அவர்கள் கர்மேலின் கொடுமுடியிலே ஒளித்துக்கொண்டாலும், அங்கே அவர்களைத் தேடிப்பிடிப்பேன்; அவர்கள் சமுத்திரத்தின் ஆழத்திலே போய் என் கண்களுக்கு மறைந்துகொண்டாலும், அங்கே அவர்களைக் கடிக்கப் பாம்புகளுக்குக் கட்டளையிடுவேன்.
அவர்கள் தங்கள் சத்துருவுக்கு முன்பாகச் சிறைப்பட்டுப்போனாலும், அங்கே அவர்களைக் கொன்றுபோடப் பட்டயத்துக்கு நான் கட்டளையிட்டு, என் கண்களை அவர்கள்மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன்.
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் தேசத்தைத் தொட, அது உருகிப்போம்; அப்பொழுது அதின் குடிகளெல்லாரும் புலம்புவார்கள்; எங்கும் நதியாய்ப் புரண்டோடி, எகிப்தினுடைய ஆற்று வெள்ளத்தைப்போல் வெள்ளமாகும்.
அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
இஸ்ரவேல் புத்திரரே, நீங்கள் எனக்கு எத்தியோப்பியரின் புத்திரரைப்போல் இருக்கிறீர்கள் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் இஸ்ரவேலை எகிப்துதேசத்திலிருந்தும், பெலிஸ்தரைக் கப்தோரிலிருந்தும், சீரியரைக் கீரிலிருந்தும் கொண்டுவரவில்லையோ?
இதோ, கர்த்தராகிய ஆண்டவரின் கண்கள் பாவமுள்ள ராஜ்யத்துக்கு விரோதமாக வைக்கப்பட்டிருக்கிறது; அதைப் பூமியின்மேல் இராதபடிக்கு அழித்துப்போடுவேன்; ஆகிலும் யாக்கோபின் வம்சத்தை முழுவதும் அழிக்கமாட்டேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை.
தீங்கு எங்களை அணுகுவதுமில்லை, எங்களுக்கு நேரிடுவதுமில்லையென்று என் ஜனத்தில் சொல்லுகிற பாவிகளெல்லாரும் பட்டயத்தினால் சாவார்கள்.
ஏதோமில் மீதியானவர்களையும், என் நாமம் விளங்கிய சகல ஜாதிகளையும் வசமாக்கிக்கொள்ளும்படிக்கு,
அந்நாளிலே விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை நான் திரும்ப எடுப்பித்து, அதின் திறப்புகளை அடைத்து, அதில் பழுதாய்ப்போனதைச் சீர்ப்படுத்தி, பூர்வநாட்களில் இருந்ததுபோல அதை ஸ்தாபிப்பேன் என்று இதைச் செய்கிற கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, உழுகிறவன் அறுக்கிறவனையும், திராட்சப்பழங்களை ஆலையாடுகிறவன் விதைக்கிறவனையும் தொடர்ந்துபிடித்து, பர்வதங்கள் திராட்சரசமாய் வடிகிறதும், மேடுகளெல்லாம் கரைகிறதுமான நாட்கள் வரும் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள்.
அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனிப் பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.
ஒபதியாவின் தரிசனம்; கர்த்தராகிய ஆண்டவர் ஏதோமைக் குறித்துச் சொல்லுகிறது என்னவென்றால்:எழும்புங்கள், அதற்கு விரோதமாக யுத்தம்பண்ண எழும்புவோம் வாருங்கள் என்று அறிவிக்க ஸ்தானாபதி ஜாதிகளிடத்தில் அனுப்பப்படும் செய்தியைக் கர்த்தர் சொல்லக்கேட்டோம்.
இதோ, நான் என்னை ஜாதிகளில் சிறுகப்பண்ணினேன்; நீ மெத்தவும் அசட்டைபண்ணப்பட்டிருக்கிறாய்.
கன்மலை வெடிப்புகளாகிய உன் உயர்ந்த ஸ்தானத்திலே குடியிருந்து, என்னைத் தரையிலே விழத்தள்ளுகிறவன் யார் என்று உன் இருதயத்தில் சொல்லுகிறவனே, உன் இருதயத்தின் அகந்தை உன்னை மோசம்போக்குகிறது.
நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,
நீ எவ்வளவாய்ச் சங்கரிப்பட்டுப்போனாய்! திருடராகிலும் இராத்திரியில் கொள்ளையடிக்கிறவர்களாகிலும் உன்னிடத்தில் வந்தால், தங்களுக்குப் போதுமானமட்டும் திருடுவார்கள் அல்லவோ? திராட்சப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுவிடுவார்கள் அல்லவோ?
ஏசாவினுடையவைகள் எவ்வளவாய்த் தேடிப்பார்க்கப்பட்டது; அவனுடைய அந்தரங்கப் பொக்கிஷங்கள் எவ்வளவாய் ஆராய்ந்தெடுத்துக்கொள்ளப்பட்டது.
உன்னோடு உடன்படிக்கை செய்த எல்லா மனுஷரும் உன்னை எல்லைமட்டும் தூரத்திவிட்டார்கள்; உன்னோடு சமாதானமாயிருந்த மனுஷர் உன்னை மோசம்போக்கி உன்னை மேற்கொண்டார்கள்; உன் அப்பத்தைச் சாப்பிட்டவர்கள் உனக்குக் கீழே கண்ணிவைத்தார்கள், அவனுக்கு உணர்வில்லை.
அந்நாளில் அல்லவோ நானே சோதோமிலுள்ள ஞானிகளையும், ஏசாவின் பர்வதத்திலுள்ள புத்திமான்களையும் அழிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேமானே, ஏசாவின் பாவதத்திலுள்ள மனுஷர்கள் அனைவரும் கொலையினால் சங்கரிக்கப்படும்படி உன் பராக்கிரமசாலிகள் கலங்குவார்கள்.
நீ உன் சகோதரனாகிய யாக்கோபுக்குச் செய்த கொடுமையினிமித்தம் வெட்கம் உன்னை மூடும்; நீ முற்றிலும் சங்கரிக்கப்பட்டுப்போவாய்.
நீ எதிர்த்துநின்ற நாளிலும், அந்நியர் அவன் சேனையைச் சிறைபிடித்துப்போன நாளிலும், மறுதேசத்தார் அவன் வாசல்களுக்குள் பிரவேசித்து எருசலேமின்பேரில் சீட்டுபட்ட காலத்தில், நீயும் அவர்களில் ஒருவனைப்போல இருந்தாய்.
உன் சகோதரன் அந்நியர்வசமான நாளாகிய அவனுடைய நாளை நீ பிரியத்தோடே பாராமலும், யூதா புத்திரருடைய அழிவின் நாளிலே அவர்கள் நிமித்தம் சந்தோஷப்படாமலும் அவர்கள் நெருக்கப்படுகிற நாளிலே நீ பெருமையாய்ப் பேசாமலும் இருக்க வேண்டியதாயிருந்தது.