அதினால் அவர்கள்: இது இரத்தம், அந்த ராஜாக்கள் தங்களைத் தாங்களே ஒருவரை ஒருவர் வெட்டிக்கொண்டு மாண்டுபோனார்கள்; ஆதலால் மோவாபியரே, கொள்ளைக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்.
அவர்கள் இஸ்ரவேலின் பாளயத்திற்கு வந்தபோதோவெனில், இஸ்ரவேலர் எழும்பி, மோவாபியரைத் தங்களுக்கு முன்பாக ஓடிப்போகத்தக்கதாய் முறியஅடித்து, அவர்கள் தேசத்திற்குள் புகுந்து, அங்கேயும் மோவாபியரை முறியஅடித்து,
பட்டணங்களை இடித்து, சகல நல்ல நிலத்திலும் கல்லெறிந்து நிரப்பி, நீரூற்றுகளையெல்லாம் தூர்த்து, நல்ல மரங்களையெல்லாம் வெட்டிப்போட்டார்கள்; கிராரேசேத்திலேமாத்திரம் அதின் மதில்கள் இன்னும் இடிபடாதிருக்கிறபோது, கவண்காரர் அதைச் சுற்றிக்கொண்டு அதையும் சேதமாக்கினார்கள்.
யுத்தம் மும்முரமாகிறதென்று மோவாபியரின் ராஜா கண்டபோது, அவன் ஏதோமின் ராஜாவின்மேல் வலுமையாய் விழுகிறதற்குப் பட்டயம் உருவுகிற எழுநூறுபேரைக் கூட்டிக்கொண்டு போனான்; ஆனாலும் அவர்களாலே கூடாமற்போயிற்று.
அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாக பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.
தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள்.
எலிசா அவளை நோக்கி: நான் உனக்கு என்னசெய்ய வேண்டும்? வீட்டில் உன்னிடத்தில் என்ன இருக்கிறது சொல் என்றான். அதற்கு அவள்: ஒரு குடம் எண்ணெய் அல்லாமல் உமது அடியாளுடைய வீட்டில் வேறொன்றும் இல்லை என்றாள்.
அப்பொழுது அவன்: நீ போய், உன்னுடைய அயல்வீட்டுக்காரர் எல்லாரிடத்திலும் அநேகம் வெறும்பாத்திரங்களைக் கேட்டுவாங்கி,
உள்ளே போய், உன் பிள்ளைகளுடன் உள்ளே நின்று கதவைப் பூட்டி, அந்தப் பாத்திரங்கள் எல்லாவற்றிலும் வார்த்து, நிறைந்ததை ஒரு பக்கத்தில் வை என்றான்.
அவள் அவனிடத்திலிருந்து போய், தன் பிள்ளைகளுடன் கதவைப் பூட்டிக்கொண்டு, இவர்கள் பாத்திரங்களை அவளிடத்தில் கொடுக்க, அவள் அவைகளில் வார்த்தாள்.
அந்தப் பாத்திரங்கள் நிறைந்த பின், அவள் தன் மகன் ஒருவனை நோக்கி: இன்னும் ஒரு பாத்திரம் கொண்டுவா என்றாள். அதற்கு அவன்: வேறே பாத்திரம் இல்லை என்றான்; அப்பொழுது எண்ணெய் நின்று போயிற்று.
அவள் போய் தேவனுடைய மனுஷனுக்கு அதை அறிவித்தாள். அப்பொழுது அவன்: நீ போய் அந்த எண்ணெயை விற்று, உன் கடனைத் தீர்த்து, மீந்ததைக்கொண்டு நீயும் உன் பிள்ளைகளும் ஜீவனம்பண்ணுங்கள் என்றான்.
பின்பு ஒருநாள் எலிசா சூனேமுக்குப் போயிருக்கும்போது, அங்கேயிருந்த கனம்பொருந்திய ஒரு ஸ்திரீ அவனை போஜனம்பண்ண வருந்திக் கேட்டுக்கொண்டாள்; அப்படியே அவன் பயணப்பட்டு வருகிறபோதெல்லாம் போஜனம்பண்ணும்படி அங்கே வந்து தங்குவான்.
அவள் தன் புருஷனை நோக்கி: இதோ, நம்மிடத்தில் எப்போதும் வந்துபோகிற தேவனுடைய மனுஷனாகிய இவர் பரிசுத்தவான் என்று காண்கிறேன்.
நாம் மெத்தையின்மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி, அதில் அவருக்கு ஒரு கட்டிலையும், மேஜையையும், நாற்காலியையும், குத்துவிளக்கையும் வைப்போம்; அவர் நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்.
ஒருநாள் அவன் அங்கே வந்து, அந்த அறைவீட்டிலே தங்கி, அங்கே படுத்துக்கொண்டிருந்தான்.
அவன் தன் வேலைக்காரனாகிய கேயாசியை நோக்கி: இந்தச் சூனேமியாளை அழைத்துக்கொண்டுவா என்றான்; அவளை அழைத்துக்கொண்டு வந்தான்; அவள் அவனுக்கு முன்பாக நின்றாள்.
அவன் கேயாசியைப் பார்த்து: இதோ, இப்படிப்பட்ட சகல சலக்கரணையோடும் எங்களை விசாரித்து வருகிறாயே, உனக்கு நான் என்ன செய்யவேண்டும்? ராஜாவினிடத்திலாவது சேனாபதியினிடத்திலாவது உனக்காக நான் பேசவேண்டிய காரியம் உண்டோ என்று அவளைக் கேள் என்றான். அதற்கு அவள்: என் ஜனத்தின் நடுவே நான் சுகமாய்க் குடியிருக்கிறேன் என்றாள்.
அவளுக்குச் செய்யவேண்டியது என்னவென்று கேயாசியை அவன் கேட்டதற்கு; அவன், அவளுக்குப் பிள்ளை இல்லை, அவள் புருஷனும் பெரிய வயதுள்ளவன் என்றான்.
அப்பொழுது அவன்: அவளைக் கூப்பிடு என்றான்; அவளைக் கூப்பிட்டபோது, அவள் வந்து வாசற்படியிலே நின்றாள்.
அப்பொழுது அவன்: ஒரு பிராண உற்பத்திகாலத்திட்டத்திலே ஒரு குமாரனை அணைத்துக்கொண்டிருப்பாய் என்றான். அதற்கு அவள்: ஏது? தேவனுடைய மனுஷனாகிய என் ஆண்டவனே, உமது அடியாளுக்கு அபத்தம் சொல்லவேண்டாம் என்றாள்.
அந்த ஸ்திரீ கர்ப்பந்தரித்து, எலிசா தன்னோடே சொன்னபடி, ஒரு உற்பத்திகாலத்திட்டத்தில் ஒரு குமாரனைப் பெற்றாள்.
அந்தப் பிள்ளை வளர்ந்தான், ஒருநாள் அவன் அறுப்பறுக்கிறவர்களிடத்திலிருந்த தன் தகப்பனண்டைக்குப் போயிருக்கும்போது,
தன் தகப்பனைப் பார்த்து: என் தலை நோகிறது, என் தலை நோகிறது என்றான்; அப்பொழுது அவன் வேலைக்காரனிடத்தில், இவனை இவன் தாயினிடத்தில் எடுத்துக்கொண்டுபோய்விடு என்றான்.
அவனை எடுத்து, அவன் தாயினிடத்தில் கொண்டுபோனபோது, அவன் மத்தியானமட்டும் அவள் மடியில் இருந்து செத்துப்போனான்.