உன் வியாபாரத்தின் மிகுதியினால், உன் கொடுமை அதிகரித்து நீ பாவஞ்செய்தாய்; ஆகையால் நான் உன்னை தேவனுடைய பர்வதத்திலிருந்து ஆகாதவனென்று தள்ளி, காப்பாற்றுகிற கேருபாய் இருந்த உன்னை அக்கினிமயமான கற்களின் நடுவே இராதபடிக்கு அழித்துப்போடுவேன்.
உன் அழகினால் உன் இருதயம் மேட்டிமையாயிற்று; உன் மினுக்கினால் உன் ஞானத்தைக் கெடுத்தாய்; உன்னைத் தரையிலே தள்ளிப்போடுவேன்; ராஜாக்கள் உன்னைப் பார்க்கும்படி உன்னை அவர்களுக்கு முன்பாக வேடிக்கையாக்குவேன்.
உன் அக்கிரமங்களின் ஏராளத்தினாலும், உன் வியாபாரத்தின் அநீதத்தினாலும் உன் பரிசுத்த ஸ்தலங்களைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினாய்; ஆகையால் உன்னைப் பட்சிப்பதாகிய ஒரு அக்கினியை நான் உன் நடுவிலிருந்து புறப்படப்பண்ணி, உன்னைப்பார்க்கிற எல்லாருடைய கண்களுக்கு முன்பாகவும் உன்னைப் பூமியின்மேல் சாம்பலாக்குவேன்.
ஜனங்களில் உன்னை அறிந்த அனைவரும் உன்னிமித்தம் திகைப்பார்கள்; மகா பயங்கரமாவாய்; இனி ஒருபோதும் இருக்கமாட்டாய் என்று உரைக்கிறார் என்று சொல் என்றார்.
பின்னும் கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
மனுபுத்திரனே, நீ உன் முகத்தைச் சீதோனுக்கு எதிராகத் திருப்பி, அதற்கு விரோதமாகத் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
கர்த்தராகிய தேவன் சொல்லுகிறார்; சீதோனே, இதோ, நான் உனக்கு விரோதமாக வந்து, உன் நடுவிலே மகிமைப்படுவேன்; நான் அதிலே நியாயத்தீர்ப்புகளைச் செய்து, அதிலே பரிசுத்தரென்று விளங்கும்போது, நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
நான் அதிலே கொள்ளைநோயையும், அதின் வீதிகளில் இரத்தத்தையும் வரப்பண்ணுவேன்; அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் வந்த பட்டயத்தினால் காயம்பட்டவர்கள் அதின் நடுவிலே வெட்டுண்டு விழுவார்கள்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்.
இஸ்ரவேல் வம்சத்தாரை இகழ்ந்த அவர்களுடைய சுற்றுப்புறத்தாராகிய அனைவரிலும், இனித் தைக்கிற முள்ளும் நோவுண்டாக்குகிற நெரிஞ்சிலும் அவர்களுக்கு இராது; அப்பொழுது நான் கர்த்தராகிய ஆண்டவரென்று அறிந்துகொள்வார்கள்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால், நான் இஸ்ரவேல் வம்சத்தாரை, அவர்கள் சிதறடிக்கப்பட்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டுவந்து, அவர்களால் ஜாதிகளின் கண்களுக்குமுன்பாகப் பரிசுத்தரென்று விளங்கும்போது, அவர்கள் என் தாசனாகிய யாக்கோபுக்கு நான் கொடுத்த தங்களுடைய தேசத்திலே குடியிருப்பார்கள்.
அவர்களுடைய சுற்றுப்புறத்தாரில் அவர்களை இகழ்ந்த அனைவரிலும் நான் நியாயத்தீர்ப்புகளைச் செய்யும்போது, அவர்கள் அதிலே சுகமாய்க் குடியிருந்து, வீடுகளைக் கட்டி, திராட்சத்தோட்டங்களை நாட்டி, சுகமாய் வாழ்ந்து நான் தங்கள் தேவனாகிய கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள் என்கிறார் என்று சொல் என்றார்.
