நாங்கள் கர்ப்பமாயிருந்து வேதனைப்பட்டு, காற்றைப் பெற்றவர்களைப்போல் இருக்கிறோம்; தேசத்தில் ஒரு ரட்சிப்பையும் செய்யமாட்டாதிருக்கிறோம்; பூச்சக்கரத்துக்குடிகள் விழுகிறதுமில்லை.
மரித்த உம்முடையவர்கள் பிரேதமான என்னுடையவர்களோடேகூட எழுந்திருப்பார்கள்; மண்ணிலே தங்கியிருக்கிறவர்களே, விழித்துக் கெம்பீரியுங்கள்; உம்முடைய பனி பூண்டுகளின்மேல் பெய்யும் பனிபோல் இருக்கும்; மரித்தோரைப் பூமி புறப்படப்பண்ணும்.
என் ஜனமே, நீ போய் உன் அறைகளுக்குள்ளே பிரவேசித்து, உன் கதவுகளைப் பூட்டிக்கொண்டு, சினம் கடந்துபோகுமட்டும் கொஞ்சநேரம் ஒளித்துக்கொள்.
இதோ, பூமியினுடைய குடிகளின் அக்கிரமத்தினிமித்தம் அவர்களை விசாரிக்கும்படி கர்த்தர் தம்முடைய ஸ்தானத்திலிருந்து புறப்பட்டுவருவார்; பூமி தன் இரத்தப்பழிகளை வெளிப்படுத்தி, தன்னிடத்தில் கொலைசெய்யப்பட்டவர்களை இனி மூடாதிருக்கும்.
அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
அக்காலத்திலே நல்ல திராட்சரசத்தைத் தரும் திராட்சத்தோட்டம் உண்டாயிருக்கும்; அதைக்குறித்துப் பாடுங்கள்.
கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, அடிக்கடி அதற்குத் தண்ணீர்ப்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு அதை இரவும்பகலும் காத்துக்கொள்வேன்.
உக்கிரம் என்னிடத்தில் இல்லை; முட்செடியையும் நெரிஞ்சிலையும் எனக்கு விரோதமாய் யுத்தத்தில் கொண்டுவருகிறவன் யார்? நான் அவைகள்மேல் வந்து, அவைகளை ஏகமாய்க் கொளுத்திவிடுவேன்;
இல்லாவிட்டால் அவன் என்பெலனைப் பற்றிக்கொண்டு என்னோடே ஒப்புரவாகட்டும்; அவன் என்னோடே ஒப்புரவாவான்.
யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரவேல் பூத்துக்காய்த்து உலகத்தைப் பலனால் நிரப்பும் நாட்கள் வரும்.
அவர் அவனை அடித்தவர்களை அடித்ததுபோல இவனை அடிக்கிறாரோ? அவர்கள் கொல்லப்படும் கொலையாய் இவன் கொல்லப்படுகிறானோ?
தேவரீர் ஜனத்தைத் துரத்திவிடுகையில் மட்டாய் அதனோடே வழக்காடுகிறீர்; கொண்டல்காற்றடிக்கிற நாளிலே அவர் தம்முடைய கடுங்காற்றினால் அதை விலக்கிவிடுகிறார்.
ஆகையால், அதினால் யாக்கோபின் அக்கிரமம் நிக்கிரகம்பண்ணப்படும்; தோப்புவிக்கிரகங்களும் சிலைகளும் இனி நிற்காதபடி அவர்கள் பலிபீடங்களின் கல்லுகளையெல்லாம் நொறுக்கப்பட்ட சுண்ணாம்பு கல்லுகளாக்கிவிடும்போது, அவர்களுடைய பாவத்தை அவர் அகற்றுவாரென்பதே அதினால் உண்டாகும் பலன்.
அரணான நகரம் அவாந்தரையாகும், அந்த வாசஸ்தலம் தள்ளுண்டு வனாந்தரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
அதின் கொப்புகள் உலரும்போது ஒடிந்துபோம்; ஸ்திரீகள் வந்து அவைகளைக் கொளுத்திவிடுவார்கள்; அது உணர்வுள்ள ஜனமல்ல; ஆகையால் அதை உண்டாக்கினவர் அதற்கு இரங்காமலும், அதை உருவாக்கினவர் அதற்குக் கிருபைசெய்யாமலும் இருப்பார்.
அக்காலத்திலே, கர்த்தர் ஆற்றங்கரையின் விளைவுதொடங்கி எகிப்தின் நதிமட்டும் போரடிப்பார்; இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் ஒவ்வொருவராய்ச் சேர்க்கப்படுவீர்கள்.
அக்காலத்திலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அப்பொழுது அசீரியாதேசத்திலே சிதறடிக்கப்பட்டவர்களும், எகிப்துதேசத்திலே துரத்திவிடப்பட்டவர்களும் வந்து, எருசலேமிலுள்ள பரிசுத்த பர்வதத்திலே கர்த்தரைப் பணிந்துகொள்ளுவார்கள்.
எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடத்துக்கு ஐயோ, மதுபானத்தால் மயக்கமடைந்தவர்களின் செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!
இதோ, திராணியும் வல்லமையுமுடைய ஒருவன் ஆண்டவரிடத்தில் இருக்கிறான்; அவன் கல்மழைப்போலவும், சங்காரப் புசல்போலவும், புரண்டுவருகிற பெருவெள்ளம்போலவும் வந்து, கையினாலே அதைத் தரையில் தள்ளிவிடுவான்.
எப்பிராயீமுடைய வெறியரின் பெருமையான கிரீடம் காலால் மிதித்துப்போடப்படும்.
செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவகாலத்துக்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.
அக்காலத்திலே சேனைகளின் கர்த்தர் தமது ஜனத்தில் மீதியானவர்களுக்கு மகிமையான கிரீடமாகவும், அலங்காரமான முடியாகவும்,
நியாயம் விசாரிக்க உட்காருகிறவனுக்கு நியாயத்தின் ஆவியாகவும், யுத்தத்தை அதின் வாசல்மட்டும் திருப்புகிறவர்களின் பராக்கிரமமாகவும் இருப்பார்.
ஆனாலும் இவர்களும் திராட்சரசத்தால் மயங்கி, மதுபானத்தால் வழிதப்பிப்போகிறார்கள்; ஆசாரியனும் தீர்க்கதரிசியும் மதுபானத்தால் மதிமயங்கி, திராட்சரசத்தால் விழுங்கப்பட்டு, சாராயத்தினால் வழிதப்பி, தீர்க்கதரிசனத்தில் மோசம்போய், நியாயந்தீர்க்கிறதில் இடறுகிறார்கள்.
போஜனபீடங்களெல்லாம் வாந்தியினாலும் அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கிறது; சுத்தமான இடமில்லை.