அவர்களைக் கண்டுபிடித்தவர்கள் எல்லாரும் அவர்களைப் பட்சித்தார்கள்; அவர்களுடைய சத்துருக்கள்: எங்கள்மேல் குற்றமில்லை; அவர்கள் நீதியின் வாசஸ்தலத்திலே கர்த்தருக்கு விரோதமாக, தங்கள் பிதாக்கள் நம்பின கர்த்தருக்கு விரோதமாகவே பாவஞ்செய்தார்கள் என்றார்கள்.
பாபிலோனின் நடுவிலிருந்தோடி, கல்தேயரின் தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, மந்தையின்முன்நடக்கும் கடாக்களைப்போல் இருங்கள்.
இதோ, நான் பாபிலோனுக்கு விரோதமாக வடதேசத்தில் இருக்கும் பெரிய ஜாதிகளின் கூட்டத்தை எழுப்பி, அதை வரப்பண்ணுவேன்; அவர்கள் அதற்கு விரோதமாக ஆயத்தம்பண்ணுவார்கள்; அங்கேயிருந்து வருகிறவர்களால் அது பிடிக்கப்படும்; அவர்களுடைய அம்புகள் சாமர்த்தியமுள்ள பராக்கிரமசாலியின் அம்புகளைப்போல் இருக்கும்; அவைகள் விருதாவாய்த் திரும்புவதில்லை.
கல்தேயா கொள்ளையாகும்; அதைக் கொள்ளையிடுகிறவர்கள் எல்லாரும் பரிபூரணமடைவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
என் சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே, புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலியரிஷபம்போல் முக்காரம் போடுகிறீர்களே.
உங்கள் தாய் மிகவும் வெட்கி, உங்களைப் பெற்றவள் நாணமடைவாள்; இதோ, அவள் ஜாதிகளுக்குள்ளே கடைசியாவதுமன்றி, வனாந்தரமும் வறட்சியும் அந்தரவெளியுமாவாள்.
கர்த்தரின் கோபத்தினாலே அது குடியற்றதும் பெரும்பாழுமாயிருக்கும்; பாபிலோனைக் கடந்துபோகிற எவனும் அதின் எல்லா வாதைகளினிமித்தமும் பிரமித்து, ஈசல்போடுவான்.
நீங்கள் எல்லாரும் பாபிலோனுக்கு விரோதமாய்ச் சுற்றிலும் அணிவகுத்து நின்று, வில்லை நாணேற்றி, அதின்மேல் அம்புகளை எய்யுங்கள்; அம்புச்செலவைப் பாராதேயுங்கள்; அது, கர்த்தருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தது.
அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் ஆர்ப்பரியுங்கள்; அது தன்னைக் கையளித்தது; அதின் அஸ்திபாரங்கள் விழுந்தது, அதின் மதில்கள் இடிக்கப்பட்டது; இது கர்த்தர் வாங்கும் பழி; அதினிடத்தில் பழிவாங்குங்கள்; அது செய்ததுபோலவே நீங்களும் அதற்குச் செய்யுங்கள்.
விதைவிதைக்கிறவனையும் அறுப்புக்காலத்தில் அரிவாளைப் பிடிக்கிறவனையும் பாபிலோனில் இராதபடிச் சங்காரம்பண்ணுங்கள்; கொல்லுகிற பட்டயத்துக்குத் தப்ப அவரவர் தங்கள் ஜனத்தண்டைக்குத் திருப்பிக்கொண்டு, அவரவர் தங்கள் தேசத்துக்கு ஓடிப்போவார்கள்.
இஸ்ரவேல் தெறிப்பட்டுப்போன ஆடு, சிங்கங்கள் அதைத் துரத்தின; முதலில் அசீரியா ராஜா அதைப் பட்சித்தான்; கடைசியில் பாபிலோன் ராஜாவாகிய இந்த நேபுகாத்நேச்சார் அதின் எலும்புகளை முறித்தான்.
ஆகையால் இஸ்ரவேலின் தேவனாகிய சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் அசீரியா ராஜாவை தண்டித்ததுபோல் பாபிலோன் ராஜாவையும் அவன் தேசத்தையும் தண்டித்து,
இஸ்ரவேலை அதின் வாசஸ்தலத்துக்குத் திரும்பிவரப்பண்ணுவேன்; அப்பொழுது அது கர்மேலிலும் பாசானிலும் மேயும்; எப்பிராயீமின் மலைகளிலும் கீலேயாத்திலும் அதின் ஆத்துமா திருப்தியாகும்.
அந்நாட்களிலும், அக்காலத்திலும் இஸ்ரவேலின் அக்கிரமம் தேடப்பட்டாலும் அது காணாதிருக்கும்; யூதாவின் பாவங்கள் தேடப்பட்டாலும் அவைகள் கிடையாதிருக்கும்; நான் மீதியாக வைக்கிறவர்களுக்கு மன்னிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
மெரதாயீம் தேசத்துக்கு விரோதமாகவும் பேகோடு குடிகளுக்கு விரோதமாகவும் நீ போய், அவர்களைத் துரத்தி, யாவையும் பாழாக்கிச் சங்காரம்பண்ணி, நான் உனக்குக் கட்டளையிட்டபடியெல்லாம் செய் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
தேசத்திலே யுத்தத்தின் சத்தமும் மகா சங்காரமும் உண்டு.
சர்வ பூமியின் சம்மட்டி எப்படி முறித்து உடைக்கப்பட்டது! ஜாதிகளுக்குள்ளே பாபிலோன் எப்படிப் பாழாய்ப்போயிற்று!
பாபிலோனே, உனக்குக் கண்ணியை வைத்தேன், நீ அதை அறியாமல் அதிலே சிக்குண்டுபோனாய்; நீ அகப்பட்டும் பிடிபட்டும் போனாய், நீ கர்த்தரோடே யுத்தங்கலந்தாயே.
கர்த்தர் தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தம்முடைய சினத்தின் அஸ்திராயுதங்களை எடுத்துக்கொண்டுவந்தார்; இது கல்தேயர் தேசத்திலே சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் செய்கிற கிரியை.
கடையாந்தரத்திலிருந்து அதற்கு விரோதமாக வந்து, அதின் களஞ்சியங்களைத் திறந்து, குவியல் குவியலாகக் குவித்து, அதில் ஒன்றும் மீதியாகாதபடிக்கு அதை முற்றிலும் அழித்துப்போடுங்கள்.
அதின் காளைகளையெல்லாம் வெட்டுங்கள்; அவைகள் கொலைக்களம் சேரக்கடவது; ஐயோ! அவர்கள் விசாரிக்கப்படும் நாள் வந்ததே.
நம்முடைய தேவன் பழிவாங்கினதை, அவர் தமது ஆலயத்துக்காகப் பழிவாங்கினதையே, சீயோனிலே அறிவிக்கும்படிக்கு, பாபிலோன் தேசத்திலிருந்து தப்பியோடி வந்தவர்களின் சத்தம் கேட்கப்படும்.
பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள்; ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் கிரியைக்குத்தக்க பலனை அதற்குச் சரிகட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்புசெய்தது.
ஆகையால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுவார்கள்; அதின் யுத்தவீரர் எல்லாரும் அந்நாளிலே சங்காரமாவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இதோ, இடும்புள்ளவனே, நான் உனக்கு விரோதமாக வருகிறேன் என்று சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நான் உன்னை விசாரிக்குங்காலமாகிய உன்னுடைய நாள் வந்தது.