என் திராட்சச்செடியை அழித்து, என் அத்திமரத்தை உரித்து, அதின் பட்டையை முற்றிலும் தின்றுபோட்டது; அதின் கிளைகள் வெண்மையாயிற்று.
தன் பாலியவயதின் புருஷனுக்காக இரட்டுடுத்தியிருக்கிற பெண்ணைப்போலப் புலம்பு.
போஜனபலியும் பானபலியும் கர்த்தருடைய ஆலயத்தை விட்டு அற்றுப்போயின; கர்த்தரின் ஊழியக்காரராகிய ஆசாரியர்கள் துக்கிக்கிறார்கள்.
வயல்வெளி பாழாயிற்று, பூமி துக்கங்கொண்டாடுகிறது; விளைச்சல் அழிக்கப்பட்டது; புது திராட்சரசம் வற்றிப்போயிற்று; எண்ணெய் மாண்டுபோயிற்று.
பயிரிடுங் குடிகளே, வெட்கப்படுங்கள்; கோதுமையும், வாற்கோதுமையும் இல்லாமற்போயிற்று; திராட்சத்தோட்டக்காரரே, அலறுங்கள்; வயல்வெளியின் அறுப்பு அழிந்துபோயிற்று.
திராட்சச்செடி வதங்கி, அத்திமரம் சாரமற்றுப்போகிறது; மாதளை, பேரீச்சம், கிச்சிலி முதலிய வெளியின் செடிகள் எல்லாம் வாடிப்போயின; சந்தோஷம் மனுபுத்திரரைவிட்டு ஒழிந்துபோயிற்று.
ஆசாரியர்களே, இரட்டுடுத்திப் புலம்புங்கள்; பலிபீடத்தின் பணிவிடைக்காரரே, அலறுங்கள்; என் தேவனுடைய தொண்டரே, நீங்கள் உள்ளே பிரவேசித்து இரட்டுடுத்தவர்களாய் இராத்தங்குங்கள். உங்கள் தேவனுடைய ஆலயத்தில் போஜனபலியும் பானபலியும் செலுத்தப்படாமல் நிறுத்தப்பட்டது.
பரிசுத்த உபவாசநாளை நியமியுங்கள், விசேஷித்த ஆசரிப்பைக் கூறுங்கள்; மூப்பரையும் தேசத்தின் எல்லாக்குடிகளையும், உங்கள் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்திலே கூடிவரச்செய்து கர்த்தரை நோக்கிக் கூப்பிடுங்கள்.
அந்த நாளினிமித்தம் ஐயோ! கர்த்தருடைய நாள் சமீபமாயிருக்கிறது; அது சங்காரம்போல சர்வவல்லவரிடத்திலிருந்து வருகிறது.
நம்முடைய கண்களைவிட்டு ஆகாரமும், நம்முடைய தேவனின் ஆலயத்தைவிட்டுச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்படவில்லையோ?
விதையானது மண்கட்டிகளின்கீழ் மக்கிப்போயிற்று; பயிர் தீய்ந்துபோகிறதினால் பண்டசாலைகள் பாழாகிக் களஞ்சியங்கள் இடிந்துபோயின.
மிருகங்கள் எவ்வளவாய்த் தவிக்கிறது; மாட்டுமந்தைகள் தங்களுக்கு மேய்ச்சல் இல்லாததினால் கலங்குகிறது; ஆட்டுமந்தைகளும் சேதமாய்ப்போயிற்று.
கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்து, ஜுவாலை வெளியின் விருட்சங்களையெல்லாம் எரித்துப்போடுகிறது.
வெளியின் மிருகங்களும் உம்மை நோக்கிக் கதறுகிறது; நதிகளில் தண்ணீரெல்லாம் வற்றிப்போயிற்று; அக்கினி வனாந்தரத்தின் மேய்ச்சல்களைப் பட்சித்துப்போட்டது.
சீயோனிலே எக்காளம் ஊதுங்கள், என் பரிசுத்த பர்வதத்திலே எச்சரிப்பின் சத்தமிடுங்கள்; தேசத்தின் குடிகள் எல்லாம் தத்தளிக்கக்கடவர்கள்; ஏனெனில் கர்த்தருடைய நாள் வருகிறது, அது சமீபமாயிருக்கிறது.
அது இருளும் அந்தகாரமுமான நாள்; அது மப்பும் மந்தாரமுமான நாள்; விடியற்கால வெளுப்பு பர்வதங்களின்மேல் பரவுகிறதுபோல ஏராளமான பலத்த ஒரு ஜாதி தீவிரமாக வந்து பரவும்; அப்படிப்பட்டது முன் ஒரு காலத்திலும் உண்டானதுமில்லை, இனித்தலைமுறை தலைமுறையாக வரும் வருஷங்களிலும் உண்டாவதுமில்லை.
அவைகளுக்கு முன்னாக அக்கினி பட்சிக்கும், அவைகளுக்குப் பின்னாக ஜுவாலை எரிக்கும்; அவைகளுக்கு முன்னாக தேசம் ஏதேன் தோட்டத்தைப்போலவும், அவைகளுக்குப் பின்னாகப் பாழான வனாந்தரத்தைப்போலவும் இருக்கும்; அவைகளுக்கு ஒன்றும் தப்பிப்போவதில்லை.
அவைகளின் சாயல் குதிரைகளின் சாயலை ஒத்தது; அவைகள் குதிரை வீரரைப்போல ஓடும்.
அவைகள் ஓடுகிற இரதங்களின் இரைச்சல்போலவும், செத்தைகளை எரிக்கிற அக்கினிஜுவாலையின் இரைச்சல்போலவும், யுத்தத்துக்கு ஆயத்தப்பட்ட பலத்த ஜனத்தின் இரைச்சல் போலவும், பர்வதங்களுடைய சிகரங்களின்மேல் குதிக்கும்.
அவைகளுக்கு முன்பாக ஜனங்கள் நடுங்குவார்கள்; எல்லா முகங்களும் கருகிப்போகும்.
அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும்.
ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்.
அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும், வீடுகளின்மேல் ஏறும்; பலகணிவழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும்.
அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும்.
கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்?