நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே.
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்,
சூரியனும், வெளிச்சமும், சந்திரனும், நட்சத்திரங்களும், அந்தகாரப்படாததற்குமுன்னும்,
மழைக்குப்பின் மேகங்கள் திரும்பத்திரும்ப வராததற்குமுன்னும், வீட்டுக் காவலாளிகள் தள்ளாடி, பெலசாலிகள் கூனிப்போய், ஏந்திரம் அரைக்கிறவர்கள் கொஞ்சமானதினால் ஓய்ந்து, பலகணிவழியாய்ப் பார்க்கிறவர்கள் இருண்டுபோகிறதற்குமுன்னும்,
ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும்,
மேட்டுக்காக அச்சமுண்டாகி, வழியிலே பயங்கள் தோன்றி, வாதுமைமரம் பூப்பூத்து, வெட்டுக்கிளியும் பாரமாகி, பசித்தீபனமும் அற்றுப்போகாததற்குமுன்னும், மனுஷன் தன் நித்திய வீட்டுக்குப் போகிறதினாலே, துக்கங்கொண்டாடுகிறவர்கள் வீதியிலே திரியாததற்குமுன்னும்,
வெள்ளிக்கயிறு கட்டுவிட்டு, பொற்கிண்ணி நசுங்கி, ஊற்றின் அருகே சால் உடைந்து, துரவண்டையில் உருளை நொறுங்கி,
இவ்விதமாய் மண்ணானது தான் முன்னிருந்த பூமிக்குத் திரும்பி, ஆவி தன்னைத் தந்த தேவனிடத்திற்கு மறுபடியும் போகாததற்குமுன்னும், அவரை உன் வாலிபப்பிராயத்திலே நினை.
மாயை, மாயை, எல்லாம் மாயை என்று பிரசங்கி சொல்லுகிறான்.
மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப் போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து, அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.
இதமான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க பிரசங்கி வகைதேடினான்; எழுதின வாக்கியங்கள் செவ்வையும் சத்தியமுமானவைகள்.
ஞானிகளின் வாக்கியங்கள் தாற்றுக்கோல்கள்போலவும் சங்கத்தலைவர்களால் அறையப்பட்ட ஆணிகள்போலவும் இருக்கிறது; அவைகள் ஒரே மேய்ப்பனால் அளிக்கப்பட்டது.
என் மகனே! இவைகளினாலே புத்தியடைவாயாக; அநேகம் புஸ்தகங்களை உண்டுபண்ணுகிறதற்கு முடிவில்லை; அதிக படிப்பு உடலுக்கு இளைப்பு.
காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும் நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டுவருவார்.
சாலொமோன் பாடின உன்னதப்பாட்டு.
அவர் தமது வாயின் முத்தங்களால் என்னை முத்தமிடுவாராக: உமது நேசம் திராட்சரசத்தைப்பார்க்கிலும் இன்பமானது.
உமது பரிமளதைலங்கள் இன்பமான வாசனையுள்ளவைகள்; உமது நாமம் ஊற்றுண்ட பரிமளதைலமாயிருக்கிறது; ஆகையால் கன்னியர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
என்னை இழுத்துக்கொள்ளும், உமக்குப் பின்னே ஓடி வருவோம்; ராஜா என்னைத் தமது அறைகளில் அழைத்துக்கொண்டுவந்தார்; நாங்கள் உமக்குள் களிகூர்ந்து மகிழுவோம்; திராட்சரசத்தைப்பார்க்கிலும் உமது நேசத்தை நினைப்போம்; உத்தமர்கள் உம்மை நேசிக்கிறார்கள்.
எருசலேமின் குமாரத்திகளே! கேதாரின் கூடாரங்களைப்போலவும், சாலொமோனின் திரைகளைப்போலவும், நான் கறுப்பாயிருந்தாலும் அழகாயிருக்கிறேன்.
நான் கறுப்பாயிருக்கிறேன் என்று பாராதேயுங்கள்; வெய்யில் என்மேற்பட்டது; என் தாயின் பிள்ளைகள் என்மேல் கோபமாயிருந்து, என்னைத் திராட்சத்தோட்டங்களுக்குக் காவற்காரியாக வைத்தார்கள்; என் சொந்தத் திராட்சத்தோட்டத்தையோ நான் காக்கவில்லை.
என் ஆத்தும நேசரே! உமது மந்தையை எங்கே மேய்த்து, அதை மத்தியானத்தில் எங்கே மடக்குகிறீர்? எனக்குச் சொல்லும்; உமது தோழரின் மந்தைகள் அருகே அலைந்துதிரிகிறவளைப்போல நான் இருக்கவேண்டியதென்ன?
ஸ்திரீகளில் ரூபவதியே! அதை நீ அறியாயாகில், மந்தையின் காலடிகளைத் தொடர்ந்துபோய், மேய்ப்பர்களுடைய கூடாரங்களண்டையில் உன் ஆட்டுக்குட்டிகளை மேயவிடு.
என் பிரியமே! பார்வோனுடைய இரதங்களில் பூண்டிருக்கிற பரிகள் பவுஞ்சுக்கு உன்னை ஒப்பிடுகிறேன்.
ஆபரணாதிகள் பூண்ட உன் கன்னங்களும், ஆரங்கள் பூண்ட உன் கழுத்தும் அழகாயிருக்கிறது.