அப்பொழுது சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனங்களை நோக்கி: நம்மிடத்திலிருந்து போனவர்கள் யார் என்று இலக்கம்பாருங்கள் என்றான்; அவர்கள் இலக்கம் பார்க்கிறபோது, இதோ, யோனத்தானும் அவன் ஆயுததாரியும் அங்கே இல்லை என்று கண்டார்கள்.
அப்பொழுது சவுல் அகீயாவை நோக்கி: தேவனுடைய பெட்டியைக் கொண்டுவா என்றான்; தேவனுடைய பெட்டி அந்நாட்களில் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் இருந்தது.
இப்படிச் சவுல் ஆசாரியனோடே பேசுகையில், பெலிஸ்தரின் பாளயத்தில் உண்டான கலகம் வரவர அதிகரித்தது; அப்பொழுது சவுல் ஆசாரியனைப் பார்த்து: இருக்கட்டும் என்றான்.
சவுலும் அவனோடிருந்த ஜனங்களும் கூட்டங்கூடிப் போர்க்களத்திற்குப் போனார்கள்; ஒருவர் பட்டயம் ஒருவருக்கு விரோதமாயிருந்தபடியால் மகா அமளியுண்டாயிற்று.
இதற்குமுன் பெலிஸ்தருடன் கூடி அவர்களோடேகூடப் பாளயத்திலே திரிந்து வந்த எபிரெயரும், சவுலோடும் யோனத்தானோடும் இருக்கிற இஸ்ரவேலரோடே கூடிக்கொண்டார்கள்.
எப்பிராயீம் மலைகளில் ஒளித்துக்கொண்டிருந்த சகல இஸ்ரவேலரும் பெலிஸ்தர் முறிந்தோடுகிறதைக் கேள்விப்பட்டபோது, யுத்தத்திலே அவர்களை நெருங்கித் தொடர்ந்தார்கள்.
இப்படிக் கர்த்தர் அன்றையதினம் இஸ்ரவேலை ரட்சித்தார்; அந்த யுத்தம் பெத்தாவேன்மட்டும் நடந்தது.
இஸ்ரவேலர் அன்றையதினம் மிகுந்த வருத்தம் அடைந்தார்கள்; நான் என் சத்துருக்கள் கையிலே பழிவாங்க வேண்டும், சாயங்காலமட்டும் பொறுக்காமல் எவன் போஜனம் செய்கிறானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று சவுல் ஜனங்களுக்கு ஆணையிட்டுச் சொல்லியிருந்தபடியால், ஜனங்களில் ஒருவரும் எவ்வளவேனும் போஜனம்பண்ணாதிருந்தார்கள்.
தேசத்து ஜனங்கள் எல்லாரும் ஒரு காட்டிலே வந்தார்கள்; அங்கே வெளியிலே தேன்கூடு கட்டியிருந்தது.
ஜனங்கள் காட்டிலே வந்தபோது, இதோ, தேன் ஒழுகிக்கொண்டிருந்தது; ஆனாலும் ஒருவனும் அதைத் தன் கையினாலே தொட்டுத் தன் வாயில் வைக்கவில்லை; ஜனங்கள் அந்த ஆணையினிமித்தம் பயப்பட்டார்கள்.
யோனத்தான் தன் தகப்பன் ஜனங்களுக்கு ஆணையிட்டதைக் கேள்விப்படவில்லை; அவன் தன் கையிலிருந்த கோலை நீட்டி, அதின் நுனியினாலே தேன்கூட்டைக் குத்தி, அதை எடுத்துத் தன் வாயிலே போட்டுக்கொண்டான்; அதினால் அவன் கண்கள் தெளிந்தது.
அப்பொழுது ஜனங்களில் ஒருவன்: இன்றைக்கு போஜனம் சாப்பிடுகிறவன் சபிக்கப்பட்டவன் என்று உம்முடைய தகப்பனார் ஜனங்களுக்கு உறுதியாய் ஆணையிட்டிருக்கிறார்; ஆகையினால் ஜனங்கள் விடாய்த்திருக்கிறார்கள் என்றான்.
அப்பொழுது யோனத்தான்: என் தகப்பன் தேசத்தின் ஜனங்களைக் கலக்கப்படுத்தினார்; நான் இந்தத் தேனிலே கொஞ்சம் ருசிபார்த்ததினாலே, என் கண்கள் தெளிந்ததைப் பாருங்கள்.
