யோர்தானுக்கு இக்கரையிலே எங்கள் சுதந்தரத்தின் காணியாட்சி எங்களுக்கு உரியதாகும்படி நாங்கள் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தராய்க் கானான்தேசத்திற்குப் போவோம் என்றார்கள்.
அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் குமாரனாகிய மனாசேயின் பாதிக் கோத்திரத்தாருக்கும், எமோரியருடைய ராஜாவாகிய சீகோனின் ராஜ்யத்தையும், பாசானுடைய ராஜாவாகிய ஓகின் ராஜ்யத்தையும், அவைகளைச் சேர்ந்த தேசங்களையும் அவைகளின் எல்லையைச் சுற்றிலுமுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்.
பின்பு காத் சந்ததியார் தீபோன், அதரோத் ஆரோவேர்,
ஆத்ரோத், சோபான், யாசேர், யொகிபேயா,
பெத்நிம்ரா, பெத்தாரன் என்னும் அரணான பட்டணங்களையும் ஆட்டுத்தொழுவங்களையும் கட்டினார்கள்.
ரூபன் சந்ததியார் எஸ்போன், எலெயாலெ, கீரியத்தாயீம்,
பேர்கள் மாற்றப்பட்ட நேபோ, பாகால்மெயோன், சீப்மா என்பவைகளைக் கட்டி, தாங்கள் கட்டின பட்டணங்களுக்கு வேறே பேர்களைக் கொடுத்தார்கள்.
மனாசேயின் குமாரனாகிய மாகீரின் புத்திரர் கீலேயாத்திற்குப் போய், அதைக் கட்டிக்கொண்டு, அதிலிருந்த எமோரியரைத் துரத்திவிட்டார்கள்.
அப்பொழுது மோசே கீலேயாத்தை மனாசேயின் குமாரனாகிய மாகீருக்குக் கொடுத்தான்; அவர்கள் அதிலே குடியேறினார்கள்.
மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.
நோபாக் போய், கேனாத்தையும் அதின் கிராமங்களையும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே நோபாக் என்று பேரிட்டான்.
மோசே ஆரோன் என்பவர்களுடைய கையின்கீழ்த் தங்கள் தங்கள் சேனைகளின்படியே எகிப்துதேசத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் புத்திரருடைய பிரயாணங்களின் விபரம்:
மோசே தனக்குக் கர்த்தர் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்டபிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன:
முதலாம் மாதத்தின் பதினைந்தாம் தேதியிலே அவர்கள் ராமசேசை விட்டுப் புறப்பட்டார்கள்; பஸ்காவுக்கு மறுநாளிலே, எகிப்தியர் எல்லாரும் பார்க்க, இஸ்ரவேல் புத்திரர் பெலத்தகையுடன் புறப்பட்டார்கள்.
அப்பொழுது எகிப்தியர் கர்த்தர் தங்களுக்குள்ளே சங்கரித்த தலைச்சன்பிள்ளைகளையெல்லாம் அடக்கம்பண்ணினார்கள்; அவர்கள் தேவர்களின்பேரிலும் கர்த்தர் நீதிசெலுத்தினார்.
பின்பு இஸ்ரவேல் புத்திரர் ராமசேசிலிருந்து புறப்பட்டுப்போய், சுக்கோத்திலே பாளயமிறங்கினார்கள்.
சுக்கோத்திலிருந்து புறப்பட்டுப்போய், வனாந்தரத்தின் எல்லையிலிருக்கிற ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.
ஏத்தாமிலிருந்து புறப்பட்டுப்போய், பாகால்செபோனுக்கு எதிராக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடிக்குத் திரும்பி, மிக்தோலுக்கு முன்பாகப் பாளயமிறங்கினார்கள்.
ஈரோத்தை விட்டுப் புறப்பட்டு, சமுத்திரத்தை நடுவாகக் கடந்து வனாந்தரத்திற்குப்போய், ஏத்தாம் வனாந்தரத்திலே மூன்றுநாள் பிரயாணம்பண்ணி, மாராவிலே பாளயமிறங்கினார்கள்.
மாராவிலிருந்து புறப்பட்டு, ஏலிமுக்குப் போனார்கள்; ஏலிமிலே பன்னிரண்டு நீரூற்றுகளும் எழுபது பேரீச்சமரங்களும் இருந்தது; அங்கே பாளயமிறங்கினார்கள்.
ஏலிமிலிருந்து புறப்பட்டு, சிவந்த சமுத்திரத்தின் அருகே பாளயமிறங்கினார்கள்.
சிவந்த சமுத்திரத்தை விட்டுப் புறப்பட்டுப்போய், சீன்வனாந்தரத்திலே பாளயமிறங்கினார்கள்.
சீன்வனாந்தரத்திலிருந்து புறப்பட்டுப்போய், தொப்காவிலே பாளயமிறங்கினார்கள்.
தொப்காவிலிருந்து புறப்பட்டுப்போய், ஆலூசிலே பாளயமிறங்கினார்கள்.
ஆலூசிலிருந்து புறப்பட்டுப்போய், ரெவிதீமிலே பாளயமிறங்கினார்கள்; அங்கே ஜனங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் இல்லாதிருந்தது.