எப்படியும்‌ பாவிகளை ஒப்புரவாக்கி

எப்படியும்‌ பாவிகளை ஒப்புரவாக்கிக்கொள்வதற்கு
இப்புவியிலே உதித்தார்‌; அற்புதந்தானே.

மெய்ப்பரம்‌ புவியும்‌ தந்த தற்பரன்‌ அனாதி பிதா
நற்புதல்வனான ஏசு நாத கிருபாகரனார்‌. - எப்‌

சரணங்கள்‌

1. மட்டில்லாப்‌ பொருள்‌ அனைத்தும்‌ திட்டமாகவே படைத்து
இட்டமாய்‌ அனுக்கிரகித்த சிட்டிகன்‌ தானே;
கட்டளையிட்ட கற்பனை விட்டொரு சர்ப்பத்தின்‌ வாயில்‌
பட்டு நரகத்துக்காளாய்க்‌ கெட்டழிந்த பேர்‌ என்றாலும்‌. - எப்‌

2. அச்சயன்‌' மோசேயைக்‌ கொண்டன்‌ நெச்சரித்‌ தெழுதித்தந்த
உச்சித கற்பனை கடந்‌ திச்சையினாலே,
துர்ச்சனப்‌ பாசாசைக்‌ கூடி மிச்சமாய்ப்‌ பாவங்கள்‌ செய்து
நிச்சயம்‌ கெட்டுப்‌ போனார்கள்‌; ரட்சிக்கக்கூடாதென்றாலும்‌.- எப்‌

3. தாக்கிய பராபரன்‌ உண்டாக்கிய அனந்த செல்வப்‌
பாக்கியங்கள்‌ அனைத்தையும்‌ போக்கடித்துமே,
யோக்கியம்‌ தெய்வ புத்ர சிலாக்கியம்‌ எல்லாம்‌ இழந்து
பேய்க்கடிமை ஆட்கள்‌ கேட்டை நீக்குதற்‌ கேலாதென்றாலும்‌,- எப்‌

4. மேட்டிமை எல்லாம்‌ துறந்து, காட்டுக்குள்‌ இருக்கும்‌ அந்த
மாட்டுக்கொட்டிலில்‌ பிறந்தோர்‌ ஆட்டுக்குட்டி போல்‌,
பாட்டுக்கிடமாய்‌ உலகை மீட்டுக்கொண்டனந்த மோட்ச
வீட்டுக்குட்படுத்த மாந்தர்‌ நாட்டுக்குள்‌ மரித்துயிர்த்து. - எப்‌

- வேதநாயகம்‌ சாஸ்திரியார்‌

Start Downloading Your Apps