Total Matches: 31082

எசேக்கியேல் 40:46

வடதிசைக்கு எதிராயிருக்கிற அறையோ, பலிபீடத்தின் காவலைக்காக்கிற ஆசாரியர்களுடையது; இவர்கள் லேவியின் புத்திரரில் கர்த்தருக்கு ஆராதனை செய்கிறதற்காக அவரிடத்தில் சேருகிற சாதோக்கின் புத்திரர் என்றார்.

எசேக்கியேல் 40:47

அவர் பிராகாரத்தை நூறுமுழ நீளமாகவும் நூறுமுழ அகலமாகவும் அளந்தார், அது சதுரமாயிருந்தது; பலிபீடமோ ஆலயத்துக்கு முன்பாக இருந்தது.

எசேக்கியேல் 40:48

பின்பு அவர் என்னை ஆலய மண்டபத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், மண்டபத்தின் தூணாதாரத்தை இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப்புறத்தில் ஐந்து முழமுமாக அளந்தார்; வாசலின் அகலம் இந்தப்புறம் மூன்றுமுழமும் அந்தப்புறம் மூன்றுமுழமுமாயிருந்தது.

எசேக்கியேல் 40:49

மண்டபத்தின் நீளம் இருபதுமுழமும், அகலம் பதினொரு முழமுமாயிருந்தது; அதற்கு ஏறிப்போகிற படிகளும் இருந்தது; தூணாதாரங்களிலே இந்தப்புறத்தில் ஒரு தூணும் அந்தப்புறத்தில் ஒரு தூணும் இருந்தது.

எசேக்கியேல் 41:1

பின்பு அவர் என்னை தேவாலயத்திற்கு அழைத்துக்கொண்டுபோய், தூணாதாரங்களை இந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமும் அந்தப்புறத்தில் ஆறுமுழ அகலமுமாய் அளந்தார்; அது வாசஸ்தலத்தின் அகல அளவாம்.

எசேக்கியேல் 41:2

வாசல் நடையின் அகலம் பத்து முழமும் வாசல் நடையின் பக்கங்கள் இந்தப்புறத்தில் ஐந்து முழமும் அந்தப் புறத்தில் ஐந்து முழமுமாயிருந்தது; அதின் நீளத்தை நாற்பது முழமும் அகலத்தை இருபது முழமுமாக அளந்தார்.

எசேக்கியேல் 41:3

பின்பு அவர் உள்ளேபோய், வாசல் நடையின் தூணாதாரங்களை இரண்டு முழமாகவும், வாசல் நடையை ஆறுமுழமாகவும், வாசல் நடையின் அகலத்தை ஏழுமுழமாகவும் அளந்தார்.

எசேக்கியேல் 41:4

பின்பு அவர் தேவாலயத்தின் முன்புறத்திலே அதின் நீளத்தை இருபது முழமாகவும், அதின் அகலத்தை இருபது முழமாகவும் அளந்து, என்னை நோக்கி: இது மகா பரிசுத்த ஸ்தலம் என்றார்.

எசேக்கியேல் 41:5

பின்பு அவர் ஆலயத்தின் சுவரை ஆறு முழமாகவும், ஆலயத்தைச் சுற்றிலும் இருந்த சுற்றுக்கட்டினுடைய அகலத்தை நாலுமுழமாகவும் அளந்தார்.

எசேக்கியேல் 41:6

இந்தச் சுற்றுக்கட்டுகள் பக்கக்கட்டின்மேல் பக்கக்கட்டான வரிசைகளாய் முப்பத்துமூன்று இருந்தது; அவைகள் ஆலயத்தின் சுவருக்குள் ஊன்றியிராமல், சுற்றுக்கட்டுகளுக்காகச் சுற்றிலும் அவைகள் ஊன்றும்படிக்கு ஆலயத்துக்கு அடுத்திருந்த ஒட்டுச்சுவரிலே பாய்ந்திருந்தது.

எசேக்கியேல் 41:7

உயர உயரச் சுற்றிலும் சுற்றுக்கட்டுகளுக்கு அகலம் அதிகமாயிருந்தது; ஆலயத்தைச் சுற்றிலும் உயர உயர ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அகலம் வரவர அதிகமாயிருந்தது; ஆதலால் இவ்விதமாய்க் கீழ்நிலையிலிருந்து நடுநிலைவழியாய் மேல்நிலைக்கு ஏறும் வழியிருந்தது.

எசேக்கியேல் 41:8

மாளிகைக்குச் சுற்றிலும் இருந்த உயரத்தையும் பார்த்தேன், சுற்றுக்கட்டுகளின் அஸ்திபாரங்கள் ஆறு பெரிய முழங்கொண்ட ஒரு முழக்கோலின் உயரமாயிருந்தது.

