பாபிலோன் ராஜா அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவைத் தேசத்தின்மேல் அதிகாரியாக்கினான் என்றும், பாபிலோனுக்குச் சிறைகளாகக் கொண்டுபோகப்பட்டிராத குடிகளில் ஏழைகளான புருஷரையும் ஸ்திரீகளையும் குழந்தைகளையும் அவனுடைய விசாரிப்புக்கு ஒப்புவித்தான் என்றும், வெளியிலிருக்கிற இராணுவச் சேர்வைக்காரர் அனைவரும் அவர்களுடைய மனுஷரும் கேட்டபோது,
அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன்கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.
அப்பொழுது சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகன் கெதலியா அவர்களையும் அவர்கள் மனுஷரையும் நோக்கி: நீங்கள் கல்தேயரைச் சேவிக்கப் பயப்படவேண்டாம், நீங்கள் தேசத்திலிருந்து பாபிலோன் ராஜாவைச் சேவியுங்கள்; அப்பொழுது உங்களுக்கு நன்மையுண்டாகும்.
நானோவெனில், இதோ, நம்மிடத்திலே வருகிற கல்தேயரிடத்தில் சேவிக்கும்படி மிஸ்பாவிலே குடியிருக்கிறேன்; நீங்களோ போய், திராட்சரசத்தையும் பழங்களையும் எண்ணெயையும் சேர்த்து, உங்கள் பாண்டங்களில் வைத்து, உங்கள் வசமாயிருக்கிற ஊர்களில் குடியிருங்கள் என்று ஆணையிட்டுச் சொன்னான்.
மோவாபிலும் அம்மோன் புத்திரரிடத்திலும் ஏதோமிலும் சகல தேசங்களிலும் இருக்கிற யூதரும், பாபிலோன் ராஜா யூதாவில் சிலர் மீதியாயிருக்கக் கட்டளையிட்டானென்றும், சாப்பானுடைய குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவை அவர்கள்மேல் அதிகாரியாக்கினானென்றும், கேட்டபோது,
எல்லா யூதரும் தாங்கள் துரத்துண்ட எல்லா இடங்களிலுமிருந்து, யூதா தேசத்தில் கெதலியாவினிடத்தில் மிஸ்பாவுக்கு வந்து, திராட்சரசத்தையும் பழங்களையும் மிகுதியாய்ச் சேர்த்துவைத்தார்கள்.
அப்பொழுது கரேயாவின் குமாரனாகிய யோகனானும் வெளியிலே இருந்த சகல இராணுவச் சேர்வைக்காரரும் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்து,
உம்மைக் கொன்றுபோடும்படிக்கு, அம்மோன் புத்திரரின் ராஜாவாகிய பாலிஸ் என்பவன், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை அனுப்பினானென்பதை நீர் அறியவில்லையோ என்றார்கள்; ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா அவர்கள் வார்த்தையை நம்பவில்லை.
பின்னும் கரேயாவின் குமாரனாகிய யோகனான் மிஸ்பாவிலே கெதலியாவோடே இரகசியமாய்ப் பேசி: நான் போய் ஒருவரும் அறியாமல் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலை வெட்டிப்போட உத்தரவாகவேண்டும்; உம்மிடத்தில் சேர்ந்த யூதரெல்லாரும் சிதறுண்டுபோகவும் யூதாவில் மீந்தவர்கள் அழியவும் அவன் உம்மைக் கொன்றுபோடவேண்டியதென்ன என்றான்.
ஆனாலும் அகிக்காமின் குமாரனாகிய கெதலியா கரேயாவின் குமாரனாகிய யோகனானை நோக்கி: நீ இந்தக் காரியத்தைச் செய்யாதே; இஸ்மவேலின்மேல் நீ பொய் சொல்லுகிறாய் என்றான்.
பின்பு ஏழாம் மாதத்திலே ராஜவம்சத்தில் பிறந்தவனும், எலிசாமாவின் குமாரனாகிய நெத்தானியாவின் மகனுமான இஸ்மவேலும், அவனுடனேகூட ராஜாவின் பிரபுக்களான பத்துப்பேரும் மிஸ்பாவுக்கு அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வந்து, அங்கே ஏகமாய் போஜனம்பண்ணினார்கள்.
அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த பத்துப்பேரும் எழும்பி, பாபிலோன் ராஜா தேசத்தின்மேல் அதிகாரியாக வைத்த சாப்பானின் குமாரனாகிய அகிக்காமின் மகனான கெதலியாவைப் பட்டயத்தால் வெட்டினார்கள்.
