கர்த்தாவே, என் ஜெபத்தைக்கேட்டு, என் கூப்பிடுதலுக்குச் செவிகொடும்; என் கண்ணீருக்கு மவுனமாயிராதேயும்; என் பிதாக்களெல்லாரையும்போல நானும் உமக்குமுன்பாக அந்நியனும் பரதேசியுமாயிருக்கிறேன்.
நான் இனி இராமற்போகுமுன்னே, தேறுதலடையும்படி என்னிடத்தில் பொறுமையாயிரும்.
கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்.
பயங்கரமான குழியிலும் உளையான சேற்றிலுமிருந்து என்னைத் தூக்கியெடுத்து, என் கால்களைக் கன்மலையின்மேல் நிறுத்தி, என் அடிகளை உறுதிப்படுத்தி,
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை அவர் என் வாயிலே கொடுத்தார்; அநேகர் அதைக் கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள்.
அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்.
என் தேவனாகிய கர்த்தாவே, நீர் எங்கள் நிமித்தஞ்செய்த உம்முடைய அதிசயங்களும் உம்முடைய யோசனைகளும் அநேகமாயிருக்கிறது; ஒருவரும் அவைகளை உமக்கு விவரித்துச் சொல்லிமுடியாது; நான் அவைகளைச் சொல்லி அறிவிக்கவேண்டுமானால் அவைகள் எண்ணிக்கைக்கு மேலானவைகள்.
பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பாமல், என் செவிகளைத் திறந்தீர்; சர்வாங்க தகனபலியையும் பாவநிவாரணபலியையும் நீர் கேட்கவில்லை.
அப்பொழுது நான்: இதோ, வருகிறேன், புஸ்தகச்சுருளில் என்னைக்குறித்து எழுதியிருக்கிறது;
என் தேவனே, உமக்குப் பிரியமானதைச் செய்ய விரும்புகிறேன்; உமது நியாயப்பிரமாணம் என் உள்ளத்திற்குள் இருக்கிறது என்று சொன்னேன்.
மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.
உம்முடைய நீதியை நான் என் இருதயத்திற்குள் மறைத்துவைக்கவில்லை; உமது சத்தியத்தையும் உமது இரட்சிப்பையும் சொல்லியிருக்கிறேன்; உமது கிருபையையும் உமது உண்மையையும் மகா சபைக்கு அறிவியாதபடிக்கு நான் ஒளித்துவைக்கவில்லை.
கர்த்தாவே நீர் உம்முடைய இரக்கங்களை எனக்குக் கிடையாமற் போகப்பண்ணாதேயும்; உமது கிருபையும் உமது உண்மையும் எப்பொழுதும் என்னைக் காக்கக்கடவது.
எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னைச் சூழ்ந்துகொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்துபிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்துபோகிறது.
கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
என் பிராணனை அழிக்கத் தேடுகிறவர்கள் ஏகமாய் வெட்கி நாணி, எனக்குத் தீங்குசெய்ய விரும்புகிறவர்கள் பின்னிட்டு இலச்சையடைவார்களாக.
என்பேரில் ஆ ஆ! ஆ ஆ! என்று சொல்லுகிறவர்கள், தங்கள் வெட்கத்தின் பலனையடைந்து கைவிடப்படுவார்களாக.
உம்மைத் தேடுகிற அனைவரும் உமக்குள் மகிழ்ந்து சந்தோஷப்படுவார்களாக; உம்முடைய இரட்சிப்பை விரும்புகிறவர்கள் கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்பொழுதும் சொல்வார்களாக.
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.
சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.
கர்த்தர் அவனைப் பாதுகாத்து அவனை உயிரோடே வைப்பார்; பூமியில் அவன் பாக்கியவானாயிருப்பான்; அவன் சத்துருக்களின் இஷ்டத்திற்கு நீர் அவனை ஒப்புக்கொடீர்.
படுக்கையின்மேல் வியாதியாய்க்கிடக்கிற அவனைக் கர்த்தர் தாங்குவார்; அவனுடைய வியாதியிலே அவன் படுக்கை முழுவதையும் மாற்றிப்போடுவீர்.
கர்த்தாவே, என்மேல் இரக்கமாயிரும்; உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தேன், என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன்.
அவன் எப்பொழுது சாவான், அவன் பேர் எப்பொழுது அழியும்? என்று என் சத்துருக்கள் எனக்கு விரோதமாய்ச் சொல்லுகிறார்கள்.
ஒருவன் என்னைப் பார்க்கவந்தால் வஞ்சனையாய்ப் பேசுகிறான்; அவன் தன் இருதயத்தில் அக்கிரமத்தைச் சேகரித்துக்கொண்டு, தெருவிலேபோய், அதைத் தூற்றுகிறான்.