மற்றும் சகலவித வேலைகளையும் யூகித்துச் செய்கிறதற்கும் வேண்டிய ஞானமும் புத்தியும் அறிவும் அவனுக்கு உண்டாக, அவனை தேவஆவியினால் நிரப்பினேன்.
மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.
ஆசரிப்புக் கூடாரத்தையும் சாட்சிப்பெட்டியையும் அதின்மேலுள்ள கிருபாசனத்தையும், கூடாரத்திலுள்ள சகல பணிமுட்டுகளையும்,
மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும்,
தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,
ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும்,
அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.
மேலும், கர்த்தர் மோசேயினிடத்தில்:
நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.
ஆகையால், இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்.
அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.
சீனாய்மலையில் அவர் மோசேயோடே பேசி முடிந்தபின், தேவனுடைய விரலினால் எழுதப்பட்ட கற்பலகைகளாகிய சாட்சியின் இரண்டு பலகைகளை அவனிடத்தில் கொடுத்தார்.
மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்துதேசத்திலிருந்து எங்களை அழைத்துக்கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.
அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.
ஜனங்கள் எல்லாரும் தங்கள் காதுகளில் இருந்த பொன்னணிகளைக் கழற்றி, ஆரோனிடத்தில் கொண்டுவந்தார்கள்.
அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.
ஆரோன் அதைப் பார்த்து, அதற்கு முன்பாக ஒரு பலிபீடத்தைக் கட்டி, நாளைக்குக் கர்த்தருக்குப் பண்டிகை என்று கூறினான்.
மறுநாள் அவர்கள் அதிகாலையில் எழுந்து, சர்வாங்க தகனபலிகளையிட்டு, சமாதானபலிகளைச் செலுத்தினார்கள்; பின்பு, ஜனங்கள் புசிக்கவும் குடிக்கவும் உட்கார்ந்து, விளையாட எழுந்தார்கள்.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக்கொண்டார்கள்.
அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.
பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: இந்த ஜனங்களைப் பார்த்தேன்; இவர்கள் வணங்காக்கழுத்துள்ள ஜனங்கள்.
ஆகையால் என் கோபம் இவர்கள்மேல் மூளவும், நான் இவர்களை அழித்துப்போடவும் நீ என்னை விட்டுவிடு; உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன் என்றார்.
மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?