கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது.
தன் கெபியிலிருக்கிற சிங்கத்தைப்போல மறைவில் பதிவிருக்கிறான்; ஏழையைப் பிடிக்கப் பதிவிருந்து, ஏழையைத் தன் வலைக்குள் இழுத்துப் பிடித்துக்கொள்ளுகிறான்.
திக்கற்றவர்கள் தன் பலவான்கள் கையில் விழும்படி அவன் பதுங்கிக்கிடக்கிறான்.
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து, ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
கர்த்தாவே, எழுந்தருளும்; தேவனே, உம்முடைய கையை உயர்த்தும்; ஏழைகளை மறவாதேயும்.
துன்மார்க்கன் தேவனை அசட்டைபண்ணி: நீர் கேட்டு விசாரிப்பதில்லை என்று தன் இருதயத்தில் சொல்லிக்கொள்வானேன்.
அதைப் பார்த்திருக்கிறீரே! உபத்திரவத்தையும் குரோதத்தையும் கவனித்திருக்கிறீரே; நீர் பதிலளிப்பீர்; ஏழையானவன் தன்னை உமக்கு ஒப்புவிக்கிறான்; திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே.
துன்மார்க்கனும் பொல்லாதவனுமாயிருக்கிறவனுடைய புயத்தை முறித்துவிடும்; அவனுடைய ஆகாமியம் காணாமற்போகுமட்டும் அதைத் தேடி விசாரியும்.
கர்த்தர் சதாகாலங்களுக்கும் ராஜாவாயிருக்கிறார்; புறஜாதியார் அவருடைய தேசத்திலிருந்து அழிந்துபோவார்கள்.
கர்த்தாவே, சிறுமைப்பட்டவர்களுடைய வேண்டுதலைக் கேட்டிருக்கிறீர்; அவர்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவீர்.
மண்ணான மனுஷன் இனிப் பலவந்தஞ்செய்யத் தொடராதபடிக்கு, தேவரீர் திக்கற்ற பிள்ளைகளுக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கும் நீதிசெய்ய உம்முடைய செவிகளைச் சாய்த்துக்கேட்டருளுவீர்.
நான் கர்த்தரை நம்பியிருக்கிறேன்; பின்னை ஏன் நீங்கள் என் ஆத்துமாவை நோக்கி: பட்சியைப்போல உன் மலைக்குப் பறந்துபோ என்று சொல்லுகிறீர்கள்.
இதோ, துன்மார்க்கர் வில்லை வளைத்து, செம்மையான இருதயத்தார்மேல் அந்தகாரத்தில் எய்யும்படி தங்கள் அம்புகளை நாணிலே தொடுக்கிறார்கள்.
அஸ்திபாரங்களும் நிர்மூலமாகிறதே, நீதிமான் என்ன செய்வான்?
கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது; அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.
கர்த்தர் நீதிமானைச் சோதித்தறிகிறார்; துன்மார்க்கனையும் கொடுமையில் பிரியமுள்ளவனையும் அவருடைய உள்ளம் வெறுக்கிறது.
துன்மார்க்கர்மேல் கண்ணிகளை வருஷிக்கப்பண்ணுவார்; அக்கினியும் கந்தகமும் கடுங்கோடைக் கொந்தளிப்பும் அவர்கள் குடிக்கும் பாத்திரத்தின் பங்கு.
கர்த்தர் நீதியுள்ளவர், நீதியின்மேல் பிரியப்படுவார்; அவருடைய முகம் செம்மையானவனை நோக்கியிருக்கிறது.
இரட்சியும் கர்த்தாவே, பக்தியுள்ளவன் அற்றுப்போகிறான்; உண்மையுள்ளவர்கள் மனுபுத்திரரில் குறைந்திருக்கிறார்கள்.
அவரவர் தங்கள் தோழரோடே பொய் பேசுகிறார்கள்; இச்சக உதடுகளால் இருமனதாய்ப் பேசுகிறார்கள்.
இச்சகம்பேசுகிற எல்லா உதடுகளையும், பெருமைகளைப் பேசுகிற நாவையும் கர்த்தர் அறுத்துப்போடுவார்.
அவர்கள்: எங்கள் நாவுகளால் மேற்கொள்ளுவோம், எங்கள் உதடுகள் எங்களுடையது; யார் எங்களுக்கு ஆண்டவன் என்று சொல்லுகிறார்கள்.
ஏழைகள் பாழாக்கப்பட்டதினிமித்தமும், எளியவர்கள் விடும் பெருமூச்சினிமித்தமும், நான் இப்பொழுது எழுந்து, அவன்மேல் சீறுகிறவர்களுக்கு அவனைக் காத்துச் சுகமாயிருக்கப்பண்ணுவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது.
கர்த்தாவே, நீர் அவர்களைக் காப்பாற்றி, அவர்களை என்றைக்கும் இந்தச் சந்ததிக்கு விலக்கிக் காத்துக்கொள்ளுவீர்.