Total Matches: 31082

1 நாளாகமம் 22:10

அவன் என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டுவான்; அவன் எனக்குக் குமாரனாயிருப்பான், நான் அவனுக்குப் பிதாவாயிருப்பேன்; இஸ்ரவேலை ஆளும் அவனுடைய ராஜாங்கத்தின் சிங்காசனத்தை என்றென்றைக்கும் நிலைப்படுத்துவேன் என்றார்.

1 நாளாகமம் 22:11

இப்போதும் என் குமாரனே, நீ பாக்கியவானாயிருந்து, கர்த்தர் உன்னைக்குறித்துச் சொன்னபடியே உன் தேவனாகிய கர்த்தரின் ஆலயத்தைக் கட்டும்படி, அவர் உன்னுடனேகூட இருப்பாராக.

1 நாளாகமம் 22:12

கர்த்தர் உனக்கு ஞானத்தையும் உணர்வையும் அருளிச்செய்து, உன் தேவனாகிய கர்த்தரின் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொண்டு, இஸ்ரவேலை ஆளும்படி உனக்குக் கட்டளையிடுவாராக.

1 நாளாகமம் 22:13

கர்த்தர் இஸ்ரவேலுக்காக மோசேக்குக் கற்பித்த நியமங்களையும் நியாயங்களையும் செய்ய நீ கவனமாயிருந்தால் பாக்கியவானாயிருப்பாய்; நீ பலங்கொண்டு தைரியமாயிரு, பயப்படாமலும் கலங்காமலும் இரு.

1 நாளாகமம் 22:14

இதோ, நான் என் சிறுமையிலே கர்த்தருடைய ஆலயத்திற்காக ஒரு லட்சம் தாலந்து பொன்னையும், பத்துலட்சம் தாலந்து வெள்ளியையும், நிறுத்து முடியாத திரளான வெண்கலத்தையும் இரும்பையும் சவதரித்தும், மரங்களையும் கற்களையும் சவதரித்தும் வைத்தேன், நீ இன்னும் அவைகளுக்கு அதிகமாய்ச் சவதரிப்பாய்.

1 நாளாகமம் 22:15

வேலைசெய்யத்தக்க திரளான சிற்பாசாரிகளும், தச்சரும், கல்தச்சரும், எந்த வேலையிலும் நிபுணரானவர்களும் உன்னோடிருக்கிறார்கள்.

1 நாளாகமம் 22:16

பொன்னுக்கும், வெள்ளிக்கும், வெண்கலத்துக்கும், இரும்புக்கும் கணக்கில்லை; நீ எழும்பிக் காரியத்தை நடப்பி; கர்த்தர் உன்னோடே இருப்பாராக என்றான்.

1 நாளாகமம் 22:17

தன் குமாரனாகிய சாலொமோனுக்கு உதவிசெய்ய, தாவீது இஸ்ரவேலின் பிரபுக்கள் அனைவருக்கும் கற்பித்துச் சொன்னது:

1 நாளாகமம் 22:18

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களோடிருந்து நான்கு திசையிலும் உங்களுக்கு இளைப்பாறுதலைத் தந்தார் அல்லவா? தேசத்தின் குடிகளை என் கையில் ஒப்புக்கொடுத்தார்; கர்த்தருக்கு முன்பாகவும், அவருடைய ஜனத்திற்கு முன்பாகவும் தேசம் கீழ்ப்பட்டிருக்கிறது.

1 நாளாகமம் 22:19

இப்போதும் நீங்கள் உங்கள் இருதயத்தையும், உங்கள் ஆத்துமத்தையும், உங்கள் தேவனாகிய கர்த்தரைத் தேடுகிறதற்கு நேராக்கி, கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியையும் தேவனுடைய பரிசுத்தப் பணிமுட்டுகளையும், கர்த்தருடைய நாமத்திற்குக் கட்டப்படும் அந்த ஆலயத்திற்குள் கொண்டுபோகும்படிக்கு நீங்கள் எழும்பி, தேவனாகிய கர்த்தரின் பரிசுத்த ஸ்தலத்தைக் கட்டுங்கள் என்றான்.

