தாவீது ஆசாரியனாகிய அகிமெலேக்கைப் பார்த்து: ராஜா எனக்கு ஒரு காரியத்தைக் கட்டளையிட்டு, நான் உன்னை அனுப்பின காரியமும் உனக்குக் கட்டளையிட்டதும் இன்னதென்று ஒருவரும் அறியாதிருக்கவேண்டும் என்று என்னோடே சொன்னார்; இன்ன இடத்திற்கு வரவேண்டும் என்று சேவகருக்குச் சொல்லியிருக்கிறேன்.
இப்போதும் உம்முடைய கையில் இருக்கிறது என்ன? ஐந்து அப்பமாகிலும், என்னவாகிலும், இருக்கிறதை என் கையிலே கொடும் என்றான்.
ஆசாரியன் தாவீதுக்குப் பிரதியுத்தரமாக: பரிசுத்த அப்பம் இருக்கிறதே ஒழிய, சாதாரண அப்பம் என் கையில் இல்லை; வாலிபர் ஸ்திரீகளோடேமாத்திரம் சேராதிருந்தால் கொடுப்பேன் என்றான்.
தாவீது ஆசாரியனுக்குப் பிரதியுத்தரமாக: நான் புறப்படுகிறதற்கு முன் நேற்றும் முந்தாநாளும் ஸ்திரீகள் எங்களுக்கு விலக்கமாயிருந்தார்கள்; வாலிபருடைய அசம்பிகளும் சுத்தமாயிருக்கிறது; இன்றையதினம் வேறே அப்பம் பாத்திரத்தில் பிரதிஷ்டைபண்ணப்பட்டதினால், இது சாதாரணமாயிற்றே என்றான்.
அப்பொழுது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட சமுகத்தப்பங்களைத்தவிர, வேறே அப்பம் அங்கே இராதபடியினால் ஆசாரியன் அவனுக்குப் பரிசுத்த அப்பத்தைக் கொடுத்தான்; அவைகள் எடுக்கப்படுகிற நாளிலே அதற்குப் பதிலாகச் சூடான அப்பம் வைக்கப்படும்.
சவுலுடைய வேலைக்காரரில் ஏதோமியனாகிய தோவேக்கு என்னும் பேருள்ள ஒருவன் அன்றையதினம் அங்கே கர்த்தருடைய சந்நிதியில் தடைபட்டிருந்தான்; அவன் சவுலுடைய மேய்ப்பருக்குத் தலைவனாயிருந்தான்.
தாவீது அகிமெலேக்கைப் பார்த்து: இங்கே உம்முடைய வசத்தில் ஒரு ஈட்டியானாலும் பட்டயமானாலும் இல்லையா? ராஜாவின் காரியம் அவசரமானபடியினால், என் பட்டயத்தையாகிலும், என் ஆயுதங்களையாகிலும், நான் எடுத்துக்கொண்டுவரவில்லை என்றான்.
அதற்கு ஆசாரியன்: நீர் ஏலே பள்ளத்தாக்கிலே கொன்ற பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயம், இதோ, ஏபோத்துக்குப் பின்னாக ஒரு புடவையிலே சுருட்டி வைத்திருக்கிறது; அதை நீர் எடுக்க மனதானால் எடுத்துக்கொண்டுபோம், அதுவே அல்லாமல் வேறொன்றும் இங்கே இல்லை என்றான்; அப்பொழுது தாவீது: அதற்கு நிகரில்லை; அதை எனக்கு தாரும் என்றான்.
அன்றையதினம் தாவீது எழுந்து சவுலுக்குத் தப்பியோடி, காத்தின் ராஜாவாகிய ஆகீசிடத்தில் போனான்.
ஆகீசின் ஊழியக்காரர் அவனைப் பார்த்து: தேசத்து ராஜாவாகிய தாவீது இவன் அல்லவோ? சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று இவனைக் குறித்தல்லவோ ஆடல் பாடலோடே கொண்டாடினார்கள் என்றார்கள்.
இந்த வார்த்தைகளைத் தாவீது தன் மனதிலே வைத்துக்கொண்டு, காத்தின் ராஜாவாகிய ஆகீசுக்கு மிகவும் பயப்பட்டு,
அவர்கள் கண்களுக்கு முன்பாகத் தன் முகநாடியை வேறுபடுத்தி, அவர்களிடத்தில் பித்தங்கொண்டவன்போலக் காண்பித்து, வாசற்கதவுகளிலே கீறிக்கொண்டிருந்து, தன் வாயிலிருந்து நுரையைத் தன் தாடியில் விழப்பண்ணிக்கொண்டிருந்தான்.
