மோவாபே, துரத்திவிடப்பட்ட என் ஜனங்கள் உன்னிடத்தில் தங்கட்டும்; சங்கரிக்கிறவனுக்குத் தப்ப அவர்களுக்கு அடைக்கலமாயிரு; ஒடுக்குகிறவன் இல்லாதேபோவான்; சங்கரிப்பு ஒழிந்துபோம்; மிதிக்கிறவர்கள் தேசத்தில் இராதபடிக்கு அழிந்துபோவார்கள்.
கிருபையினாலே சிங்காசனம் ஸ்தாபிக்கப்படும்; நியாயம் விசாரித்துத் துரிதமாய் நீதிசெய்கிற ஒருவர் அதின்மேல் தாவீதின் கூடாரத்திலே நியாயாதிபதியாய் உண்மையோடே வீற்றிருப்பார்.
மோவாபின் பெருமையையும், அவன் மேட்டிமையையும், அவன் அகங்காரத்தையும், அவன் உக்கிரத்தையும் குறித்துக் கேட்டோம்; அவன் மெத்தப் பெருமைக்காரன்; ஆனாலும் அவன் வீம்பு செல்லாது.
ஆகையால், மோவாபியர் ஒருவருக்காக ஒருவர் அலறுவார்கள், எல்லாரும் ஏகமாய் அலறுவார்கள்; கிராரேசேத் ஊரின் அஸ்திபாரங்கள் தகர்க்கப்பட்டதே என்று அவைகளுக்காகப் பெருமூச்சுவிடுவார்கள்.
எஸ்போன் ஊர் வயல்கள் வாடிப்போயின; சிப்மாஊர்த் திராட்சச்செடியின் நல்ல கொடிகளை ஜாதிகளின் அதிபதிகள் நறுக்கிப்போட்டார்கள்; அவைகள் யாசேர்மட்டும் சென்று வனாந்தரத்தில் படர்ந்திருந்தது; அவைகளின் கொடிகள் நீண்டுக் கடலுக்கப்பாலே எட்டியிருந்தது.
ஆகையால் யாசேருக்காக அழுததுபோல, சிப்மாஊர்த் திராட்சச்செடிக்காகவும் மிகவும் அழுவேன்; எஸ்போனே, எலெயாலேயே உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று.
பயிர்வெளியிலிருந்து சந்தோஷமும் களிப்பும் அற்றுப்போயின; திராட்சத்தோட்டங்களில் பாடலுமில்லை ஆர்ப்பரிப்புமில்லை; ஆலையில் ரசத்தை மிதிக்கிறவனுமில்லை; சந்தோஷ ஆரவாரத்தை ஓயப்பண்ணினேன்.
ஆகையால் மோவாபினிமித்தம் என் குடல்களும், கிராரேசினிமித்தம் என் உள்ளமும் சுரமண்டலத்தைப்போல் தொனிக்கிறது.
மோவாப் மேடைகளின்மேல் சலித்துப்போனான் என்று காணப்படும்போது, பிரார்த்தனைசெய்யத் தன் பரிசுத்த ஸ்தானத்திலே பிரவேசிப்பான்; ஆனாலும் அநுகூலப்படமாட்டான்.
மோவாபைக்குறித்து அக்காலத்திலே கர்த்தர் சொன்ன வார்த்தை இதுவே.
ஒரு கூலிக்காரனுடைய வருஷங்களுக்கொத்த மூன்று வருஷங்களுக்குள்ளே மோவாபின் மகிமையும் அதின் மகா ஜனக்கூட்டமும் சீரழிந்துபோம்; அதில் மீதியாயிருப்பது மிகவும் சிறிதும் அற்பமுமாயிருக்கும் என்று கர்த்தர் இப்பொழுது சொல்லுகிறார்.
தமஸ்குவின் பாரம். இதோ, தமஸ்குவானது நகரமாயிராமல் தள்ளப்பட்டு, பாழான மண்மேடாகும்.
ஆரோவேரின் பட்டணங்கள் பாழாய் விடப்பட்டு, மந்தைகளின் வெளியாயிருக்கும்; மிரட்டுவாரில்லாமல் அவைகள் அங்கே படுத்துக்கொள்ளும்.
அரண் எப்பிராயீமையும், ராஜாங்கம் தமஸ்குவையும் விட்டொழியும்; இஸ்ரவேல் புத்திரருடைய மகிமைக்கு நேரிட்டதுபோல சீரியாவில் மீதியாயிருப்பவர்களுக்கும் நேரிடும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
அக்காலத்திலே யாக்கோபின் மகிமை குறைந்துபோம், அவனுடைய கொழுத்த தேகம் மெலிந்துபோம்.
ஒருவன் ஓங்கின பயிரை அரிந்து, தன் கையினால் கதிர்களை அறுத்து, ரெப்பாயீம் பள்ளத்தாக்கிலே கதிர்களைச் சேர்க்கிறதுபோலிருக்கும்.
ஆனாலும் ஒலிவமரத்தை உலுக்கும்போது நுனிக்கொம்பிலே இரண்டுமூன்று காய்களும், காய்க்கிற அதின் கிளைகளிலே நாலைந்து காய்களும் மீதியாயிருப்பதுபோல, அதிலே பின்பறிப்புக்குக் கொஞ்சம் மீதியாயிருக்குமென்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்.
அக்காலத்திலே மனுஷன் தன் கைகளின் கிரியையாகிய பீடங்களை நோக்காமலும், தன் விரல்கள் உண்டுபண்ணின தோப்புவிக்கிரகங்களையும், சிலைகளையும் நோக்காமலும்,
தன்னை உண்டாக்கினவரையே நோக்குவான், அவன் கண்கள் இஸ்ரவேலின் பரிசுத்தரையே நோக்கிக்கொண்டிருக்கும்.
அக்காலத்திலே அவர்களுடைய அரணான பட்டணங்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு மீதியாய் வைக்கப்பட்ட தழையைப்போலவும், நுனிக்கொம்பைப்போலவுமாகி, பாழாய்க் கிடக்கும்.
உன் பெலமாகிய கன்மலையை நீ நினையாமல், உன் இரட்சிப்பாகிய தேவனை மறந்தாய்; ஆதலால் நீ நேர்த்தியான நாற்றுகளை நட்டாலும், அந்நிய தேசத்துக் கன்றுகளை வைத்தாலும்,
பகற்காலத்திலே உன் நாற்றை வளரவும், விடியற்காலத்திலே உன் விதையை முளைக்கவும் பண்ணினாலும், பலனைச் சேர்க்கும் நாளிலே துக்கமும் கடும்வேதனையுமே உங்கள் அறுப்பாயிருக்கும்.
ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது.
ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
இதோ, சாயங்காலத்திலே கலக்கமுண்டாகும், விடியற்காலத்துக்குமுன் அவர்கள் ஒழிந்துபோவார்கள்; இதுவே நம்மைக் கொள்ளையாடுகிறவர்களின் பங்கும், நம்மைச் சூறையாடுகிறவர்களின் வீதமுமாயிருக்கும்.