என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.
பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது.
மாரியும் உறைந்த மழையும் வானத்திலிருந்து இறங்கி, அவ்விடத்துக்குத் திரும்பாமல் பூமியை நனைத்து, அதில் முளை கிளம்பி விளையும்படிச்செய்து, விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறவனுக்கு ஆகாரத்தையும் கொடுக்கிறது எப்படியோ,
அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
நீங்கள் மகிழ்ச்சியாய்ப் புறப்பட்டு, சமாதானமாய்க் கொண்டுபோகப்படுவீர்கள்; பர்வதங்களும் மலைகளும் உங்களுக்கு முன்பாகக் கெம்பீரமாய் முழங்கி, வெளியின் மரங்களெல்லாம் கைகொட்டும்.
முட்செடிக்குப் பதிலாகத் தேவதாரு விருட்சம் முளைக்கும், காஞ்சொறிக்குப் பதிலாக மிருதுச்செடி எழும்பும்; அது கர்த்தருக்குக் கீர்த்தியாகவும், நிர்மூலமாகாத நித்திய அடையாளமாகவும் இருக்கும்.
கர்த்தர் சொல்லுகிறார்: நீங்கள் நியாயத்தைக் கைக்கொண்டு, நீதியைச் செய்யுங்கள்; என் இரட்சிப்பு வரவும், என் நீதி வெளிப்படவும் சமீபமாயிருக்கிறது.
இப்படிச் செய்கிற மனுஷனும், இதைப் பற்றிக்கொண்டிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி ஆசரித்து, ஒரு பொல்லாப்பையும் செய்யாதபடி தன் கையைக் காத்துக்கொண்டிருக்கிற மனுபுத்திரனும் பாக்கியவான்.
கர்த்தரைச் சேர்ந்த அந்நியபுத்திரன்: கர்த்தர் என்னைத் தம்முடைய ஜனத்தைவிட்டு முற்றிலும் பிரித்துப்போடுவாரென்று சொல்லானாக; அண்ணகனும்: இதோ, நான் பட்டமரமென்று சொல்லானாக.
என் ஓய்வுநாட்களை ஆசரித்து, எனக்கு இஷ்டமானவைகளைத் தெரிந்துகொண்டு, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொள்ளுகிற அண்ணகர்களைக் குறித்துக் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:
நான் அவர்களுக்கு என் ஆலயத்திலும், என் மதில்களுக்குள்ளும் குமாரருக்கும் குமாரத்திகளுக்குமுரிய இடத்தையும் கீர்த்தியையும்பார்க்கிலும், உத்தம இடத்தையும் கீர்த்தியையும் கொடுப்பேன், என்றும் அழியாத நித்திய நாமத்தை அவர்களுக்கு அருளுவேன்.
கர்த்தரைச் சேவிக்கவும், கர்த்தருடைய நாமத்தை நேசிக்கவும், அவருக்கு ஊழியக்காரராயிருக்கவும், அவரைச் சேர்ந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தக்குலைச்சலாக்காதபடி ஆசரித்து, என் உடன்படிக்கையைப் பற்றிக்கொண்டிருக்கிற அந்நியபுத்திரர் அனைவரையும்,
நான் என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவந்து: என் ஜெபவீட்டிலே அவர்களை மகிழப்பண்ணுவேன்; அவர்களுடைய சர்வாங்கதகனங்களும், அவர்களுடைய பலிகளும், என் பலிபீடத்தின்மேல் அங்கிகரிக்கப்பட்டிருக்கும்; என்னுடைய வீடு சகல ஜனங்களுக்கும் ஜெபவீடு என்னப்படும்.
இஸ்ரவேலில் தள்ளுண்டவர்களைச் சேர்க்கிற கர்த்தராகிய ஆண்டவர்: அவனிடத்தில் சேர்க்கப்பட்டவர்களையல்லாமல் இன்னும் அவனிடத்தில் சேர்ப்பேன் என்கிறார்.
வெளியில் சஞ்சரிக்கிற சகல மிருகங்களே, காட்டிலுள்ள சகல மிருகங்களே, பட்சிக்க வாருங்கள்.
அவனுடைய காவற்காரர் எல்லாரும் ஒன்றும் அறியாத குருடர்; அவர்களெல்லாரும் குலைக்கமாட்டாத ஊமையான நாய்கள்; தூக்கமயக்கமாய்ப் புலம்புகிறவர்கள், படுத்துக்கொள்ளுகிறவர்கள், நித்திரைப் பிரியர்;
திருப்தியடையாமலிருக்கும் பெருவயிற்று நாய்கள்; பகுத்தறிவில்லாத மேய்ப்பர்; அவர்களில் ஒவ்வொருவனும் தன் தன் வழியையும், அவனவன் தன் தன் மூலையிலிருந்து தன் தன் பொழிவையும் நோக்கிக்கொண்டிருக்கிறான்.
வாருங்கள், திராட்சரசத்தைக் கொண்டுவருவேன், மதுவைக் குடிப்போம்; நாளையத்தினம் இன்றையத்தினம்போலவும், இதற்கு அதிகமாகவும் இருக்கும் என்பார்கள்.
நீதிமான் மடிந்துபோகிறான், ஒருவரும் அதை மனதில் வைக்கிறதில்லை; புத்திமான்கள் எடுத்துக்கொள்ளப்படுகிறார்கள், ஆனாலும் தீங்குவராததற்குமுன்னே நீதிமான் எடுத்துக்கொள்ளப்படுகிறான் என்பதைச் சிந்திப்பார் இல்லை.
நேர்மையாய் நடந்தவர்கள் சமாதானத்துக்குள் பிரவேசித்து, தங்கள் படுக்கைகளில் இளைப்பாறுகிறார்கள்.
நாள்பார்க்கிறவளின் பிள்ளைகளே, விபசாரனுக்கும் வேசிக்கும் பிறந்த சந்ததியாரே, நீங்கள் இங்கே கிட்டிவாருங்கள்.
நீங்கள் யாரைப் பரியாசம்பண்ணுகிறீர்கள்? யாருக்கு விரோதமாய் வாயைத் திறந்து, நாக்கை நீட்டுகிறீர்கள்? நீங்கள் துரோகம்பண்ணுகிற பிள்ளைகளும், கள்ளச் சந்ததியாருமல்லவோ?
நீங்கள் பச்சையான சகல மரத்தின்கீழும், விக்கிரக தேவர்களோடே மோகாக்கினியில் வெந்து, பள்ளத்தாக்குகளிலே கன்மலை வெடிப்புகளின் கீழ்ப் பிள்ளைகளைக் கொன்றுபோடுகிறவர்கள்.
பள்ளத்தாக்குகளிலுள்ள வழவழப்பான சிலைகளிடத்தில் உன் பங்கு இருக்கிறது; அவைகள், அவைகளே உன் வீதம்; அவைகளுக்கு நீ பானபலியை வார்த்து, போஜனபலியையும் செலுத்துகிறாய்; இவைகளின்மேல் பிரியப்படுவேனோ?
நீ உயரமும் உன்னதமுமான மலைகளின்மேல் உன் மஞ்சத்தை வைக்கிறாய்; அங்கேயும் பலியிடும்படி ஏறுகிறாய்.