கடற்கரை மணலைப்பார்க்கிலும் அதிக விதவைகள் அவர்களில் உண்டாயிருப்பார்கள்; பட்டப்பகலிலே பாழாக்குகிறவனைத் தாயின்மேலும் பிள்ளைகளின்மேலும் வரப்பண்ணுவேன்; அவர்கள்மேல் பட்டணத்தின் கலகத்தையும், பயங்கரங்களையும் விழப்பண்ணுவேன்.
ஏழு பிள்ளைகளைப் பெற்றவள் களைத்துப்போகிறாள்; அவள் தன் பிராணனை விட்டுவிட்டாள்; இன்னும் பகலாயிருக்கையில் அவளுடைய சூரியன் அஸ்தமித்தது; வெட்கமும் இலச்சையும் அடைந்தாள்; அவர்களில் மீதியாகிறவர்களையோ அவர்களுடைய சத்துருக்களுக்கு முன்பாகப் பட்டயத்துக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
என் தாயே, தேசத்துக்கெல்லாம் வழக்குக்கும் வாதுக்கும் உள்ளானவனாயிருக்கும்படி என்னை நீ பெற்றாயே; ஐயோ! நான் அவர்களுக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை, அவர்கள் எனக்கு வட்டிக்குக் கொடுத்ததுமில்லை; ஆனாலும், எல்லாரும் என்னைச் சபிக்கிறார்கள்.
உன்னில் மீதியாயிருப்பவர்கள் நன்மையடைவார்கள்; தீங்கின் காலத்திலும் நெருக்கத்தின் காலத்திலும் உனக்காக நான் சத்துருவுக்கு எதிர்ப்பட்டு, உனக்குச் சகாயஞ்செய்வேன் என்று மெய்யாகவே சொல்லுகிறேன்.
வடக்கேயிருந்து வரும் இரும்பையும் வெண்கலத்தையும் இரும்பு நொறுக்குமோ?
உன்னுடைய எல்லாப் பாவங்களினிமித்தமும், உன்னுடைய எல்லா எல்லைகளிலும், நான் உன் ஆஸ்தியையும், உன் பொக்கிஷங்களையும் கிரயமில்லாமல் சூறையிடுவிப்பேன்.
நீ அறியாத தேசத்தில் உன் சத்துருக்கள் வசமாக நான் உன்னைத் தாண்டிப்போகப் பண்ணுவேன்; உங்கள்மேல் எரியப்போகிற அக்கினி என் கோபத்திலே மூண்டது என்று கர்த்தர் சொன்னார்.
கர்த்தாவே, நீர் அதை அறிவீர்; தேவரீர் என்னை நினைத்து, என்னை விசாரித்து, என்னைத் துன்பப்படுத்துகிறவர்களுக்கு என்னிமித்தம் நீதியைச் சரிக்கட்டும்; உம்முடைய நீடியபொறுமையினிமித்தம் என்னை வாரிக்கொள்ளாதிரும்; நான் உம்முடைய நிமித்தம் நிந்தையைச் சகிக்கிறேன் என்று அறியும்.
உம்முடைய வார்த்தைகள் கிடைத்தவுடனே அவைகளை உட்கொண்டேன்; உம்முடைய வார்த்தைகள் எனக்குச் சந்தோஷமும், என் இருதயத்துக்கு மகிழ்ச்சியுமாயிருந்தது; சேனைகளின் தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய நாமம் எனக்குத் தரிக்கப்பட்டிருக்கிறது.
நான் பரியாசக்காரருடைய கூட்டத்தில் உட்கார்ந்து களிகூர்ந்ததில்லை; உமது கரத்தினிமித்தம் தனித்து உட்கார்ந்தேன்; சலிப்பினால் என்னை நிரப்பினீர்.
என் நோவு நித்தியகாலமாகவும், என் காயம் ஆறாத கொடிய புண்ணாகவும் இருப்பானேன்? நீர் எனக்கு நம்பப்படாத ஊற்றைப்போலவும், வற்றிப்போகிற ஜலத்தைப்போலவும் இருப்பீரோ?
இதினிமித்தம் நீ திரும்பினால் நான் உன்னைத் திரும்பச் சீர்ப்படுத்துவேன்; என் முகத்துக்கு முன்பாக நிலைத்துமிருப்பாய்; நீ தீழ்ப்பானதினின்று விலையேறப்பெற்றதைப் பிரித்தெடுத்தால், என் வாய்போலிருப்பாய்; நீ அவர்களிடத்தில் திரும்பாமல், அவர்கள் உன்னிடத்தில் திரும்புவார்களாக என்று கர்த்தர் சொல்லுகிறார்.