மிஸ்பாவிலே கெதலியாவினிடத்தில் இருந்த எல்லா யூதரையும், அங்கே காணப்பட்ட யுத்தமனுஷராகிய கல்தேயரையும் இஸ்மவேல் வெட்டிப்போட்டான்.
அவன் கெதலியாவைக் கொன்றபின்பு, மறுநாளிலே அதை ஒருவரும் இன்னும் அறியாதிருக்கையில்:
தாடியைச் சிரைத்து, வஸ்திரங்களைக் கிழித்து, தங்களைக் கீறிக்கொண்டிருந்த எண்பதுபேர் சீகேமிலும் சீலோவிலும் சமாரியாவிலுமிருந்து, தங்கள் கைகளில் காணிக்கைகளையும் தூபவர்க்கங்களையும், கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுபோகும்படி வந்தார்கள்.
அப்பொழுது நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து புறப்பட்டு, அவர்களுக்கு எதிராக அழுதுகொண்டே நடந்துவந்து, அவர்களைச் சந்தித்தபோது, அவர்களை நோக்கி: அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவினிடத்தில் வாருங்கள் என்றான்.
அவர்கள் நகரத்தின் மத்தியில் வந்தபோது, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், அவனோடிருந்த மனுஷரும் அவர்களை வெட்டி ஒரு பள்ளத்திலே தள்ளிப்போட்டார்கள்.
ஆனாலும் அவர்களில் பத்துப்பேர் மீந்திருந்தார்கள்; அவர்கள் இஸ்மவேலைப்பார்த்து; எங்களைக் கொலை செய்யவேண்டாம்; கோதுமையும் வாற்கோதுமையும் எண்ணெயும் தேனுமுள்ள புதையல்கள் எங்களுக்கு நிலத்தின்கீழ் இருக்கிறது என்றார்கள்; அப்பொழுது அவர்களை அவர்கள் சகோதரரோடுங்கூட கொலைசெய்யாமல் விட்டுவைத்தான்.
இஸ்மவேல் கெதலியாவினிமித்தம் வெட்டின மனுஷருடைய பிரேதங்களையெல்லாம் எறிந்துபோட்ட பள்ளமோவெனில், ஆசா என்னும் ராஜா இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷாவினிமித்தம் உண்டுபண்ணின பள்ளந்தானே; அதை நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் வெட்டுண்ட பிரேதங்களால் நிரப்பினான்.
பின்பு இஸ்மவேல் மிஸ்பாவில் இருக்கிற மீதியான ஜனத்தையெல்லாம் சிறைப்படுத்திக்கொண்டுபோனான்; ராஜாவின் குமாரத்திகளையும் காவற்சேனாதிபதியாகிய நேபுசராதான் அகிக்காமின் குமாரனாகிய கெதலியாவின் விசாரிப்புக்கு ஒப்புவித்துப் போன மிஸ்பாவிலுள்ள மீதியான சகல ஜனங்களையும் நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் சிறைப்படுத்திக்கொண்டு அம்மோன் புத்திரர் பட்சத்தில் போகப் புறப்பட்டான்.
நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேல் செய்த பொல்லாப்பையெல்லாம் கரேயாவின் குமாரனாகிய யோகனானும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரும் கேட்டபோது,
அவர்கள் புருஷரையெல்லாம் கூட்டிக்கொண்டு, நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோடே யுத்தம்பண்ணப்போய், அவனைக் கிபியோனிலிருக்கும் பெருங்குளத்துத் தண்ணீரண்டையிலே கண்டார்கள்.
அப்பொழுது இஸ்மவேலோடிருந்த சகல ஜனங்களும் கரேயாவின் குமாரனாகிய யோகனானையும், அவனோடிருந்த எல்லா இராணுவச் சேர்வைக்காரரையும் கண்டு சந்தோஷப்பட்டு,
இஸ்மவேல் மிஸ்பாவிலிருந்து சிறைப்பிடித்துக்கொண்டுபோன ஜனங்களெல்லாம் பின்னிட்டுத் திரும்பி, கரேயாவின் குமாரனாகிய யோகனானிடத்தில் வந்துவிட்டார்கள்.
நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலோ, எட்டுப்பேரோடுங்கூட யோகனானின் கைக்குத் தப்பி, அம்மோன் புத்திரரிடத்தில் போனான்.