அக்காலத்திலே எகிப்துதேசத்தின் நடுவிலே கர்த்தருக்கு ஒரு பலிபீடமும், அதின் எல்லையருகே கர்த்தருக்கு ஒரு ஸ்தம்பமும் உண்டாயிருக்கும்.
அது எகிப்துதேசத்திலே சேனைகளின் கர்த்தருக்கு அடையாளமும் சாட்சியுமாயிருக்கும்; ஒடுக்குகிறவர்களினிமித்தம் அவர்கள் கர்த்தரைநோக்கிக் கூப்பிடுவார்கள்; அப்பொழுது அவர்களுக்கு ஒரு இரட்சகனையும், ஒரு பெலவானையும் அனுப்பி அவர்களை விடுவிப்பார்.
அப்பொழுது கர்த்தர் எகிப்தியருக்கு அறியப்படுவார்; எகிப்தியர் கர்த்தரை அக்காலத்திலே அறிந்து, அவருக்குப் பலிகளோடும் காணிக்கைகளோடும் ஆராதனைசெய்து, கர்த்தருக்குப் பொருத்தனைகளைப்பண்ணி அவைகளைச் செலுத்துவார்கள்.
கர்த்தர் எகிப்தியரை வாதையினால் அடிப்பார்; அடித்து குணமாக்குவார்; அவர்கள் கர்த்தரிடத்தில் மனந்திரும்புவார்கள்; அப்பொழுது அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டு, அவர்களைக் குணமாக்குவார்.
அக்காலத்திலே எகிப்திலிருந்து அசீரியாவுக்குப் போகிற பெரும்பாதை உண்டாயிருக்கும்; அசீரியர் எகிப்துக்கும், எகிப்தியர் அசீரியாவுக்கும் வந்து, எகிப்தியர் அசீரியரோடுங்கூட ஆராதனை செய்வார்கள்.
அக்காலத்திலே இஸ்ரவேல் எகிப்தோடும் அசீரியாவோடும் மூன்றாவதாக பூமியின் நடுவில் ஆசீர்வாதமாயிருக்கும்.
அவர்களைக் குறித்துச் சேனைகளின் கர்த்தர்: எகிப்தியராகிய என் ஜனமும், அசீரியராகிய என் கரத்தின் கிரியையும், இஸ்ரவேலராகிய என் சுதந்தரமும் ஆசீர்வதிக்கப்பட்டது என்று சொல்லி, அவர்களை ஆசீர்வதிப்பார்.
தர்த்தான், அசீரியா ராஜாவாகிய சர்கோனாலே அனுப்பப்பட்டு, அஸ்தோத்துக்கு வந்து, அஸ்தோத்தின்மேல் யுத்தம்பண்ணி, அதைப் பிடித்த வருஷத்திலே,
கர்த்தர் ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயாவை நோக்கி: நீ போய் உன் அரையிலிருக்கிற இரட்டை அவிழ்த்து, உன் கால்களிலிருக்கிற பாதரட்சைகளைக் கழற்று என்றார்; அவன் அப்படியே செய்து, வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தான்.
அப்பொழுது கர்த்தர்: எகிப்தின்மேலும் எத்தியோப்பியாவின்மேலும் வரும் மூன்றுவருஷத்துக் காரியங்களுக்கு அடையாளமும் குறிப்புமாக என் ஊழியக்காரனாகிய ஏசாயா வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடக்கிறதுபோல,
அசீரியா ராஜா, தான் சிறைபிடிக்கப்போகிற எகிப்தியரும், தான் குடிவிலக்கப்போகிற எத்தியோப்பியருமாகிய இளைஞரையும் கிழவரையும், வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் எகிப்தியருக்கு வெட்கமுண்டாகும்படி, இருப்பிடம் மூடப்படாதவர்களாய்க் கொண்டுபோவான்.
