ஒரு குருவி தன் பிராணனை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழத் தீவிரிக்கிறதுபோலும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவன் ஈரலைப் பிளந்தது.
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
உன் இருதயம் அவள் வழியிலே சாயவேண்டாம்; அவள் பாதையிலே மயங்கித் திரியாதே.
அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழப்பண்ணினாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.
அவள் வீடு பாதாளத்துக்குப்போம் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.
ஞானம் கூப்பிடுகிறதில்லையோ? புத்தி சத்தமிடுகிறதில்லையோ?
அது வழியருகேயுள்ள மேடைகளிலும், நாற்சந்திகளிலும் நிற்கிறது.
அது ஊர்வாசல்களின் ஓரத்திலும், பட்டணத்தின் முகப்பிலும், நடை கூடங்களிலும் நின்று சத்தமிட்டு:
மனுஷரே, உங்களை நோக்கிக் கூப்பிடுகிறேன்; என் சத்தம் மனுபுத்திரருக்குத் தொனிக்கும்.
பேதைகளே, விவேகம் அடையுங்கள்; மூடர்களே, புத்தியுள்ள சிந்தையாயிருங்கள்.
கேளுங்கள், மேம்பாடான காரியங்களைப் பேசுவேன்; என் உதடுகள் உத்தம காரியங்களை வசனிக்கும்.
என் வாய் சத்தியத்தை விளம்பும், ஆகாமியம் என் உதடுகளுக்கு அருவருப்பானது.
என் வாயின் வாக்குகளெல்லாம் நீதியானவைகள்; அவைகளில் புரட்டும் விபரீதமும் இல்லை.
அவைகளெல்லாம் புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், ஞானத்தைப் பெற்றவர்களுக்கு யதார்த்தமுமாயிருக்கும்.
வெள்ளியைப்பார்க்கிலும் என் புத்திமதியையும், பசும்பொன்னைப்பார்க்கிலும் ஞானத்தையும் அங்கீகரித்துக்கொள்ளுங்கள்.
முத்துக்களைப்பார்க்கிலும் ஞானமே நல்லது; இச்சிக்கப்படத்தக்கவைகளெல்லாம் அதற்கு நிகரல்ல.
ஞானமாகிய நான் விவேகத்தோடே வாசம்பண்ணி, நல்யுக்தியான அறிவுகளைக் கண்டடைகிறேன்.
தீமையை வெறுப்பதே கர்த்தருக்குப் பயப்படும் பயம்; பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், புரட்டுவாயையும் நான் வெறுக்கிறேன்.
ஆலோசனையும் மெய்ஞ்ஞானமும் என்னுடையவைகள்; நானே புத்தி, வல்லமை என்னுடையது.
என்னாலே ராஜாக்கள் அரசாளுகிறார்கள், பிரபுக்கள் நீதிசெலுத்துகிறார்கள்.
என்னாலே அதிகாரிகளும், பிரபுக்களும், பூமியிலுள்ள சகல நியாயாதிபதிகளும் ஆளுகைசெய்துவருகிறார்கள்.
என்னைச் சிநேகிக்கிறவர்களை நான் சிநேகிக்கிறேன்; அதிகாலையில் என்னைத் தேடுகிறவர்கள் என்னைக் கண்டடைவார்கள்.
ஐசுவரியமும், கனமும், நிலையான பொருளும், நீதியும் என்னிடத்தில் உண்டு.
பொன்னையும் தங்கத்தையும் பார்க்கிலும் என் பலன் நல்லது; சுத்த வெள்ளியைப்பார்க்கிலும் என் வருமானம் நல்லது.
என்னைச் சிநேகிக்கிறவர்கள் மெய்ப்பொருளைச் சுதந்தரிக்கும்படிக்கும், அவர்களுடைய களஞ்சியங்களை நான் நிரப்பும்படிக்கும்,