அப்பொழுது ஆகீஸ்: தன் ஊழியக்காரரை நோக்கி: இதோ, இந்த மனுஷன் பித்தங்கொண்டவன் என்று காண்கிறீர்களே; இவனை நீங்கள் என்னிடத்தில் கொண்டுவந்தது என்ன?
எனக்கு முன்பாகப் பயித்திய சேஷ்டை செய்ய, நீங்கள் இவனைக் கொண்டுவருகிறதற்கு, பயித்தியக்காரர் எனக்குக் குறைவாயிருக்கிறார்களோ? இவன் என் வீட்டிலே வரலாமா என்றான்.
தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்; அதை அவன் சகோதரரும் அவன் தகப்பன் வீட்டார் அனைவரும் கேட்டு, அங்கே அவனிடத்துக்குப் போனார்கள்.
ஒடுக்கப்பட்டவர்கள், கடன்பட்டவர்கள், முறுமுறுக்கிறவர்கள் யாவரும் அவனோடே கூடிக்கொண்டார்கள்; அவன் அவர்களுக்குத் தலைவனானான்; இந்தப் பிரகாரமாக ஏறக்குறைய நானூறுபேர் அவனோடிருந்தார்கள்.
தாவீது அவ்விடத்தைவிட்டு மோவாபியரைச் சேர்ந்த மிஸ்பேக்குப் போய், மோவாபின் ராஜாவைப் பார்த்து: தேவன் என்னை எப்படி நடத்துவார் என்று நான் அறியுமட்டும், என் தகப்பனும் என் தாயும் உங்களிடத்திலே தங்கியிருக்கும்படி தயவுசெய்யும் என்று சொல்லி,
அவர்களை மோவாபின் ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு போய்விட்டான்; தாவீது அரணில் இருந்த நாளெல்லாம் அவர்கள் அங்கே அவனோடிருந்தார்கள்.
பின்பு காத் என்னும் தீர்க்கதரிசி தாவீதைப் பார்த்து: நீர் அரணில் இராமல் யூதாதேசத்திற்குப் புறப்பட்டுவாரும் என்றான்; அப்பொழுது தாவீது புறப்பட்டு ஆரேத் என்னும் காட்டிலே போனான்.
தாவீதும் அவனோடிருந்த மனுஷரும் காணப்பட்ட செய்தியைச் சவுல் கேள்விப்பட்டான்; சவுல் கிபியாவைச் சேர்ந்த ராமாவில் ஒரு தோப்பிலே உட்கார்ந்து, தன்னுடைய ஊழியக்காரர் எல்லாரும் தன்னைச் சூழ்ந்துநிற்க, தன் ஈட்டியைத் தன் கையிலே பிடித்துக்கொண்டிருக்கும் போது,
சவுல் தன்னண்டையில் நிற்கிற தன் ஊழியக்காரரைப் பார்த்து: பென்யமீன் புத்திரரே, கேளுங்கள்; ஈசாயின் மகன் உங்களெல்லாருக்கும் வயல்களையும் திராட்சத்தோட்டங்களையும் கொடுப்பானோ? உங்களெல்லாரையும் ஆயிரத்துக்கு அதிபதிகளும் நூற்றுக்கு அதிபதிகளுமாக வைப்பானோ?
நீங்களெல்லாரும் எனக்கு விரோதமாகக் கட்டுப்பாடு பண்ணிக்கொண்டது என்ன? ஈசாயின் மகனுடனே என் குமாரன் உடன்படிக்கைபண்ணும்போது, என் செவிக்கு அதை ஒருவனும் வெளிப்படுத்தவில்லை; எனக்காகப் பரிதாபப்பட்டு, என் செவிக்கு அதை வெளிப்படுத்த உங்களில் ஒருவனாகிலும் இல்லையா? இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண, என் குமாரன் என் வேலைக்காரனை எனக்கு விரோதமாக எடுத்துவிட்டானே என்றான்.
அப்பொழுது சவுலின் ஊழியக்காரரோடே நின்ற ஏதோமியனாகிய தோவேக்கு பிரதியுத்தரமாக: ஈசாயின் மகனை நோபிலிருக்கிற அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக்கிடத்தில் வரக்கண்டேன்.
இவன் அவனுக்காகக் கர்த்தரிடத்தில் விசாரித்து, அவனுக்கு வழிக்கு போஜனத்தைக் கொடுத்து, பெலிஸ்தனாகிய கோலியாத்தின் பட்டயத்தையும் அவனுக்குக் கொடுத்தான் என்றான்.
அப்பொழுது ராஜா: அகிதூபின் குமாரனாகிய அகிமெலேக் என்னும் ஆசாரியனையும், நோபிலிருக்கிற அவன் தகப்பன் வீட்டாராகிய எல்லா ஆசாரியரையும் அழைப்பித்தான்; அவர்களெல்லாரும் ராஜாவினிடத்தில் வந்தார்கள்.