அப்பொழுது இந்தக் கடற்கரைக்குடிகள் தாங்கள் நம்பியிருந்த எத்தியோப்பியாவைக்குறித்தும், தாங்கள் பெருமைபாராட்டின எகிப்தைக்குறித்தும் கலங்கி வெட்கி:
இதோ, அசீரிய ராஜாவின் முகத்துக்குத் தப்பும்படிக்கு நாங்கள் நம்பி, சகாயத்துக்கென்று ஓடிவந்து அண்டினவன் இப்படியானானே; நாங்கள் எப்படி விடுவிக்கப்படுவோம் என்று அக்காலத்திலே சொல்லுவார்கள் என்றார்.
கடல் வனாந்தரத்தின் பாரம். சுழல்காற்று தென்திசையிலிருந்து எழும்பிக் கடந்துவருகிறதுபோல, பயங்கரமான தேசமாகிய வனாந்தரத்திலிருந்து அது வருகிறது.
கொடிய தரிசனம் எனக்குத் தெரிவிக்கப்பட்டது; துரோகி துரோகம்பண்ணி, பாழாக்கிறவன் பாழாக்கிக்கொண்டே இருக்கிறான்; ஏலாமே எழும்பு; மேதியாவே முற்றிக்கைபோடு; அதினாலே உண்டான தவிப்பையெல்லாம் ஒழியப்பண்ணினேன்.
ஆகையால், என் இடுப்பு மகா வேதனையால் நிறைந்திருக்கிறது; பிள்ளைபெறுகிறவளின் வேதனைகளுக்கு ஒத்த வேதனைகள் என்னைப் பிடித்தது; கேட்டதினால் உளைவுகொண்டு, கண்டதினால் கலங்கினேன்.
என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று.
பந்தியை ஆயத்தப்படுத்துங்கள், ஜாமக்காரரை வையுங்கள், புசியுங்கள், குடியுங்கள்; பிரபுக்களே, எழுந்து பரிசைகளுக்கு எண்ணெய் பூசுங்கள்.
ஆண்டவர் என்னை நோக்கி: நீ போய், காண்பதைத் தெரிவிக்கும்படி ஜாமக்காரனை வை என்றார்.
அவன் ஒரு இரதத்தையும், ஜோடு ஜோடான குதிரைவீரரையும், ஜோடு ஜோடாகக் கழுதைகளின்மேலும் ஒட்டகங்களின்மேலும் ஏறிவருகிறவர்களையும் கண்டு, மிகுந்த கவனமாய்க் கவனித்துக்கொண்டே இருந்து:
ஆண்டவரே, நான் பகல்முழுதும் என் காவலிலே நின்று, இராமுழுதும் நான் என் காவலிடத்திலே தரித்திருக்கிறேன் என்று சிங்கத்தைப்போல் சத்தமிட்டுக் கூப்பிடுகிறான்.
இதோ, ஒரு ஜோடு குதிரை பூண்ட இரதத்தின்மேல் ஏறியிருக்கிற ஒரு மனுஷன் வருகிறான்; பாபிலோன் விழுந்தது, விழுந்தது; அதின் விக்கிரக தேவர்களையெல்லாம் தரையோடே மோதி உடைத்தார் என்று பிரதியுத்தரம் சொல்லுகிறான்.
என் போரடிப்பின் தானியமே, என் களத்தின் கோதுமையே, இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தரால் நான் கேள்விப்பட்டதை உங்களுக்கு அறிவித்தேன்.
தூமாவின் பாரம். சேயீரிலிருந்து என்னை நோக்கி: ஜாமக்காரனே, இரவு எவ்வளவு சென்றது? என்று கூப்பிட்டுக் கேட்க;
அதற்கு ஜாமக்காரன்: விடியற்காலம் வருகிறது, இராக்காலமும் வருகிறது; நீங்கள் கேட்க மனதானால் திரும்பிவந்து கேளுங்கள் என்று சொல்லுகிறான்.