இதை மோசே இஸ்ரவேல் புத்திரரோடே சொன்னான்; அப்பொழுது அவர்களுடைய பிரபுக்கள் எல்லாரும் தங்கள் பிதாக்களுடைய வம்சத்தின்படி ஒவ்வொரு பிரபுவுக்கு ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோல்களை அவனிடத்தில் கொடுத்தார்கள்; ஆரோனின் கோலும் அவர்களுடைய கோல்களுடனே இருந்தது.
அந்தக் கோல்களை மோசே சாட்சியின் கூடாரத்திலே கர்த்தருடைய சமுகத்தில் வைத்தான்.
மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடும்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப்பழங்களைக் கொடுத்தது.
அப்பொழுது மோசே கர்த்தருடைய சமுகத்திலிருந்த அந்தக் கோல்களையெல்லாம் எடுத்து, இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் காண வெளியே கொண்டுவந்தான்; அவர்கள் கண்டு, அவரவர் தங்கள் தங்கள் கோல்களை வாங்கிக்கொண்டார்கள்.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: ஆரோனின் கோல் அந்தக் கலகக்காரருக்கு விரோதமான அடையாளமாகும்பொருட்டு, அதைத் திரும்பவும் சாட்சிப்பெட்டிக்கு முன்னே கொண்டுபோய் வை; இப்படி அவர்கள் எனக்கு விரோதமாய் முறுமுறுப்பதை ஒழியப்பண்ணுவாய், அப்பொழுது அவர்கள் சாகமாட்டார்கள் என்றார்.
கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே மோசே செய்தான்.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் மோசேயை நோக்கி: இதோ, செத்து அழிந்துபோகிறோம்; நாங்கள் எல்லாரும் அழிந்துபோகிறோம்.
கர்த்தரின் வாசஸ்தலத்தின் கிட்டேவருகிற எவனும் சாகிறான்; நாங்கள் எல்லாரும் செத்துத்தான் தீருமோ என்றார்கள்.
பின்பு கர்த்தர் ஆரோனை நோக்கி: நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உன் தகப்பன் வம்சத்தாரும் பரிசுத்த ஸ்தலத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்; நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் உங்கள் ஆசாரிய ஊழியத்தைப்பற்றிய அக்கிரமத்தைச் சுமக்கவேண்டும்.
உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்.
அவர்கள் உன் காவலையும் கூடாரம் அனைத்தின் காவலையும் காக்கக்கடவர்கள்; ஆகிலும் அவர்களும் நீங்களும் சாகாதபடிக்கு, அவர்கள் பரிசுத்த ஸ்தலத்தின் பணிமுட்டுகளண்டையிலும் பலிபீடத்தண்டையிலும் சேராமல்,
உன்னோடே கூடிக்கொண்டு, கூடாரத்துக்கடுத்த எல்லாப் பணிவிடையையும் செய்ய, ஆசரிப்புக் கூடாரத்தின் காவலைக்காக்கக்கடவர்கள்; அந்நியன் ஒருவனும் உங்களிடத்தில் சேரக்கூடாது.
இஸ்ரவேல் புத்திரர்மேல் இனிக் கடுங்கோபம் வராதபடிக்கு, நீங்கள் பரிசுத்த ஸ்தலத்தின் காவலையும் பலிபீடத்தின் காவலையும் காக்கக்கடவீர்கள்.
ஆசரிப்புக் கூடாரத்தின் பணிவிடையைச் செய்ய, கர்த்தருக்குக் கொடுக்கப்பட்ட உங்கள் சகோதரராகிய லேவியரை நான் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உங்களுக்கு தத்தமாகக் கொடுத்தேன்.
ஆகையால் நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் பலிபீடத்துக்கும் திரைக்கு உட்புறத்துக்கும் அடுத்த எல்லாவற்றையும் செய்யும்பொருட்டு, உங்கள் ஆசாரிய ஊழியத்தைக் காத்துச் சேவிக்கக்கடவீர்கள்; உங்கள் ஆசாரிய ஊழியத்தை உங்களுக்கு தத்தமாக அருளினேன்; அதைச் செய்யும்படி சேருகிற அந்நியன் கொலைசெய்யப்படக்கடவன் என்றார்.
பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப்படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக்கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.
மகா பரிசுத்தமானவைகளிலே, அக்கினிக்கு உட்படுத்தப்படாமல் உன்னுடையதாயிருப்பது எவையெனில், அவர்கள் எனக்குப் படைக்கும் எல்லாப் படைப்பும், எல்லாப் போஜனபலியும், எல்லாப் பாவநிவாரணபலியும், எல்லாக் குற்றநிவாரணபலியும், உனக்கும் உன் குமாரருக்கும் பரிசுத்தமாயிருக்கும்.
பரிசுத்த ஸ்தலத்திலே அவைகளைப் புசிக்கவேண்டும்; ஆண்மக்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்; அவைகள் உனக்குப் பரிசுத்தமாயிருப்பதாக.
இஸ்ரவேல் புத்திரர் ஏறெடுத்துப்படைக்கிறதும் அசைவாட்டுகிறதுமான அவர்களுடைய எல்லாக் காணிக்கைகளின் படைப்பும் உன்னுடையவைகளாயிருக்கும். அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் உன் குமாரத்திகளுக்கும் நித்திய நியமமாகக் கொடுத்தேன்; உன் வீட்டிலே சுத்தமானவர்கள் எல்லாரும் அவைகளைப் புசிக்கலாம்.
அவர்கள் கர்த்தருக்குக் கொடுக்கும் அவர்களுடைய முதற்பலன்களாகிய உச்சிதமான எண்ணெயையும், உச்சிதமான திராட்சரசத்தையும், தானியத்தையும் உனக்கு உரியதாகக் கொடுத்தேன்.
தங்கள் தேசத்தில் முதற்பழுத்த பலனில் அவர்கள் கர்த்தருக்குக் கொண்டு வருவதெல்லாம் உனக்கு உரியதாகும்; உன் வீட்டிலே சுத்தமாயிருப்பவர்கள் யாவரும் அவைகளைப் புசிக்கலாம்.
இஸ்ரவேலிலே சாபத்தீடாக நேர்ந்துகொள்ளப்பட்டதெல்லாம் உனக்கு உரியதாயிருக்கும்.
மனிதரிலும் மிருகங்களிலும் அவர்கள் கர்த்தருக்குச் செலுத்தும் சமஸ்த பிராணிகளுக்குள்ளே கர்ப்பந்திறந்து பிறக்கும் யாவும் உனக்கு உரியதாயிருக்கும்; ஆனாலும் மனிதரின் முதற்பேற்றை அகத்தியமாய் மீட்கவேண்டும்; தீட்டான மிருகஜீவனின் தலையீற்றையும் மீட்கவேண்டும்.
மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன் மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா.
மாட்டின் தலையீற்றும், செம்மறியாட்டின் தலையீற்றும், வெள்ளாட்டின் தலையீற்றுமோ மீட்கப்படவேண்டாம்; அவைகள் பரிசுத்தமானவைகள்; அவைகளின் இரத்தத்தைப் பலிபீடத்தின்மேல் தெளித்து, அவைகளின் கொழுப்பைக் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனமாகத் தகனிக்கவேண்டும்.