Total Matches: 31082

தானியேல் 6:18

பின்பு ராஜா தன் அரமனைக்குப்போய், இராமுழுதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.

தானியேல் 6:19

காலமே கிழக்கு வெளுக்கும்போது ராஜா எழுந்திருந்து, சிங்கங்களின் கெபிக்குத் தீவிரமாய்ப் போனான்.

தானியேல் 6:20

ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான்.

தானியேல் 6:21

அப்பொழுது தானியேல்: ராஜாவே, நீர் என்றும் வாழ்க.

தானியேல் 6:22

சிங்கங்கள் என்னைச் சேதப்படுத்தாதபடிக்கு தேவன் தம்முடைய தூதனை அனுப்பி, அவைகளின் வாயைக் கட்டிப்போட்டார்; அதேனென்றால் அவருக்கு முன்பாக நான் குற்றமற்றவனாய்க் காணப்பட்டேன்; ராஜாவாகிய உமக்கு முன்பாகவும் நான் நீதிகேடு செய்ததில்லை என்றான்.

தானியேல் 6:23

அப்பொழுது ராஜா தன்னில் மிகவும் சந்தோஷப்பட்டு, தானியேலைக் கெபியிலிருந்து தூக்கிவிடச் சொன்னான்; அப்படியே தானியேல் கெபியிலிருந்து தூக்கிவிடப்பட்டான்; அவன் தன் தேவன்பேரில் விசுவாசித்திருந்தபடியால், அவனில் ஒரு சேதமும் காணப்படவில்லை.

தானியேல் 6:24

தானியேலின்மேல் குற்றஞ்சாற்றின மனுஷரையோவென்றால், ராஜா கொண்டுவரச்சொன்னான்; அவர்களையும் அவர்கள் குமாரரையும் அவர்கள் மனைவிகளையும் சிங்கங்களின் கெபியிலே போட்டார்கள்; அவர்கள் கெபியின் அடியிலே சேருமுன்னே சிங்கங்கள் அவர்கள்மேல் பாய்ந்து, அவர்கள் எலும்புகளையெல்லாம் நொறுக்கிப்போட்டது.

தானியேல் 6:25

பின்பு ராஜாவாகிய தரியு தேசமெங்கும் குடியிருக்கிற எல்லா ஜனங்களுக்கும், ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதினது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.

தானியேல் 6:26

என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன், அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.

தானியேல் 6:27

தானியேலைச் சிங்கங்களின் கைக்குத் தப்புவித்த அவரே தப்புவிக்கிறவரும் இரட்சிக்கிறவரும், வானத்திலும் பூமியிலும் அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்கிறவருமாயிருக்கிறார் என்று எழுதினான்.

தானியேல் 6:28

தரியுவின் ராஜ்யபார காலத்திலும், பெர்சியனாகிய கோரேசுடைய ராஜ்யபாரகாலத்திலும் தானியேலின் காரியம் ஜெயமாயிருந்தது.

தானியேல் 7:1

பாபிலோன் ராஜாவாகிய பெல்ஷாத்சாரின் முதலாம் வருஷத்திலே தானியேல் ஒரு சொப்பனத்தையும் தன் படுக்கையின்மேல் தன் தலையில் தோன்றின தரிசனங்களையும் கண்டான். பின்பு அவன் அந்தச் சொப்பனத்தை எழுதி, காரியங்களின் தொகையை விவரித்தான்.

தானியேல் 7:2

தானியேல் சொன்னது: இராத்திரி காலத்தில் எனக்கு உண்டான தரிசனத்திலே நான் கண்டது என்னவென்றால்: இதோ, வானத்தின் நாலு காற்றுகளும் பெரிய சமுத்திரத்தின்மேல் அடித்தது.

தானியேல் 7:3

அப்பொழுது வெவ்வேறு ரூபமுள்ள நாலு பெரிய மிருகங்கள் சமுத்திரத்திலிருந்து எழும்பின.

தானியேல் 7:4

முந்தினது சிங்கத்தைப்போல இருந்தது; அதற்குக் கழுகின் செட்டைகள் உண்டாயிருந்தது; நான் பார்த்துக்கொண்டிருக்கையில், அதின் இறகுகள் பிடுங்கப்பட்டது; அது தரையிலிருந்து எடுக்கப்பட்டு, மனுஷனைப்போல இரண்டு காலின்மேல் நிமிர்ந்து நிற்கும்படி செய்யப்பட்டது; மனுஷ இருதயம் அதற்குக் கொடுக்கப்பட்டது.

