இராக்காலத்திலே என் எலும்புகள் துளைக்கப்பட்டு, என் நரம்புகளுக்கு இளைப்பாறுதல் இல்லாதிருக்கிறது.
நோயின் உக்கிரத்தினால் என் உடுப்பு வேறுபட்டுப்போயிற்று; அது என் அங்கியின் கழுத்துப்பட்டையைப்போல, என்னைச் சுற்றிக்கொண்டது.
சேற்றிலே தள்ளப்பட்டேன்; தூளுக்கும் சாம்பலுக்கும் ஒப்பானேன்.
உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; நீர் எனக்கு மறுஉத்தரவு கொடாதிருக்கிறீர்; கெஞ்சி நிற்கிறேன், என்மேல் பாராமுகமாயிருக்கிறீர்.
என்மேல் கொடூரமுள்ளவராக மாறினீர்; உம்முடைய கரத்தின் வல்லமையால் என்னை விரோதிக்கிறீர்.
நீர் என்னைத் தூக்கி, என்னைக் காற்றிலே பறக்கவிட்டு, என்னைப் பயத்தினால் உருகிப்போகப்பண்ணுகிறீர்.
சகல ஜீவாத்துமாக்களுக்கும் குறிக்கப்பட்ட தாவரமாகிய மரணத்துக்கு என்னை ஒப்புக்கொடுப்பீர் என்று அறிவேன்.
ஆனாலும் நான் யாதொருவனை அவன் ஆபத்திலே தவிக்கப்பண்ணினதும்,
துன்னாளைக் கண்டவனுக்காக நான் அழாதிருந்ததும், எளியவனுக்காக என் ஆத்துமா வியாகுலப்படாதிருந்ததும் உண்டானால், அவர் என் மனுவுக்கு இடங்கொடாமல், எனக்கு விரோதமாய்த் தமது கையை நீட்டுவாராக.
நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது; வெளிச்சத்தை வரப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு இருள் வந்தது.
என் குடல்கள் கொதித்து, அமராதிருக்கிறது; உபத்திரவநாட்கள் என்மேல் வந்தது.
வெயில் படாதிருந்தும், நான் கறுகறுத்துத் திரிகிறேன்; நான் சபையிலிருந்து எழுந்திருக்கும்போது அலறுகிறேன்.
நான் மலைப்பாம்புகளுக்குச் சகோதரனும், கோட்டான்களுக்குத் தோழனுமானேன்.
என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று.
என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் ஓலமாகவும் மாறின.
என் கண்களோடே உடன்படிக்கைபண்ணின நான் ஒரு கன்னிகையின்மேல் நினைப்பாயிருப்பதெப்படி?
அப்பொழுது உன்னதங்களிலிருந்து தேவன் அளிக்கும் பங்கும், உன்னதத்திலிருந்து சர்வவல்லவர் கொடுக்கும் சுதந்தரமும் கிடைக்குமோ?
மாறுபாடானவனுக்கு ஆபத்தும், அக்கிரமச் செய்கைக்காரருக்கு ஆக்கினையுமல்லவோ கிடைக்கும்.
அவர் என் வழிகளைப் பார்த்து, என் நடைகளையெல்லாம் எண்ணுகிறார் அல்லவோ?
நான் மாயையிலே நடந்தேனோ, என் கால் கபடுசெய்யத் தீவிரித்ததோ என்று,
சுமுத்திரையான தராசிலே தேவன் என்னை நிறுத்து, என் உத்தமத்தை அறிவாராக.
என் நடைகள் வழியைவிட்டு விலகினதும், என் இருதயம் என் கண்களைப் பின்தொடர்ந்ததும், ஏதாகிலும் ஒரு மாசு என் கைகளில் ஒட்டிக்கொண்டதும் உண்டானால்,
அப்பொழுது நான் விதைத்ததை வேறொருவன் புசிப்பானாக; என் பயிர்கள் வேரற்றுப்போகக்கடவது.
என் மனம் யாதொரு ஸ்திரீயின்மேல் மயங்கி, அயலானுடைய வாசலை நான் எட்டிப்பார்த்ததுண்டானால்,
அப்பொழுது என் மனைவி வேறொருவனுக்கு மாவரைப்பாளாக; வேற்றுமனிதர் அவள்மேல் சாய்வார்களாக.