எத்தருணத்தில் உயிர் எவ்

எத்தருணத்தில் உயிர் எவ்வழி பிரியுமோ?
இதை உணராய் நெஞ்சமே

அனுபல்லவி

சுத்த பரமன் பதம் இத்தரையில் அடைந்து
சொர்க்க பதவிக்கிப்போ பக்குவம் செய்யாவிடில் - எத்

சரணங்கள்

1. பால வயதினிலோ பாடும் சமயத்திலோ
கோலமாய் மணக்கோலம் கொள்ளும் தருணத்திலோ
சீலமுடன் பரனைத் தேடும் சமயத்திலோ?
காலன் வரவுண்டு கலங்கும் தருணத்திலோ? - எத்

2. வாலிபன் நான் இப்போ வயது மதிகமில்லை
காலன் வரவுக்கின்னும் காலம் அதிகமென்று
மேலான எண்ணம் கொண்டு வீண் நாட் கழிக்கும்போதோ
கோலொன்று கையில் தாங்கி குறுநடை கொள்ளும்போதோ- எத்

3. தாய், தந்தை, தமர், தாரம் சகலமுமிருந்தாலும்
சஞ்சீவி மருந்துகள் கைவசமிருந்தாலும்
தீயன் வலையில் சிக்கித் திகைக்கும் தருணமதில்
நாயன் உதவி இல்லாமல் நசிவது திண்ணம் திண்ணம் - எத்

Start Downloading Your Apps