யெகியேலியின் குமாரராகிய சேத்தாமும், அவன் சகோதரனாகிய யோவேலுமே; இவர்கள் கர்த்தருடைய ஆலயத்துப் பொக்கிஷங்களை விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
அம்ராமியரிலும், இத்சேயாரியரிலும், எப்ரோனியரிலும், ஊசியேரியரிலும், சிலர், அப்படியே விசாரிக்கிறவர்களாயிருந்தார்கள்.
மோசேயின் குமாரனாகிய கெர்சோமின் சந்ததியான செபுவேல் பொக்கிஷப் பிரதானியாயிருந்தான்.
எலியேசர் மூலமாய் அவனுக்கு இருந்த சகோதரரானவர்கள், இவன் குமாரன் ரெகபியாவும், இவன் குமாரன் எஷாயாவும், இவன் குமாரன் யோராமும், இவன் குமாரன் சிக்கிரியும், இவன் குமாரன் செலோமித்துமே.
ராஜாவாகிய தாவீதும், ஆயிரம்பேருக்கு அதிபதிகளும், நூறுபேருக்கு அதிபதிகளுமான பிதாக்களின் தலைவரும், சேனாபதிகளும் யுத்தத்தில் அகப்பட்ட கொள்ளைகளில் எடுத்து,
கர்த்தருடைய ஆலயத்தைப் பரிபாலிக்கும்படிக்குப் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட பொருள்களின் பொக்கிஷங்களையெல்லாம் அந்தச் செலோமித்தும் அவனுடைய சகோதரரும் விசாரித்தார்கள்.
ஞானதிருஷ்டிக்காரனாகிய சாமுவேலும், கீசின் குமாரனாகிய சவுலும், நேரின் குமாரனாகிய அப்னேரும், செருயாவின் குமாரனாகிய யோவாபும், அவரவர் பரிசுத்தம் என்று நேர்ந்துகொண்ட அனைத்தும் செலோமித்தின் கையின்கீழும் அவன் சகோதரர் கையின்கீழும் இருந்தது.
இத்சேயாரியரில் கெனானியாவும் அவன் குமாரரும் தேசகாரியங்களைப் பார்க்கும்படி வைக்கப்பட்டு, இஸ்ரவேலின்மேல் விசாரிப்புக்காரரும் மணியகாரருமாயிருந்தார்கள்.
எப்ரோனியரில் அசபியாவும் அவன் சகோதரருமாகிய ஆயிரத்து எழுநூறு பராக்கிரமசாலிகள் யோர்தானுக்கு இப்பாலே, மேற்கே இருக்கிற இஸ்ரவேலின் கர்த்தருடைய எல்லா ஊழியத்திற்கும் ராஜாவின் வேலைக்கும் வைக்கப்பட்டார்கள்.
எப்ரோனியரில் எரியாவும் இருந்தான்; அவன் தன் பிதாக்களின் வம்சங்களான எப்ரோனியரில் தலைமையானவன்; தாவீது அரசாண்ட நாற்பதாம் வருஷத்திலே அவர்கள் தேடப்பட்டபோது அவர்களுக்குள்ளே கீலேயாத்தேசத்து ஏசேரிலே பராக்கிரம வீரர் காணப்பட்டார்கள்.
பலசாலிகளாகிய அவனுடைய சகோதரர் இரண்டாயிரத்து எழுநூறு பிரதான தலைவராயிருந்தார்கள்; அவர்களைத் தாவீது ராஜா தேவனுக்கடுத்த சகல காரியத்திற்காகவும், ராஜாவின் காரியத்கிற்காகவும், ரூபனியர்மேலும், காதியர்மேலும், மனாசேயின் பாதிக்கோத்திரத்தின்மேலும் வைத்தான்.
தங்கள் இலக்கத்தின்படி இருக்கிற இஸ்ரவேல் புத்திரருக்கு வம்சங்களின் தலைவரும், ஆயிரத்துக்குச் சேர்வைக்காரரும், நூற்றிற்குச் சேர்வைக்காரரும், இவர்களுடைய தலைவரும் வைக்கப்பட்டிருந்தார்கள்; இவர்கள் வருஷத்திலுண்டான மாதங்களிலெல்லாம் மாதத்திற்கு மாதம் ராஜாவைச் சேவிக்கிறதற்கு வகுக்கப்பட்ட வரிசைகளின்படியெல்லாம் மாறிமாறி வருவார்கள்; ஒவ்வொரு வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
அவன் பேரேசின் சந்ததியாரில் சகல சேனாபதிகளின் தலைவனாயிருந்து முதல் மாதம் விசாரித்தான்.
இரண்டாவது மாதத்தின் வகுப்பின்மேல் அகோகியனான தோதாயி இருந்தான்; அவன் வகுப்பிலே மிக்லோத் தளகர்த்தனாயிருந்தான்; அவன் வகுப்பிலே இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
மூன்றாவது மாதத்தின் மூன்றாம் சேனாபதி யோய்தாவின் குமாரனாகிய பெனாயா என்னும் தலைமையான பிரதானி; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
இந்தப் பெனாயா அந்த முப்பது பராக்கிரமசாலிகளில் ஒருவனும் அந்த முப்பது பேர்களின் தலைவனுமாயிருந்தான்; அவனுடைய வகுப்பை அவன் குமாரனாகிய அமிசபாத் விசாரித்தான்.
நாலாவது மாதத்தின் நாலாம் சேனாபதி யோவாபின் சகோதரனாகிய ஆசகேலும், அவனுக்குப்பின்பு அவன் குமாரன் செப்தியாவுமே; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
ஐந்தாவது மாதத்தின் ஐந்தாம் சேனாபதி இஸ்ராகியனான சம்கூத் என்பவன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
ஆறாவது மாதத்தின் ஆறாம் சேனாபதி இக்கேசின் குமாரன் ஈரா என்னும் தெக்கோவியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
ஏழாவது மாதத்தின் ஏழாம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் ஒருவனாகிய ஏலேஸ் என்னும் பெலோனியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
எட்டாவது மாதத்தின் எட்டாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய சிபெக்காயி என்னும் ஊஷாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
ஒன்பதாவது மாதத்தின் ஒன்பதாம் சேனாபதி பென்யமீனரில் அபியேசர் என்னும் ஆனதோத்தான்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
பத்தாவது மாதத்தின் பத்தாம் சேனாபதி சாரியரில் ஒருவனாகிய மக்ராயி என்னும் நெத்தோபாத்தியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.
பதினோராவது மாதத்தின் பதினோராம் சேனாபதி எப்பிராயீம் புத்திரரில் பெனாயா என்னும் பிரத்தோனியன்; அவன் வகுப்பில் இருபத்து நாலாயிரம்பேர் இருந்தார்கள்.