கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள்.
அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.
அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள்.
உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர்.
உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளும்படி, என் நடைகள் ஸ்திரப்பட்டால் நலமாயிருக்கும்.
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.
உம்முடைய நீதிநியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
உமது பிரமாணங்களைக் கைக்கொள்ளுவேன்; முற்றிலும் என்னைக் கைவிடாதேயும்.
வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்ளுகிறதினால்தானே.
என் முழு இருதயத்தோடும் உம்மைத் தேடுகிறேன், என்னை உமது கற்பனைகளைவிட்டு வழிதப்பவிடாதேயும்.
நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.
கர்த்தாவே, நீர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர்; உம்முடைய பிரமாணங்களை எனக்குப் போதியும்.
உம்முடைய வாக்கின் நியாயத்தீர்ப்புகளையெல்லாம் என் உதடுகளால் விவரித்திருக்கிறேன்.
திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.
உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.
உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.
உமது அடியேனுக்கு அனுகூலமாயிரும்; அப்பொழுது நான் பிழைத்து, உமது வசனத்தைக் கைக்கொள்ளுவேன்.
உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திறந்தருளும்.
பூமியிலே நான் பரதேசி; உமது கற்பனைகளை எனக்கு மறையாதேயும்.
உமது நியாயங்கள்மேல் என் ஆத்துமா எக்காலமும் வைத்திருக்கிற வாஞ்சையினால் தொய்ந்துபோகிறது.
உமது கற்பனைகளை விட்டு வழிவிலகின சபிக்கப்பட்ட அகங்காரிகளை நீர் கடிந்துகொள்ளுகிறீர்.
நிந்தையையும் அவமானத்தையும் என்னை விட்டகற்றும்; நான் உம்முடைய சாட்சிகளைக் கைக்கொள்ளுகிறேன்.
பிரபுக்களும் உட்கார்ந்து எனக்கு விரோதமாய்ப் பேசிக்கொள்ளுகிறார்கள்; உமது அடியேனோ, உமது பிரமாணங்களைத் தியானிக்கிறேன்.
உம்முடைய சாட்சிகள் எனக்கு இன்பமும், என் ஆலோசனைக்காரருமாயிருக்கிறது.
என் ஆத்துமா மண்ணோடு ஒட்டிக்கொண்டிருக்கிறது; உமது வசனத்தின்படி என்னை உயிர்ப்பியும்.