இன்றையதினம் ஜனங்கள் தங்களுக்கு அகப்பட்ட தங்கள் சத்துருக்களின் கொள்ளையிலே ஏதாகிலும் புசித்திருந்தால், எத்தனை நலமாயிருக்கும்; பெலிஸ்தருக்குள் உண்டான சங்காரம் மிகவும் அதிகமாயிருக்குமே என்றான்.
அவர்கள் அன்றையதினம் மிக்மாசிலிருந்து ஆயலோன்மட்டும் பெலிஸ்தரை முறிய அடித்தபோது, ஜனங்கள் மிகவும் விடாய்த்திருந்தார்கள்.
அப்பொழுது ஜனங்கள் கொள்ளையின்மேல் பாய்ந்து, ஆடுகளையும் மாடுகளையும் கன்றுக்குட்டிகளையும் பிடித்து, தரையிலே போட்டு அடித்து, இரத்தத்தோடும் புசித்தார்கள்.
அப்பொழுது: இதோ, இரத்தத்தோடிருக்கிறதைப் புசிக்கிறதினால் ஜனங்கள் கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்கிறார்கள் என்று சவுலுக்கு அறிவித்தார்கள்; அவன்: நீங்கள் துரோகம்பண்ணினீர்கள்; இப்போதே ஒரு பெரிய கல்லை என்னிடத்தில் உருட்டிக்கொண்டுவாருங்கள்.
நீங்கள் ஜனத்திற்குள்ளே போய், இரத்தத்தோடிருக்கிறதைச் சாப்பிடுகிறதினாலே, கர்த்தருக்கு ஏலாத பாவம் செய்யாதபடிக்கு, அவரவர் தங்கள் மாட்டையும் அவரவர் தங்கள் ஆட்டையும் என்னிடத்தில் கொண்டுவந்து, இங்கே அடித்து, பின்பு சாப்பிடவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; ஆகையால் ஜனங்கள் எல்லாரும் அவரவர் தங்கள் மாடுகளை அன்று இராத்திரி தாங்களே கொண்டுவந்து, அங்கே அடித்தார்கள்.
பின்பு சவுல் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டினான்; அது அவன் கர்த்தருக்குக் கட்டின முதலாவது பலிபீடம்.
அதற்குப்பின்பு சவுல்: நாம் இந்த இராத்திரியிலே பெலிஸ்தரைத் தொடர்ந்துபோய், விடியற்கால வெளிச்சமாகுமட்டும் அவர்களைக் கொள்ளையிட்டு, அவர்களில் ஒருவரையும் மீதியாக வைக்காதிருப்போமாக என்றான். அதற்கு அவர்கள்: உம்முடைய கண்களுக்கு நலமானபடியெல்லாம் செய்யும் என்றார்கள். ஆசாரியனோ: நாம் இங்கே தேவசந்நிதியில் சேரக்கடவோம் என்றான்.
அப்படியே: பெலிஸ்தரைத் தொடர்ந்துபோகலாமா? அவர்களை இஸ்ரவேலின் கையில் ஒப்புக்கொடுப்பீரா? என்று சவுல் தேவனிடத்தில் விசாரித்தான்; அவர் அந்த நாளிலே அவனுக்கு மறுஉத்தரவு அருளவில்லை.
அப்பொழுது சவுல்: ஜனத்தின் தலைவர்களே, நீங்கள் எல்லாரும் இங்கே சேர்ந்துவந்து, இன்று இந்தப் பாவம் எதினாலே உண்டாயிற்று என்று பார்த்தறியுங்கள்.
அது என் குமாரனாகிய யோனத்தானிடத்தில் காணப்பட்டாலும், அவன் சாகவே சாகவேண்டும் என்று இஸ்ரவேலை ரட்சிக்கிற கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்; சகல ஜனங்களுக்குள்ளும் ஒருவனும் அவனுக்குப் பிரதியுத்தரம் சொல்லவில்லை.
அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப் பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.
அப்பொழுது சவுல் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரை நோக்கி: நிதானமாய்க் கட்டளையிட்டு யதார்த்தத்தை விளங்கப்பண்ணும் என்றான்; அப்பொழுது யோனத்தான்மேலும் சவுலின்மேலும் சீட்டு விழுந்தது, ஜனங்களோ தப்பினார்கள்.