திராட்சக்குலைகளை அறுக்கிறவனைப்போல உன் கையைத் திரும்பக் கூடைகளின்மேல் போடென்று சொல்லி, அவர்கள் இஸ்ரவேலில் மீதியாயிருந்த கனியைத் திராட்சச்செடியின் கனியைப்போல நன்றாய்ப் பொறுக்கிக்கொண்டுபோவார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்கள் கேட்கும்படி நான் யாரோடே பேசி எச்சரிப்பேன்? அவர்களுடைய செவி விருத்தசேதனமில்லாதது; அவர்கள் கேட்கமாட்டார்கள்; கர்த்தருடைய வசனம் அவர்களுக்கு நிந்தையாயிருக்கிறது; அதின்மேல் அவர்களுக்கு விருப்பமில்லை.
ஆகையால் நான் கர்த்தருடைய உக்கிரத்தால் நிறைந்திருக்கிறேன்; அதை அடக்கி இளைத்துப்போனேன்; வீதிகளிலுள்ள பிள்ளைகளின்மேலும், வாலிபருடைய கூட்டத்தின்மேலும் ஏகமாய் அதை ஊற்றிவிடுவேன்; புருஷரும், ஸ்திரீகளும், கிழவரும், பூரணவயதுள்ளவர்களுங்கூடப் பிடிக்கப்படுவார்கள்.
அவர்களுடைய வீடுகளும், அவர்களுடைய காணிபூமிகளும், அவர்களுடைய மனைவிகளோடே ஏகமாய் அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிகளுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்களில், சிறியோர்முதல் பெரியோர்மட்டும், ஒவ்வொருவரும் பொருளாசைக்காரர்; இதுவுமல்லாமல் தீர்க்கதரிசிகள்முதல் ஆசாரியர்கள்மட்டும் ஒவ்வொருவரும் பொய்யர்.
சமாதானமில்லாதிருந்தும்: சமாதானம் சமாதானம் என்று சொல்லி, என் ஜனத்தின் காயங்களை மேற்பூச்சாய்க் குணமாக்குகிறார்கள்.
அவர்கள் அருவருப்பானதைச் செய்ததினிமித்தம் வெட்கப்படுகிறார்களோ? பரிச்சேதம் வெட்கப்படார்கள், நாணவும் அறியார்கள்; ஆதலால் விழுகிறவர்களுக்குள்ளே விழுவார்கள்; நான் அவர்களை விசாரிக்குங் காலத்தில் இடறுண்டுபோவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ: நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.
நான் உங்கள்மேல் காவலாளரையும் வைத்து, எக்காள சத்தத்துக்குச் செவிகொடுங்கள் என்றும் சொன்னேன்; அவர்களோ: நாங்கள் கேட்கமாட்டோம் என்கிறார்கள்.
ஆகையால் ஜாதிகளே, கேளுங்கள்; சபையே, அவர்களுக்குள் நடக்கிறதை அறிந்துகொள்.
பூமியே, கேள்; இந்த ஜனங்கள் என் வார்த்தைகளைக் கேளாமலிருந்து, என் நியாயப்பிரமாணத்துக்குச் செவிகொடாமல் அதை வெறுத்துவிடுகிறார்கள்; அவர்கள்மேல் நான் அவர்கள் நினைவுகளின் பலனாகிய தீங்கை வரப்பண்ணுவேன்.
சேபாவிலிருந்து வருகிற தூபவர்க்கமும், தூரதேசத்தினுடைய சுகந்தப்பட்டையும் எனக்கு என்னத்துக்கு? உங்கள் சர்வாங்கதகனங்கள் எனக்கு விருப்பமல்ல; உங்கள் பலிகள் எனக்கு இன்பமாயிராது.
ஆகையால் இதோ, நான் இந்த ஜனத்துக்கு இடறல்களை வைப்பேன்; அவைகள்மேல் பிதாக்களும், பிள்ளைகளும், குடியானவனும், அவனுக்கடுத்தவனும், ஏகமாய் இடறுண்டு அழிவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, வடதேசத்திலிருந்து ஒரு ஜனம் வந்து, பூமியின் கடையெல்லைகளிலிருந்து ஒரு பெரிய ஜாதி எழும்பும்.
அவர்கள் வில்லும் வேலும் பிடித்து வருவார்கள்; அவர்கள் கொடியர், இரக்கம் அறியாதவர்கள்; அவர்கள் சத்தம் சமுத்திர இரைச்சலுக்குச் சமானமாயிருக்கும்; சீயோன் குமாரத்தியே, அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தசன்னத்தராய்க் குதிரைகளின்மேலேறி அணியணியாக வருவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
அவர்கள் வருகிற செய்தியைக் கேட்டோம்; நம்முடைய கைகள் தளர்ந்தது; இடுக்கணும், கர்ப்பவதிக்கு உண்டாகும் வேதனைக்கொப்பான வேதனையும் நம்மைப் பிடித்தது.
வயல்வெளியிலே புறப்படாதிருங்கள்; வழியிலும் நடவாதிருங்கள்; சுற்றிலும் சத்துருவின் பட்டயமும் பயங்கரமுமுண்டு.
என் ஜனமாகிய குமாரத்தியே, நீ இரட்டைக் கட்டிக்கொண்டு, சாம்பலிலே புரண்டு, ஒரே புத்திரனுக்காகத் துக்கிக்கிறதுபோல மனங்கசந்து புலம்பு; பாழாக்குகிறவன் சடிதியாய் நம்மேல் வருவான்.
நீ என் ஜனத்தின் வழியை அறிந்துகொள்ளவும் சோதித்துப்பார்க்கவும் நான் உன்னை அவர்களுக்குள்ளே துருகமாகவும், அரணாகவும் வைத்தேன்.
அவர்களெல்லாரும் முரட்டாட்டமான அகங்காரிகளும், தூற்றித்திரிகிறவர்களுமாயிருக்கிறார்கள்; அவர்கள் வெண்கலமும் இரும்புமானவர்கள்; அவர்களெல்லாரும் கெட்டவர்கள்.
துருத்தி வெந்தது; ஈயம் நெருப்பினால் அழிந்தது; புடமிடுகிறவனுடைய பிரயாசம் விருதாவாய்ப்போயிற்று; பொல்லாப்புகள் அற்றுப்போகவில்லை.
அவர்கள் தள்ளுபடியான வெள்ளி என்னப்படுவார்கள்; கர்த்தர் அவர்களைத் தள்ளிவிட்டார்.
கர்த்தரால் எரேமியாவுக்கு உண்டான வசனம்:
நீ கர்த்தருடைய ஆலயத்தின் வாசலிலே நின்று, அங்கே கூறிச் சொல்லவேண்டிய வசனம் என்னவென்றால், கர்த்தரைப் பணிந்துகொள்ள இந்த வாசல்களுக்குள்ளே பிரவேசிக்கிற யூத ஜனங்களாகிய நீங்களெல்லாரும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.
இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்: உங்கள் வழிகளையும் உங்கள் கிரியைகளையும் சீர்ப்படுத்துங்கள், அப்பொழுது உங்களை இந்த ஸ்தலத்திலே குடியிருக்கப்பண்ணுவேன்.