அரசாளுகிற அடிமையினிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,
பகைக்கப்படத்தக்கவளாயிருந்தும், புருஷனுக்கு வாழ்க்கைப்பட்ட ஸ்திரீயினிமித்தமும், தன் நாச்சியாருக்குப் பதிலாக இல்லாளாகும் அடிமைப்பெண்ணினிமித்தமுமே.
பூமியில் சிறியவைகளாயிருந்தும், மகா ஞானமுள்ளவைகள் நான்குண்டு.
அவையாவன: அற்பமான ஜெந்துவாயிருந்தும், கோடைகாலத்திலே தங்கள் ஆகாரத்தைச் சம்பாதிக்கிற எறும்பும்,
சத்துவமற்ற ஜெந்துவாயிருந்தும், தங்கள் வீட்டைக் கன்மலையிலே தோண்டிவைக்கும் குழிமுசல்களும்,
ராஜா இல்லாதிருந்தும், பவுஞ்சு பவுஞ்சாய்ப் புறப்படுகிற வெட்டுக்கிளிகளும்,
தன் கைகளினால் வலையைப் பின்னி, அரசர் அரமனைகளிலிருக்கிற சிலந்திப் பூச்சியுமே.
விநோதமாய் அடிவைத்து நடக்கிறவைகள் மூன்றுண்டு; விநோத நடையுள்ளவைகள் நாலுமுண்டு.
அவையாவன: மிருகங்களில் சவுரியமானதும் ஒன்றுக்கும் பின்னிடையாததுமாகிய சிங்கமும்,
போர்க்குதிரையும், வெள்ளாட்டுக்கடாவும், ஒருவரும் எதிர்க்கக் கூடாத ராஜாவுமே.
நீ மேட்டிமையானதினால் பைத்தியமாய் நடந்து, துர்ச்சிந்தனையுள்ளவனாயிருந்தாயானால், கையினால் வாயை மூடு.
பாலைக் கடைதல் வெண்ணெயைப் பிறப்பிக்கும்; மூக்கைப் பிசைதல் இரத்தத்தைப் பிறப்பிக்கும்; அப்படியே கோபத்தைக் கிண்டிவிடுதல் சண்டையைப் பிறப்பிக்கும்.
ராஜாவாகிய லேமுவேலுக்கடுத்த வசனங்கள்; அவன் தாய் அவனுக்குப் போதித்த உபதேசமாவது:
என் மகனே, என் கர்ப்பத்தின் குமாரனே, என் பொருத்தனைகளின் புத்திரனே,
ஸ்திரீகளுக்கு உன் பெலனையும், ராஜாக்களைக் கெடுக்கும் காரியங்களுக்கு உன் வழிகளையும் கொடாதே.
திராட்சரசம் குடிப்பது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; லேமுவேலே, அது ராஜாக்களுக்குத் தகுதியல்ல; மதுபானம் பிரபுக்களுக்குத் தகுதியல்ல.
மதுபானம்பண்ணினால் அவர்கள் நியாயப்பிரமாணத்தை மறந்து, சிறுமைப்படுகிறவர்களுடைய நியாயத்தையும் புரட்டுவார்கள்.
மடிந்துபோகிறவனுக்கு மதுபானத்தையும், மனங்கசந்தவர்களுக்குத் திராட்சரசத்தையும் கொடுங்கள்;
அவன் குடித்துத் தன் குறைவை மறந்து, தன் வருத்தத்தை அப்புறம் நினையாதிருக்கட்டும்.
ஊமையனுக்காகவும் திக்கற்றவர்களெல்லாருடைய நியாயத்துக்காகவும் உன் வாயைத் திற.
உன் வாயைத் திறந்து, நீதியாய் நியாயந்தீர்த்து, சிறுமையும் எளிமையுமானவனுக்கு நியாயஞ்செய்.
குணசாலியான ஸ்திரீயைக் கண்டுபிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப்பார்க்கிலும் உயர்ந்தது.
அவள் புருஷனுடைய இருதயம் அவளை நம்பும்; அவன் சம்பத்துக் குறையாது.
அவள் உயிரோடிருக்கிற நாளெல்லாம் அவனுக்குத் தீமையையல்ல, நன்மையையே செய்கிறாள்.
ஆட்டுமயிரையும் சணலையும் தேடி, தன் கைகளினால் உற்சாகத்தோடே வேலைசெய்கிறாள்.