காலையிலே நித்தமும் செலுத்தும் சர்வாங்க தகனபலியையும் அன்றி இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.
இந்தப்பிரகாரம் ஏழுநாளளவும் நாடோறும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி செலுத்தக்கடவீர்கள்; நித்தமும் செலுத்தப்படும் சர்வாங்க தகனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இதையும் செலுத்தவேண்டும்.
ஏழாம் நாளிலே பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
அந்த வாரங்களுக்குப்பின் நீங்கள் கர்த்தருக்குப் புதிய போஜனபலியாக முதற்கனிகளைச் செலுத்தும் பண்டிகை நாளிலும் பரிசுத்த சபைகூடுதல் இருக்கவேண்டும்; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது.
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக இரண்டு காளைகளையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான ஏழு ஆட்டுக்குட்டிகளையும்.
அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவில் ஒரு காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காகப் பத்தில் இரண்டு பங்கையும்,
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
உங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்படிக்கு ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.
நித்திய சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும் அதின் பானபலியையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்; இவைகள் பழுதற்றவைகளாயிருக்கவேண்டும்.
ஏழாம் மாதம் முதல்தேதி பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; அது உங்களுக்கு எக்காளமூதும் நாளாயிருக்கவேண்டும்.
அப்பொழுது நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
அவைகளுக்கு அடுத்த போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்,
உங்கள் பாவநிவிர்த்திக்கான பலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி,
மாதப்பிறப்பின் சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும், தினந்தோறும் இடும் சர்வாங்க தகனபலியையும் அதின் போஜனபலியையும், அவைகளின் முறைமைக்கேற்ற பானபலிகளையும் அன்றி, இவைகளையும் கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாகச் செலுத்தக்கடவீர்கள்.
இந்த ஏழாம் மாதம் பத்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதிலே நீங்கள் யாதொரு வேலையும் செய்யாமல், உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி,
கர்த்தருக்குச் சுகந்த வாசனையான சர்வாங்க தகனபலியாக ஒரு காளையையும், ஒரு ஆட்டுக்கடாவையும், ஒருவயதான பழுதற்ற ஏழு ஆட்டுக்குட்டிகளையும்,
அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே காளைக்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த ஒரு ஆட்டுக்கடாவுக்காக இரண்டு பங்கையும்,
ஏழு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் ஒரு பங்கையும்,
பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தி, பாவநிவாரணபலியையும், நித்திய சர்வாங்க தகனபலியையும், அதின் போஜனபலியையும், அவைகளின் பானபலிகளையும் அன்றி, இவைகளையும் செலுத்தக்கடவீர்கள்.
ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி உங்களுக்குப் பரிசுத்த சபைகூடும் நாளாயிருக்கக்கடவது; அதில் சாதாரணமான யாதொரு வேலையும் செய்யலாகாது; ஏழுநாள் கர்த்தருக்குப் பண்டிகை ஆசரிக்கக்கடவீர்கள்.
நீங்கள் கர்த்தருக்குச் சுகந்த வாசனையுள்ள சர்வாங்க தகனபலியாக பதின்மூன்று காளைகளையும், இரண்டு ஆட்டுக்கடாக்களையும், ஒருவயதான பழுதற்ற பதினான்கு ஆட்டுக்குட்டிகளையும்,
அவைகளின் போஜனபலியாக எண்ணெயிலே பிசைந்த மெல்லிய மாவிலே அந்தப் பதின்மூன்று காளைகளில் ஒவ்வொன்றிற்காகப் பத்தில் மூன்று பங்கையும், அந்த இரண்டு ஆட்டுக்கடாக்களில் ஒவ்வொன்றிற்காக இரண்டு பங்கையும்,
பதினான்கு ஆட்டுக்குட்டிகளில் ஒவ்வொன்றிற்காக ஒரு பங்கையும்.
நித்திய தகனபலியையும், அதின் போஜனபலியையும், அதின் பானபலியையும் அன்றி, பாவநிவாரணபலியாக ஒரு வெள்ளாட்டுக்கடாவையும் செலுத்தக்கடவீர்கள்.