இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?
தனக்கு இரை அகப்படாமலிருக்கக் காட்டிலே சிங்கம் கெர்ச்சிக்குமோ? இரைபிடியாமல் இருக்கும்போது பாலசிங்கம் தன் கெபியிலிருந்து சத்தமிடுமோ?
குருவிக்குத் தரையிலே சுருக்குப் போடப்படாதிருந்தால், அது கண்ணியில் அகப்படுமோ? ஒன்றும் படாதிருக்கையில், கண்ணி தரையிலிருந்து எடுக்கப்படுமோ?
ஊரில் எக்காளம் ஊதினால், ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?
கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.
சிங்கம் கெர்ச்சிக்கிறது, யார் பயப்படாதிருப்பான்? கர்த்தராகிய ஆண்டவர் பேசுகிறார், யார் தீர்க்கதரிசனம் சொல்லாதிருப்பான்?
நீங்கள் சமாரியாவின் பர்வதங்களில் வந்து கூடி, அதின் நடுவில் நடக்கிற பெரிய கலகங்களையும் அதற்குள் செய்யப்படுகிற இடுக்கண்களையும் பாருங்கள் என்று அஸ்தோத்தின் அரமனைகள்மேலும், எகிப்துதேசத்தின் அரமனைகள்மேலும் கூறுங்கள்.
அவர்கள் செம்மையானதைச் செய்ய அறியாமல், தங்கள் அரமனைகளில் கொடுமையையும் கொள்ளையையும் குவித்துக்கொள்ளுகிறார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகையால் சத்துரு வந்து, தேசத்தைச் சூழ்ந்துகொண்டு, உன் பெலத்தை உன்னிலிருந்து அற்றுப்போகப்பண்ணுவான்; அப்பொழுது உன் அரமனைகள் கொள்ளையிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
மேலும்: ஒரு மேய்ப்பன் இரண்டு கால்களையாவது ஒரு காதின் துண்டையாவது சிங்கத்தின் வாயிலிருந்து பிடுங்கித் தப்புவிக்குமாப்போல, சமாரியாவில் குடியிருக்கிற இஸ்ரவேல் புத்திரர் ஒரு படுக்கையின் மூலையிலிருந்தும், ஒரு மஞ்சத்தின்மேலிருந்தும் தப்புவிக்கப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
நீங்கள் கேட்டு யாக்கோபு வம்சத்தாருக்குள்ளே சாட்சியாக அறிவிக்கவேண்டியது: சேனைகளின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்,
நான் இஸ்ரவேலுடைய பாதகங்களினிமித்தம் அவனை விசாரிக்கும் நாளிலே நான் பெத்தேலின் பலிபீடங்களை விசாரிப்பேன்; பலிபீடத்தின் கொம்புகள் வெட்டுண்டு தரையிலே விழும்.
மாரிகாலத்து வீட்டையும் கோடைகாலத்து வீட்டையும் அழிப்பேன்; அப்பொழுது யானைத்தந்தத்தால் செய்யப்பட்ட வீடுகள் அழியும்; பெரிய வீடுகளுக்கும் முடிவு வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.
இதோ, கர்த்தராகிய ஆண்டவர் உங்களைத் துறடுகளாலும், உங்கள் பின்சந்ததியை மீன்பிடிக்கிற தூண்டில்களாலும் இழுத்துக்கொண்டுபோகும் நாட்கள் வருமென்று அவர் தம்முடைய பரிசுத்தத்தைக்கொண்டு ஆணையிட்டார்.
அப்பொழுது நீங்கள் ஒவ்வொருவனும் அரமனைக்குச் சுமந்துகொண்டுபோவதை எறிந்துவிட்டு, தனக்கு எதிரான திறப்புகளின் வழியாய்ப் புறப்பட்டுப்போவீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
பெத்தேலுக்குப் போய்த் துரோகம்பண்ணுங்கள், கில்காலுக்கும்போய்த் துரோகத்தைப் பெருகப்பண்ணி, காலைதோறும் உங்கள் பலிகளையும், மூன்றாம் வருஷத்திலே உங்கள் தசமபாகங்களையும் செலுத்தி,
புளித்தமாவுள்ள ஸ்தோத்திரபலியோடே தூபங்காட்டி, உற்சாக பலிகளைக் கூறித் தெரியப்படுத்துங்கள்; இஸ்ரவேல் புத்திரரே, இப்படிச் செய்வதே உங்களுக்குப் பிரியம் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ஆகையால் நான் உங்கள் பட்டணங்களில் எல்லாம் உங்கள் பல்லுகளுக்கு ஓய்வையும், உங்கள் ஸ்தலங்களில் எல்லாம் அப்பக்குறைவையும் கட்டளையிட்டேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதுவுமல்லாமல், அறுப்புக்காலம் வர இன்னும் மூன்றுமாதம் இருக்கும்போதே மழையை நான் தடுத்தேன், ஒரு பட்டணத்தின்மேல் மழைபெய்யவும் ஒரு பட்டணத்தின்மேல் மழை பெய்யாமலிருக்கவும் பண்ணினேன்; ஒரு வயலின்மேல் மழைபெய்தது, மழைபெய்யாத மற்ற வயல் காய்ந்து போயிற்று.
இரண்டு மூன்று பட்டணங்களின் மனுஷர் தண்ணீர் குடிக்க ஒரே பட்டணத்துக்குப் போய் அலைந்தும் தாகந்தீர்த்துக்கொள்ளவில்லை; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கருக்காயினாலும் விஷப்பனியினாலும் உங்களை தண்டித்தேன்; உங்கள் சோலைகளிலும் திராட்சத்தோட்டங்களிலும் அத்திமரங்களிலும் ஒலிவமரங்களிலும் மிகுதியானதைப் பச்சைப்புழு அரித்துப்போட்டது; ஆகிலும் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
எகிப்திலே உண்டானதற்கு ஒத்த கொள்ளைநோயை உங்களுக்குள் அனுப்பினேன்; உங்கள் வாலிபரைப் பட்டயத்தாலே கொன்றேன்; உங்கள் குதிரைகளை அழித்துப்போட்டேன்; உங்கள் பாளயங்களின் நாற்றத்தை உங்கள் நாசிகளிலும் ஏறப்பண்ணினேன்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
சோதோமையும் கொமோராவையும் தேவன் கவிழ்த்துப்போட்டதுபோல, உங்களைக் கவிழ்த்துப்போட்டேன்; நீங்கள் அக்கினியினின்று பறிக்கப்பட்ட கொள்ளியைப்போல இருந்தீர்கள்; ஆகிலும் நீங்கள் என்னிடத்தில் திரும்பாமற்போனீர்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆகையால் இஸ்ரவேலே, இந்தப்பிரகாரமாக உனக்குச் செய்வேன்; இஸ்ரவேலே, நான் இப்படி உனக்குச் செய்யப்போகிறபடியினால் உன் தேவனைச் சந்திக்கும்படி ஆயத்தப்படு.