சூரியன்‌ அஸ்தமித்திருண்டிடும்

சூரியன்‌ அஸ்தமித்திருண்டிடும்‌ வேளையில்‌
சூழ்ந்தனர்‌ பிணியாளிகள்‌-உனை நெருங்கித்‌
துயர்‌ தீர வேண்டினரே.

இன்னேரம்‌ உன்தயை தேடும்‌ இவ்வடியாரின்‌
இன்னலெல்லாம்‌ ஓட அன்பே உன்னருள்‌ ஈவாய்‌. - சூரி

சரணங்கள்‌

1. பேயின்‌ அகோரத்வம்‌ உனைக்கண்டு பறந்தது,
நோயும்‌ நிர்ப்பந்தமும்‌ நீ தொட ஒழிந்தன,
வாய்க்கும்‌ சுகானந்தம்‌ உனை நம்பினோர்க்கெல்லாம்‌,
தாய்க்‌ கருணையுடையோய்‌, இன்றும்‌ உன்‌ தயை கூர்வாய்‌.
- சூரி

2. இஷ்டரின்‌ துரோகத்தால்‌ இடர்‌ அடைந்துழல்வோரும்‌,
துஷ்டர்‌ செய்துன்பத்தால்‌ தயங்கித்‌ தவிப்போரும்‌,
கஷ்டமெல்லாம்‌ தீர்ந்து களிக்கக்‌ கருணை கூர்வாய்‌!
அண்டதிக்கும்‌ ஆள்வோய்‌, அபயம்‌ அபயம்‌ என்றோம்‌. - சூரி

3. எளியோர்‌ வறுமையில்‌ இன்னருள்‌ ஊற்றுவாய்‌,
விழிப்போடிரவிற்‌ கண்ணீர்‌ விடுவோரைத்‌ தேற்றுவாய்‌,
வழி தப்பி அலைவோரை வழி காட்டி ஆற்றுவாய்‌,
பழி பாவம்‌ துணிவோரைத்‌ தடுத்தாண்டு மாற்றுவாய்‌. - சூரி

4. சருவ சக்தி சதா காலமும்‌ உனதல்லோ?
வருத்த மெல்லாம்‌ ஓடும்‌ வார்த்தை ஒன்று சொல்ல,
உரித்தாய்க்‌ கரத்தினால்‌ உன்னடியாரைத்‌ தொடுவாயே,
கருகுங்‌ கங்குலிலும்‌ யாம்‌ களிப்பாய்ச்‌ சுகிப்போமே. - சூரி

- சவரிராயன்‌ ஏசுதாசன்‌

Start Downloading Your Apps