தேவன் செய்வது எதுவோ அது என்றைக்கும் நிலைக்கும் என்று அறிவேன்; அதினோடே ஒன்றும் கூட்டவுங்கூடாது, அதிலிருந்து ஒன்றும் குறைக்கவுங்கூடாது; மனுஷர் தமது சமுகத்தில் பயந்திருக்கும்படி தேவன் இப்படிச் செய்துவருகிறார்.
முன் நடந்ததே இப்பொழுதும் நடக்கிறது; இனி நடக்கப்போகிறதும் முன்னமே நடந்தது; நடந்ததையோ தேவன் விசாரிப்பார்.
பின்னும் சூரியனுக்குக் கீழே நான் நியாயஸ்தலத்தைக் கண்டேன், அங்கே அநியாயம் இருந்தது; நீதிஸ்தலத்தையும் கண்டேன், அங்கே அநீதி இருந்தது.
சகல எண்ணங்களையும் சகல செய்கைகளையும் நியாயந்தீர்க்குங்காலம் இனி இருக்கிறபடியால் சன்மார்க்கனையும் துன்மார்க்கனையும் தேவன் நியாயந்தீர்ப்பார் என்று என் உள்ளத்தில் எண்ணினேன்.
மனுபுத்திரர் தாங்கள் மிருகங்களைப்போல் இருக்கிறார்களென்பதை அவர்கள் காணும்படிக்கு தேவன் அவர்களைச் சோதிக்கிறாரென்று நான் மனுஷருடைய நிலைமையைக்குறித்து என் உள்ளத்தில் எண்ணினேன்.
மனுபுத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும்; அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறதுபோலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப்பார்க்கிலும் மனுஷன் மேன்மையுள்ளவன் அல்ல; எல்லாம் மாயையே.
எல்லாம் ஒரே இடத்துக்குப் போகிறது; எல்லாம் மண்ணிலே உண்டாகிறது, எல்லாம் மண்ணுக்குத் திரும்புகிறது.
உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியிலிறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்?
இப்படியிருக்கிறபடியால், மனுஷன் தன் செய்கைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் நன்மையையேயல்லாமல், வேறே நன்மையில்லையென்று கண்டேன்; இதுவே அவன் பங்கு; தனக்குப் பின்வரும் காரியங்களைக் காணும்படிக்கு அவனைத் திரும்பிவரப்பண்ணுகிறவன் யார்?
இதற்குப் பின்பு நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ, ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலமிருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.
ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று மரித்தவர்களையே பாக்கியவான்கள் என்றேன்.
இவ்விருதிறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.
மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.
வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒரு கைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.
பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன்.
ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராத தொல்லை.
ஒண்டியாயிருப்பதிலும் இருவர் கூடியிருப்பது நலம்; அவர்களுடைய பிரயாசத்தினால் அவர்களுக்கு நல்ல பலனுண்டாகும்.
ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.
இரண்டுபேராய்ப் படுத்துக்கொண்டிருந்தால் அவர்களுக்குச் சூடுண்டாகும்; ஒண்டியாயிருக்கிறவனுக்குச் சூடுண்டாவது எப்படி?
ஒருவனை யாதாமொருவன் மேற்கொள்ள வந்தால் இருவரும் அவனுக்கு எதிர்த்து நிற்கலாம்; முப்புரிநூல் சீக்கிரமாய் அறாது.
இனி ஆலோசனையைக் கேளாத கிழவனும் மூடனுமாகிய ராஜாவைப்பார்க்கிலும், ஏழையும் ஞானியுமாகிய இளைஞனே வாசி.
அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.
சூரியனுக்குக்கீழே ஜீவனுள்ளோர் யாவரும் ராஜாவின் பட்டத்திற்கு வரப்போகிற பிள்ளையின் பட்சத்தில் சார்ந்திருப்பதைக் கண்டேன்.
அவர்களுக்குமுன் அப்படிச் செய்த ஜனங்களின் இலக்கத்திற்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.