விடியுங்காலத்திற்கு முன்னே அந்த ஸ்திரீ வந்து, வெளிச்சமாகுமட்டும் அங்கே தன் எஜமான் இருந்த வீட்டு வாசற்படியிலே விழுந்துகிடந்தாள்.
அவள் எஜமான் காலமே எழுந்திருந்து வீட்டின் கதவைத் திறந்து, தன் வழியே போகப் புறப்படுகிறபோது, இதோ, அவன் மறுமனையாட்டியாகிய ஸ்திரீ வீட்டுவாசலுக்கு முன்பாகத் தன் கைகளை வாசற்படியின்மேல் வைத்தவளாய்க் கிடந்தாள்.
எழுந்திரு போவோம் என்று அவன் அவளோடே சொன்னதற்குப் பிரதியுத்தரம் பிறக்கவில்லை. அப்பொழுது அந்த மனுஷன் அவளைக் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு, பிரயாணப்பட்டு, தன் இடத்திற்குப் போனான்.
அவன் தன் வீட்டுக்கு வந்தபோது, ஒரு கத்தியை எடுத்து, தன் மறுமனையாட்டியைப் பிடித்து, அவளை அவளுடைய எலும்புகளோடுங்கூடப் பன்னிரண்டு துண்டமாக்கி, இஸ்ரவேலின் எல்லைகளுக்கெல்லாம் அனுப்பினான்.
அப்பொழுது அதைக் கண்டவர்களெல்லாரும், இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்ட நாள் முதற்கொண்டு இந்நாள்வரைக்கும் இதைப்போலொத்தகாரியம் செய்யப்படவும் இல்லை, காணப்படவும் இல்லை; இந்தக் காரியத்தை யோசித்து ஆலோசனைபண்ணி செய்யவேண்டியது இன்னதென்று சொல்லுங்கள் என்றார்கள்.
அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.
சகல ஜனங்களின் அதிபதிகளும், இஸ்ரவேலின் சகல கோத்திரத்தாரும் தேவனுடைய ஜனமாகிய சபையாகக் கூடிநின்றார்கள்; அவர்கள் பட்டயம் உருவுகிற நாலு லட்சம் காலாட்கள்.
இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்.
அப்பொழுது கொலைசெய்யப்பட்ட ஸ்திரீயின் புருஷனாகிய லேவியன் மாறுத்தரமாக: நானும் என் மறுமனையாட்டியும் பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவிலே இராத்தங்க வந்தோம்.
அப்பொழுது கிபியாபட்டணத்தார் எனக்கு விரோதமாய் எழும்பி, என்னைக் கொலைசெய்ய நினைத்து, நான் இருந்த வீட்டை இராத்திரியிலே வளைந்து கொண்டு, என் மறுமனையாட்டியை அவமானப்படுத்தினார்கள்; அதினாலே அவள் செத்துப்போனாள்.
ஆகையால் இஸ்ரவேலிலே அவர்கள் இப்படிப்பட்ட முறைகேட்டையும் மதிகேட்டையும் செய்தபடியினால், நான் என் மறுமனையாட்டியைப் பிடித்துத் துண்டித்து, இஸ்ரவேலின் சுதந்தரமான சகல நாடுகளுக்கும் அனுப்பினேன்.
நீங்கள் எல்லாரும் இஸ்ரவேல் புத்திரராமே, இங்கே ஆலோசித்துத் தீர்மானம்பண்ணுங்கள் என்றான்.
அப்பொழுது எல்லா ஜனங்களும் ஏகமாய் எழும்பி: நம்மில் ஒருவரும் தன் கூடாரத்திற்குப் போகவும்படாது, ஒருவனும் தன் வீட்டிற்குத் திரும்பவும்படாது.
இப்பொழுது கிபியாவுக்குச் செய்யவேண்டியது என்னவென்றால்: சீட்டுப்போட்டு அதற்கு விரோதமாகப் போவோம்.
பென்யமீன் கோத்திரமான கிபியாபட்டணத்தார் இஸ்ரவேலிலே செய்த எல்லா மதிகேட்டுக்கும் தக்கதாக ஜனங்கள் வந்து செய்யும்படிக்கு, நாம் தானியதவசங்களைச் சம்பாதிக்கிறதற்கு, இஸ்ரவேல் கோத்திரங்களிலெல்லாம் நூறுபேரில் பத்துப்பேரையும், ஆயிரம்பேரில் நூறுபேரையும், பதினாயிரம்பேரில் ஆயிரம்பேரையும், தெரிந்தெடுப்போம் என்றார்கள்.
இஸ்ரவேலரெல்லாரும் ஒன்றுபோல ஏகோபித்துப் பட்டணத்திற்கு முன்பாகக் கூட்டங்கூடி,
அங்கே இருந்த இஸ்ரவேலின் கோத்திரத்தார் பென்யமீன் கோத்திரமெங்கும் ஆட்களை அனுப்பி: உங்களுக்குள்ளே நடந்த இந்த அக்கிரமம் என்ன?
இப்பொழுது கிபியாவில் இருக்கிற பேலியாளின் மக்களாகிய அந்த மனுஷரை நாங்கள் கொன்று, பொல்லாப்பை இஸ்ரவேலை விட்டு விலக்கும்படிக்கு, அவர்களை ஒப்புக்கொடுங்கள் என்று சொல்லச்சொன்னார்கள்; பென்யமீன் புத்திரர் இஸ்ரவேல் புத்திரராகிய தங்கள் சகோதரரின் சொல்லைக் கேட்க மனமில்லாமல்,
இஸ்ரவேல் புத்திரரோடு யுத்தம்பண்ணப் புறப்படும்படிக்கு, பட்டணங்களிலிருந்து கிபியாவுக்கு வந்து கூடினார்கள்.
கிபியாவின் குடிகளிலே தெரிந்து கொள்ளப்பட்ட எழுநூறுபேரையல்லாமல் அந்நாளில் பட்டணங்களிலிருந்து வந்து கூடின பட்டயம் உருவுகிற மனுஷரின் இலக்கம் இருபத்தாறாயிரம்பேர் என்று தொகையிடப்பட்டது.
அந்த ஜனங்களெல்லாருக்குள்ளும் தெரிந்துகொள்ளப்பட்ட இடதுகை வாக்கான எழுநூறுபேர் இருந்தார்கள்; அவர்கள் அனைவரும் ஒரு மயிரிழையும் தப்பாதபடிக்குக் கவண்கல் எறிவார்கள்.
பென்யமீன் கோத்திரத்தையல்லாமல் இஸ்ரவேலிலே பட்டயம் உருவுகிற மனுஷர் நாலு லட்சம்பேர் என்று தொகையிடப்பட்டது; இவர்களெல்லாரும் யுத்தவீரராயிருந்தார்கள்.
இஸ்ரவேல் புத்திரரான அவர்கள் எழும்பி, தேவனுடைய வீட்டிற்குப் போய்: எங்களில் யார் முந்திப் போய் பென்யமீன் புத்திரரோடு யுத்தம்பண்ணவேண்டும் என்று தேவனிடத்தில் விசாரித்தார்கள்; அதற்குக் கர்த்தர்: யூதா முந்திப் போகவேண்டும் என்றார்.
அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் காலமே எழுந்து புறப்பட்டு, கிபியாவுக்கு எதிராகப் பாளயமிறங்கினார்கள்.
பின்பு இஸ்ரவேல் மனுஷர் பென்யமீனோடு யுத்தம்பண்ணப் புறப்பட்டு, கிபியாவிலே அவர்களுக்கு எதிராகப் போர்செய்ய அணிவகுத்து நின்றார்கள்.