எசேக்கியேல் 41:9

புறம்பே சுற்றுக்கட்டுக்கு இருந்த சுவரின் அகலம் ஐந்துமுழமாயிருந்தது; ஆலயத்துக்கு இருக்கும் சுற்றுக்கட்டுகளின் மாளிகையிலே வெறுமையாய் விட்டிருந்த இடங்களும் அப்படியே இருந்தது.

எசேக்கியேல் 41:10

ஆலயத்தைச் சுற்றிலும் அறைவீடுகளுக்கு நடுவாக இருந்த விசாலம் இருபது முழமாயிருந்தது.

எசேக்கியேல் 41:11

சுற்றுக்கட்டினுடைய வாசல் நடைகள், வெறுமையாய் விட்டிருந்த இடங்களிலிருந்து, ஒரு வாசல் நடை வடக்கேயும், ஒரு வாசல்நடை தெற்கேயும் இருந்தது; வெறுமையாய் விட்டிருந்த இடங்களின் விசாலம் சுற்றிலும் ஐந்து முழமாயிருந்தது.

எசேக்கியேல் 41:12

மேற்றிசையிலே பிரத்தியேகமான இடத்துக்கு முன்னிருந்த மாளிகைமட்டும் அகலம் எழுபது முழமும், மாளிகையினுடைய சுவரின் அகலம் சுற்றிலும் ஐந்து முழமும், அதினுடைய நீளம் தொண்ணூறு முழமுமாயிருந்தது.

எசேக்கியேல் 41:13

அவர் ஆலயத்தை நூறு முழ நீளமாகவும், பிரத்தியேகமான இடத்தையும் மாளிகையையும் அதின் சுவர்களையும் நூறு முழ நீளமாகவும் அளந்தார்.

எசேக்கியேல் 41:14

ஆலயத்தின் முற்புறமும் கிழக்குக்கு எதிரான பிரத்தியேகமான இடமும் இருந்த அகலம் நூறு முழமுமாயிருந்தது.

எசேக்கியேல் 41:15

பிரத்தியேகமான இடத்தின் பின்புறமாக அதற்கு எதிரே இருந்த மாளிகையின் நீளத்தையும், அதற்கு இந்தப்புறத்திலும் அந்தப்புறத்திலும் இருந்த நடைகாவணங்களையும் அளந்தார்; உள்ளான தேவாலயமும் முற்றத்தின் மண்டபங்களும் உட்பட நூறு முழமாயிருந்தது.

எசேக்கியேல் 41:16

வாசற்படிகளும், ஒடுக்கமான ஜன்னல்களும், மூன்று பக்கங்களில் சுற்றிலும் வாசல்களுக்கு எதிரான நடைகாவணங்களும் சுற்றிலும் தரைதுவக்கி ஜன்னல்கள் மட்டாகப் பலகை அடித்திருந்தது; ஜன்னல்கள் மூடப்பட்டிருந்தது.

எசேக்கியேல் 41:17

வாசலின் மேலேதுவக்கி ஆலயத்தின் உட்புறமும் வெளிப்புறமும் சுற்றிலும் சுவரின் உட்புறமும் வெளிப்புறமும் எல்லாம் அளவிட்டிருந்தது.

எசேக்கியேல் 41:18

கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது; கேருபீனுக்கும் கேருபீனுக்கும் நடுவாக ஒவ்வொரு பேரீச்சமரம் இருந்தது; ஒவ்வொரு கேருபீனுக்கும் இரண்டிரண்டு முகங்கள் இருந்தது.

எசேக்கியேல் 41:19

பேரீச்சமரத்துக்கு இந்தண்டையில் மனுஷமுகமும், பேரீச்சமரத்துக்கு அந்தண்டையில் சிங்கமுகமும் இருந்தது; இப்படியே ஆலயத்தைச் சுற்றிலும் செய்திருந்தது.

எசேக்கியேல் 41:20

தரைதுவக்கி வாசலின் மேற்புறமட்டும், தேவாலயத்தின் சுவரிலும், கேருபீன்களும் பேரீச்சமரங்களும் சித்திரிக்கப்பட்டிருந்தது.

எசேக்கியேல் 41:21

தேவாலயத்தின் கதவு நிலைகள் சதுரமும், பரிசுத்த ஸ்தலத்தினுடைய முகப்பின் உருவம் அந்த உருவத்துக்குச் சரியுமாயிருந்தது.

Start Downloading Your Apps