உன்னை இந்த ஜனத்துக்கு எதிரே அரணான வெண்கல அலங்கமாக்குவேன்; அவர்கள் உனக்கு விரோதமாக யுத்தம்பண்ணுவார்கள், ஆனாலும் உன்னை மேற்கொள்ளமாட்டார்கள்; உன்னை இரட்சிப்பதற்காகவும், உன்னைத் தப்புவிப்பதற்காகவும், நான் உன்னுடனே இருக்கிறேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நான் உன்னைப் பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவித்து, உன்னைப் பலவந்தரின் கைக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன் என்கிறார்.
கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
நீ பெண்ணை விவாகம்பண்ணவேண்டாம்; இவ்விடத்தில் உனக்குக் குமாரரும் குமாரத்திகளும் இருக்கவேண்டாம் என்றார்.
இவ்விடத்திலே பிறக்கிற குமாரரையும் குமாரத்திகளையும், இந்த தேசத்தில் அவர்களைப் பெற்ற தாய்களையும் அவர்களைப் பெற்ற பிதாக்களையுங்குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்,
மகா கொடிய வியாதிகளால் சாவார்கள், அவர்களுக்காகப் புலம்புவாரும், அவர்களை அடக்கம்பண்ணுவாருமில்லை, நிலத்தின்மேல் எருவாவார்கள்; பட்டயத்தாலும் பஞ்சத்தாலும் மடிந்துபோவார்கள்; அவர்களுடைய பிரேதம் ஆகாசத்துப்பறவைகளுக்கும் பூமியின் மிருகங்களுக்கும் இரையாகும்.
ஆகையால், நீ துக்கவீட்டில் பிரவேசியாமலும், புலம்பப்போகாமலும், அவர்களுக்குப் பரிதபிக்காமலும் இருப்பாயாக என்று கர்த்தர் சொல்லுகிறார்; என் சமாதானத்தையும், கிருபையையும், இரக்கத்தையும், இந்த ஜனத்தைவிட்டு எடுத்துப்போட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இந்த தேசத்திலே பெரியோரும் சிறியோரும் சாவார்கள்; அவர்களை அடக்கம்பண்ணுவாரில்லை; அவர்களுக்காகப் புலம்புவாருமில்லை; அவர்கள்நிமித்தம் கீறிக்கொண்டு, மொட்டையடித்துக்கொள்வாருமில்லை.
செத்தவர்கள் நிமித்தம் உண்டான துக்கத்தை ஆற்ற அவர்களுக்கு அப்பம் பங்கிடப்படுவதுமில்லை; ஒருவனுடைய தகப்பனுக்காவது, ஒருவனுடைய தாய்க்காவது துக்கப்படுகிறவர்களுக்குத் தேற்றரவின் பாத்திரத்தைக் குடிக்கக்கொடுப்பாருமில்லை.
நீ அவர்களோடே புசித்துக்குடிக்க உட்காரும்படி விருந்துவீட்டிலும் பிரவேசியாயாக.
ஏனெனில், இதோ, இவ்விடத்திலே நான் உங்கள் கண்களுக்கு முன்பாகவும், உங்கள் நாட்களிலுமே, சந்தோஷத்தின் சத்தத்தையும், மகிழ்ச்சியின் சத்தத்தையும், மணவாளனின் சத்தத்தையும், மணவாட்டியின் சத்தத்தையும் ஓயப்பண்ணுவேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
நீ இந்த வார்த்தைகளையெல்லாம் இந்த ஜனத்துக்கு அறிவிக்கும்போது, அவர்கள் உன்னை நோக்கி: கர்த்தர் எங்கள்மேல் இத்தனை பெரிய தீங்கைக் கூறுவானேன் என்றும், நாங்கள் செய்த அக்கிரமம் என்ன? நாங்கள் எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகச்செய்த எங்கள் பாவம் என்ன? என்றும் கேட்பார்களானால்,
நீ அவர்களை நோக்கி: உங்கள் பிதாக்கள் என்னைவிட்டு அந்நியதேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்துகொண்டு, என் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ளாமல் என்னை விட்டுவிட்டார்களே.