ராஜாவாகிய சாலொமோனும், அவனோடே கூடின இஸ்ரவேல் சபையார் அனைவரும், பெட்டிக்கு முன்பாக எண்ணிக்கைக்கும் தொகைக்கும் அடங்காத ஏராளமான ஆடுமாடுகளைப் பலியிட்டார்கள்.
அப்படியே ஆசாரியர் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை, ஆலயத்தின் சந்நிதியாகிய மகா பரிசுத்தமான ஸ்தலத்திலே, கேருபீன்களுடைய செட்டைகளுக்குக் கீழாகக் கொண்டுவந்து வைத்தார்கள்.
கேருபீன்கள், பெட்டியிருக்கும் ஸ்தானத்தின்மேல், தங்கள் இரண்டிரண்டு செட்டைகளை விரித்து உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தன.
பெட்டியிலிருக்கிற தண்டுகளின் முனைகள் சந்நிதி ஸ்தலத்திற்கு முன்னே காணப்படத்தக்கதாய் அந்தத் தண்டுகளை இழுத்தார்கள்; புறம்பே அவைகள் காணப்படவில்லை; அது இந்நாள்வரைக்கும் அங்கே இருக்கிறது.
இஸ்ரவேல் புத்திரர் எகிப்திலிருந்து புறப்பட்டபின், கர்த்தர் ஓரேபிலே அவர்களோடு உடன்படிக்கை பண்ணினபோது, மோசே அந்தப் பெட்டியிலே வைத்த இரண்டு கற்பலகைகளே அல்லாமல் அதிலே வேறொன்றும் இருந்ததில்லை.
வகுப்புகளின் முறைகளைப் பாராமல், ஆசாரியர் எல்லோரும் தங்களைப் பரிசுத்தம்பண்ணிக்கொண்டார்கள்.
ஆசாப், ஏமான், எதுத்தூனுடைய கூட்டத்தாரும், அவர்களுடைய குமாரர் சகோதரருடைய கூட்டத்தாருமாகிய பாடகரான லேவியரனைவரும் மெல்லிய புடவைகளைத் தரித்து, கைத்தாளங்களையும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் பிடித்துப் பலிபீடத்திற்குக் கிழக்கே நின்றார்கள்; அவர்களோடும்கூடப் பூரிகைகளை ஊதுகிற ஆசாரியர்கள் நூற்றிருபதுபேர் நின்றார்கள்.
அவர்கள் ஒருமிக்கப் பூரிகைகளை ஊதி, ஏகசத்தமாய்க் கர்த்தரைத் துதித்து ஸ்தோத்திரித்துப் பாடினார்கள்; ஆசாரியர் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படுகையிலும், பாடகர் பூரிகைகள் தாளங்கள் கீதவாத்தியங்களுடைய சத்தத்தைத் தொனிக்கப்பண்ணி, கர்த்தர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது என்று அவரை ஸ்தோத்திரிக்கையிலும், கர்த்தருடைய வீடாகிய தேவாலயம் மேகத்தினால் நிறையப்பட்டது.
அந்த மேகத்தினிமித்தம் ஆசாரியர்கள் ஊழியஞ்செய்து நிற்கக் கூடாமற்போயிற்று; கர்த்தருடைய மகிமை தேவனுடைய ஆலயத்தை நிரப்பிற்று.
அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாசம்பண்ணுவேன் என்று கர்த்தர் சொன்னார் என்றும்,
தேவரீர் வாசம்பண்ணத்தக்க வீடும், நீர் என்றைக்கும் தங்கத்தக்க நிலையான ஸ்தானமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி,
ராஜா முகம் திரும்பி, இஸ்ரவேல் சபையார் எல்லாரையும் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார் எல்லாரும் நின்றார்கள்.
அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவர் என் தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதை, தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார்.
அவர்: நான் என் ஜனத்தை எகிப்துதேசத்திலிருந்து புறப்படப்பண்ணின நாள்முதற்கொண்டு, என் நாமம் விளங்கும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டுமென்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக்கோத்திரங்களிலுமுள்ள வேறே யாதொரு பட்டணத்தைத் தெரிந்துகொள்ளாமலும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கும்படி வேறே ஒருவரைத்தெரிந்துகொள்ளாமலும்,
என் நாமம் விளங்கும் ஸ்தானமாக எருசலேமையும், என் ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் அதிபதியாயிருக்கத் தாவீதையும் தெரிந்துகொண்டேன் என்றார்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என் தகப்பனாகிய தாவீதின் மனதில் இருந்தது.
ஆனாலும் கர்த்தர் என் தகப்பனாகிய தாவீதை நோக்கி: என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன் மனதிலே இருந்தது நல்ல காரியந்தான்.
ஆகிலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய்; உன் கர்ப்பப்பிறப்பாகிய உன் குமாரனே என் நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார்.
இப்போதும் கர்த்தர் சொல்லிய தமது வார்த்தையை நிறைவேற்றினார்; கர்த்தர் சொன்னபடியே, நான் என் தகப்பனாகிய தாவீதின் ஸ்தானத்தில் எழும்பி, இஸ்ரவேலுடைய சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தரின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டி,
கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருடனே பண்ணின உடன்படிக்கையிருக்கிற பெட்டியை அதிலே வைத்தேன் என்று சொல்லி,
கர்த்தருடைய பலிபீடத்திற்கு முன்னே இஸ்ரவேல் சபையார் எல்லாருக்கும் எதிராக நின்று தன் கைகளை விரித்தான்.
சாலொமோன் ஐந்து முழ நீளமும், ஐந்து முழ அகலமும், மூன்று முழ உயரமுமான ஒரு வெண்கலப் பிரசங்கபீடத்தை உண்டாக்கி, அதை நடுப்பிராகாரத்திலே வைத்திருந்தான்; அதின்மேல் அவன் நின்று, இஸ்ரவேலின் சபையாரெல்லாருக்கும் எதிராக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து:
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவனில்லை; தங்கள் முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியாருக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்துவருகிறீர்.
தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; உம்முடைய வாக்கினால் அதைச் சொன்னீர்; உம்முடைய கரத்தினால் அதை இந்நாளில் இருக்கிறபடி நிறைவேற்றினீர்.
இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, தேவரீர் என் தகப்பனாகிய தாவீது என்னும் உமது அடியானை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன் குமாரரும் என் நியாயப்பிரமாணத்தில் நடக்கும்படி தங்கள் வழியைக் காப்பார்களேயானால், இஸ்ரவேலின் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் புருஷன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமற்போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும்.