தானியேல் 7:5

பின்பு, கரடிக்கு ஒப்பாகிய வேறே இரண்டாம் மிருகத்தைக் கண்டேன்; அது ஒரு பக்கமாய்ச் சாய்ந்துநின்று, தன் வாயின் பற்களுக்குள்ளே மூன்று விலாவெலும்புகளைக் கவ்விக்கொண்டிருந்தது; எழும்பி வெகு மாம்சம் தின்னென்று அதற்குச் சொல்லப்பட்டது.

தானியேல் 7:6

அதின் பின்பு, சிவிங்கியைப்போலிருக்கிற வேறொரு மிருகத்தைக் கண்டேன்; அதின் முதுகின்மேல் பட்சியின் செட்டைகள் நாலு இருந்தது; அந்த மிருகத்துக்கு நாலு தலைகளும் உண்டாயிருந்தது; அதற்கு ஆளுகை அளிக்கப்பட்டது.

தானியேல் 7:7

அதற்குப்பின்பு, இராத்தரிசனங்களில் நாலாம் மிருகத்தைக் கண்டேன்; அது கெடியும் பயங்கரமும் மகா பலத்ததுமாயிருந்தது; அதற்குப் பெரிய இருப்புப்பற்கள் இருந்தது; அது நொறுக்கிப் பட்சித்து, மீதியானதைத் தன் கால்களால் மிதித்துப்போட்டது; அது தனக்கு முன்னிருந்த எல்லா மிருகங்களைப்பார்க்கிலும் வேற்றுருவமாயிருந்தது, அதற்குப் பத்துக் கொம்புகள் இருந்தது.

தானியேல் 7:8

அந்தக் கொம்புகளை நான் கவனித்திருக்கையில், இதோ, அவைகளுக்கு இடையிலே வேறொரு சின்ன கொம்பு எழும்பிற்று; அதற்கு முன்பாக முந்தின கொம்புகளில் மூன்று பிடுங்கப்பட்டது; இதோ, அந்தக் கொம்பிலே மனுஷகண்களுக்கு ஒப்பான கண்களும் பெருமையானவகளைப் பேசும் வாயும் இருந்தது.

தானியேல் 7:9

நான் பார்த்துக்கொண்டிருக்கையில், சிங்காசனங்கள் வைக்கப்பட்டது; நீண்ட ஆயுசுள்ளவர் வீற்றிருந்தார்; அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப்போலவும், அவருடைய சிரசின் மயிர் வெண்மையாகவும் பஞ்சைப்போல துப்புரவாகவும் இருந்தது; அவருடைய சிங்காசனம் அக்கினிஜுவாலையும், அதின் சக்கரங்கள் எரிகிற நெருப்புமாயிருந்தது.

தானியேல் 7:10

அக்கினி நதி அவர் சந்நிதியிலிருந்து புறப்பட்டு ஓடினது; ஆயிரமாயிரம்பேர் அவரைச் சேவித்தார்கள்; கோடாகோடிபேர் அவருக்கு முன்பாக நின்றார்கள்; நியாயசங்கம் உட்கார்ந்தது; புஸ்தகங்கள் திறக்கப்பட்டது.

தானியேல் 7:11

அப்பொழுது நான் பார்த்தேன்; நான் பார்த்துக்கொண்டிருக்கையில் அந்தக் கொம்பு பெருமையான பேச்சுகளைப் பேசினதினிமித்தம் அந்த மிருகம் கொலைசெய்யப்பட்டது; அதின் உடல் அழிக்கப்பட்டு, எரிகிற அக்கினிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

தானியேல் 7:12

மற்ற மிருகங்களுடைய ஆளுகையோவென்றால், அவைகளை விட்டு நீக்கப்பட்டது; ஆனாலும், அவைகளுக்குக் காலமும் சமயமும் ஆகுமட்டும் அவைகள் உயிரோடே இருக்கும்படி கட்டளையிடப்பட்டது.

தானியேல் 7:13

இராத்தரிசனங்களிலே நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ, மனுஷகுமாரனுடைய சாயலான ஒருவர் வானத்து மேகங்களுடனே வந்தார்; அவர் நீண்ட ஆயுசுள்ளவர் இடமட்டும் வந்து, அவர் சமீபத்தில் கொண்டுவரப்பட்டார்.

தானியேல் 7:14

சகல ஜனங்களும் ஜாதியாரும், பாஷைக்காரரும் அவரையே சேவிக்கும்படி, அவருக்குக் கர்த்தத்துவமும் மகிமையும் ராஜரிகமும் கொடுக்கப்பட்டது; அவருடைய கர்த்தத்துவம் நீங்காத நித்திய கர்த்தத்துவமும், அவருடைய ராஜ்யம் அழியாததுமாயிருக்கும்.

Start Downloading Your Apps