ஓங்கி எறிந்து, அவைகளை உங்கள் கண்களுக்கு முன்பாக உடைத்துப்போட்டேன்.