பத்தாம் வருஷம் பத்தாம் மாதம் பன்னிரண்டாந்தேதியிலே கர்த்தருடைய வார்த்தை எனக்கு உண்டாகி, அவர்:
மனுபுத்திரனே, நீ எகிப்தின் ராஜாவாகிய பார்வோனுக்கு எதிராக உன் முகத்தைத் திருப்பி, அவனுக்கும் எகிப்து முழுதுக்கும் விரோதமாய்த் தீர்க்கதரிசனம் உரைத்து, சொல்லவேண்டியது என்னவென்றால்:
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார், எகிப்தின் ராஜாவாகிய பார்வோனே, நீ உன் நதிகளின் நடுவிலே படுத்துக்கொண்டு: என் நதி என்னுடையது, நான் அதை எனக்காக உண்டுபண்ணினேன் என்று சொல்லுகிற பெரிய முதலையே, இதோ, நான் உனக்கு விரோதமாய் வந்து,
உன் வாயிலே துறடுகளை மாட்டி, உன் நதிகளின் மச்சங்களை உன் செதிள்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்து, உன்னை உன் நதிகளின் நடுவிலிருந்து தூக்கிவிடுவேன்; உன் நதிகளின் மச்சங்களெல்லாம் உன் செதில்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
உன்னையும் உன் நதிகளின் எல்லா மச்சங்களையும் வனாந்தரத்திலே போட்டுவிடுவேன்; வெட்டவெளியிலே விழுவாய்; நீ சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை; உன்னை பூமியின் மிருகங்களுக்கும் ஆகாயத்தின் பறவைகளுக்கும் இரையாகக் கொடுப்பேன்.
அப்பொழுது எகிப்துதேசத்தின் குடிகளெல்லாரும் நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; அவர்கள் இஸ்ரவேல் வம்சத்தாருக்கு நாணற்கோலாயிருந்தார்களே.
அவர்கள் உன்னைக் கையிலே பிடிக்கும்போது, நீ ஒடிந்துபோய், அவர்கள் விலாவையெல்லாம் பிளப்பாய்; அவர்கள் உன்மேல் சாயும்போது, நீ முறிந்து, அவர்கள் இடுப்பு முழுவதையும் மரத்துப்போகப்பண்ணுவாய்.
ஆகையால் கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் உன்மேல் பட்டயத்தை வரப்பண்ணி, உன்னில் மனுஷரையும் மிருகங்களையும் சங்காரம்பண்ணுவேன்.
எகிப்துதேசம் பாழும் வனாந்தரமுமாகும்; அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்துகொள்வார்கள்; நதி என்னுடையது, நான் அதை உண்டாக்கினேன் என்று சொன்னானே.
ஆகையால், இதோ, நான் உனக்கும் உன் நதிகளுக்கும் விரோதமாக வந்து, மிக்தோல்முதல் எத்தியோப்பியாவின் எல்லையிலுள்ள செவெனேவரைக்கும் எகிப்துதேசத்தை அவாந்தரமும் பாழுமான வனாந்தரங்களாக்குவேன்.
மனுஷனுடைய கால் அதைக் கடப்பதுமில்லை, மிருகஜீவனுடைய கால் அதை மிதிப்பதுமில்லை; அது நாற்பது வருஷம் குடியற்றிருக்கும்.
எகிப்துதேசத்தைப் பாழாய்ப்போன தேசங்களின் நடுவிலே பாழாய்ப்போகப்பண்ணுவேன்; அதின் பட்டணங்கள் அவாந்தரமாக்கப்பட்ட பட்டணங்களின் நடுவிலே நாற்பதுவருஷம் பாழாய்க்கிடக்கும்; நான் எகிப்தியரை ஜாதிகளுக்குள்ளே சிதறடித்து, அவர்களை தேசங்களுக்குள்ளே தூற்றிவிடுவேன்.
கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறது என்னவென்றால்: நாற்பதுவருஷம் முடியும்போது, நான் எகிப்தியரை அவர்கள் சிதறுண்டிருக்கிற ஜனங்களிடத்திலிருந்து சேர்த்துக்கொண்டு,
எகிப்தியரின் சிறையிருப்பைத் திருப்பி, அவர்களை அவர்களுடைய ஜநநதேசமாகிய பத்ரோஸ் தேசத்திலே திரும்பிவரப்பண்ணுவேன்; அங்கே அவர்கள் அற்ப ராஜ்யமாயிருப்பார்கள்.