1 நாளாகமம் 23:1

தாவீது கிழவனும் பூரண வயதுள்ளவனுமானபோது, தன் குமாரனாகிய சாலொமோனை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக்கினான்.

1 நாளாகமம் 23:2

இஸ்ரவேலின் எல்லாப் பிரபுக்களையும், ஆசாரியரையும், லேவியரையும் கூடிவரும்படி செய்தான்.

1 நாளாகமம் 23:3

அப்பொழுது முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்ட லேவியர் பேர்பேராக எண்ணப்பட்டார்கள்; தலைதலையாக எண்ணப்பட்ட அவர்களுடைய இலக்கம் முப்பத்தெண்ணாயிரம்.

1 நாளாகமம் 23:4

அவர்களில் இருபத்து நாலாயிரம்பேர் கர்த்தருடைய ஆலயத்தின் வேலையை விசாரிக்கிறவர்களும், ஆறாயிரம்பேர் தலைவரும் மணியக்காரருமாயிருக்கவேண்டும் என்றும்,

1 நாளாகமம் 23:5

நாலாயிரம்பேர் வாசல் காக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும், துதிசெய்கிறதற்குத் தான் பண்ணுவித்த கீதவாத்தியங்களால் நாலாயிரம்பேர் கர்த்தரைத் துதிக்கிறவர்களாயிருக்கவேண்டும் என்றும் தாவீது சொல்லி,

1 நாளாகமம் 23:6

அவர்களை லேவியின் குமாரராகிய கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி வகுத்தான்.

1 நாளாகமம் 23:7

கெர்சோனியரில், லாதானும், சிமேயும் இருந்தார்கள்.

1 நாளாகமம் 23:8

லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.

1 நாளாகமம் 23:9

சிமேயின் குமாரர், செலோமித், ஆசியேல், ஆரான் என்னும் மூன்றுபேர்; இவர்கள் லாதான் வம்சப் பிதாக்களில் தலைமையாயிருந்தார்கள்.

1 நாளாகமம் 23:10

யாகாத், சீனா, எயூஷ், பெரீயா என்னும் நாலுபேரும் சிமேயின் குமாரராயிருந்தார்கள்.

1 நாளாகமம் 23:11

யாகாத் தலைமையாயிருந்தான்; சீனா இரண்டாம் குமாரனாயிருந்தான்; எயூஷுக்கும் பெரீயாவுக்கும் அநேகம் குமாரர் இராதபடியினால், அவர்கள் பிதாக்களின் குடும்பத்தாரில் ஒரே வம்சமாக எண்ணப்பட்டார்கள்.

1 நாளாகமம் 23:12

கோகாத்தின் குமாரர், அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நாலுபேர்.

1 நாளாகமம் 23:13

அம்ராமின் குமாரர், ஆரோன், மோசே என்பவர்கள்; ஆரோனும் அவன் குமாரரும் பரிசுத்தத்திற்குப் பரிசுத்தமான ஸ்தலத்தை என்றைக்கும் பரிசுத்தமாய்க் காக்கிறதற்கும், என்றைக்கும் கர்த்தருக்கு முன்பாக தூபங்காட்டுகிறதற்கும், அவருக்கு ஆராதனை செய்கிறதற்கும், அவர் நாமத்திலே ஆசீர்வாதம் கொடுக்கிறதற்கும் பிரித்துவைக்கப்பட்டார்கள்.

1 நாளாகமம் 23:14

தேவனுடைய மனுஷனாகிய மோசேயின் குமாரரோவெனில், லேவிகோத்திரத்தாருக்குள் எண்ணப்பட்டார்கள்.

1 நாளாகமம் 23:15

மோசேயின் குமாரர், கெர்சோம், எலியேசர் என்பவர்கள்.

Start Downloading Your Apps