போய், வேலைசெய்யுங்கள், உங்களுக்கு வைக்கோல் கொடுக்கப்படுவதில்லை; ஆனாலும் கணக்கின்படியே நீங்கள் செங்கலை ஒப்புவிக்கவேண்டும் என்றான்.
நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக்கப்படாது என்று சொல்லப்பட்டதினாலே, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள்.
அவர்கள் பார்வோனுடைய சமுகத்தைவிட்டுப் புறப்படுகையில், வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு,
அவர்களை நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயந்தீர்க்கக்கடவர் என்றார்கள்.
அப்பொழுது மோசே கர்த்தரிடத்தில் திரும்பிப்போய்: ஆண்டவரே, இந்த ஜனங்களுக்குத் தீங்கு வரப்பண்ணினதென்ன? ஏன் என்னை அனுப்பினீர்?
நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் பார்வோனுக்குச் செய்வதை இப்பொழுது காண்பாய்; பலத்த கையைக் கண்டு அவர்களைப் போகவிட்டு, பலத்த கையைக் கண்டு அவர்களைத் தன் தேசத்திலிருந்து துரத்திவிடுவான் என்றார்.
மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யேகோவா,
சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்; ஆனாலும் யேகோவா என்னும் என் நாமத்தினால் நான் அவர்களுக்கு அறியப்படவில்லை.
அவர்கள் பரதேசிகளாய்த் தங்கின தேசமாகிய கானான்தேசத்தை அவர்களுக்குக் கொடுப்பேன் என்று நான் அவர்களோடே என் உடன்படிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறேன்.
எகிப்தியர் அடிமைகொள்ளுகிற இஸ்ரவேல் புத்திரரின் பெருமூச்சையும் நான் கேட்டு, என் உடன்படிக்கையை நினைத்தேன்.
ஆதலால், இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நானே கர்த்தர்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி நான் உங்களை விடுவித்து, உங்களை அவர்கள் அடிமைத்தனத்திற்கு நீங்கலாக்கி, ஓங்கிய கையினாலும், மகா தண்டனைகளினாலும் உங்களை மீட்டு,
உங்களை எனக்கு ஜனங்களாகச் சேர்த்துக்கொண்டு, உங்களுக்கு தேவனாயிருப்பேன்; உங்கள்மேல் எகிப்தியர் சுமத்தின சுமைகளை நீக்கி உங்களை விடுவிக்கிற உங்கள் தேவனாகிய கர்த்தர் நான் என்று அறிவீர்கள்.
ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் கொடுப்பேன் என்று நான் ஆணையிட்ட தேசத்தில் உங்களைக் கொண்டுபோய், அதை உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுப்பேன்; நான் கர்த்தர் என்று அவர்களுக்குச் சொல் என்றார்.
இந்தப்பிரகாரமாக மோசே இஸ்ரவேல் புத்திரருக்குச் சொன்னான்; அவர்களோ மனமடிவினாலும் கொடுமையான வேலையினாலும் மோசேக்குச் செவிகொடாமற்போனார்கள்.
பின்பு, கர்த்தர் மோசேயை நோக்கி:
நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்தில் போய், அவன் தன் தேசத்திலிருந்து இஸ்ரவேல் புத்திரரைப் போகவிடும்படி அவனோடே பேசு என்றார்.
மோசே கர்த்தருடைய சந்நிதானத்தில் நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்.
கர்த்தர் மோசேயோடும் ஆரோனோடும் பேசி, இஸ்ரவேல் புத்திரரை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டு போகும்படிக்கு, அவர்களை இஸ்ரவேல் புத்திரரிடத்துக்கும் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனிடத்துக்கும் கட்டளை கொடுத்து அனுப்பினார்.
அவர்களுடைய பிதாக்கள் வீட்டாரின் தலைவர் யாரென்றால், இஸ்ரவேலுக்கு முதல் பிறந்தவனாகிய ரூபனுடைய குமாரர் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ; இவர்கள் ரூபனுடைய வம்சங்களின் தலைவர்.
சிமியோனின் குமாரர் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சோகார், கானானிய ஸ்திரீயின் குமாரனாகிய சவுல்; சிமியோனுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.
உற்பத்திக்கிரமப்படி பிறந்த லேவியின் குமாரருடைய நாமங்களாவன, கெர்சோன், கோகாத், மெராரி என்பவைகள். லேவி நூற்று முப்பத்தேழு வருஷம் உயிரோடிருந்தான்.
அவரவர் வம்சங்களின்படி பிறந்த கெர்சோனின் குமாரர் லிப்னீ, சிமேயீ என்பவர்கள்.
கோகாத்தின் குமாரர் அம்ராம், இத்சேயார், எப்ரோன், ஊசியேல் என்பவர்கள்; கோகாத் நூற்று முப்பத்து மூன்று வருஷம் உயிரோடிருந்தான்.
மெராரியின் குமாரர் மகேலி, மூசி என்பவர்கள்; அவரவர் சந்ததியின்படி லேவியினுடைய வம்சங்களின் தலைவர் இவர்களே.