அப்பொழுது அகாஸ்வேரு ராஜா ராஜாத்தியாகிய எஸ்தரையும் யூதனாகிய மொர்தெகாயையும் நோக்கி: இதோ, ஆமானின் வீட்டை எஸ்தருக்குக் கொடுத்தேன்; அவன் யூதர்மேல் தன் கையைப் போட எத்தனித்தபடியினால் அவனை மரத்திலே தூக்கிப்போட்டார்கள்.
இப்போதும் உங்களுக்கு இஷ்டமானபடி நீங்கள் ராஜாவின் நாமத்தினால் யூதருக்காக எழுதி, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடுங்கள்; ராஜாவின்பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரைபோடப்பட்டதைச் செல்லாமற்போகப்பண்ண ஒருவராலும் கூடாது என்றான்.
சீவான் மாதம் என்னும் மூன்றாம் மாதம் இருபத்துமூன்றாந்தேதியாகிய அக்காலத்திலேதானே ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; மொர்தெகாய் கற்பித்தபடியெல்லாம் யூதருக்கும் இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசமட்டுமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளின் தேசாதிபதிகளுக்கும், அதிபதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும், யூதருக்கும் அவர்கள் அட்சரத்திலும் அவர்கள் பாஷையிலும் எழுதப்பட்டது.
அந்தக் கட்டளைகள் அகாஸ்வேரு ராஜாவின் பேரால் எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டபின், குதிரைகள்மேலும் வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறிப்போகிற அஞ்சற்காரர் கையில் அனுப்பப்பட்டது.
அவைகளில், அகாஸ்வேரு ராஜாவுடைய எல்லா நாடுகளிலும் ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய அந்த ஒரே நாளிலே,
அந்தந்தப் பட்டணத்திலிருக்கிற யூதர் ஒன்றாய்ச் சேர்ந்து, தங்கள் பிராணனைக் காப்பாற்றவும், தங்களை விரோதிக்கும் சத்துருக்களாகிய ஜனத்தாரும் தேசத்தாருமான எல்லாரையும், அவர்கள் குழந்தைகளையும், ஸ்திரீகளையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்கள் உடைமைகளைக் கொள்ளையிடவும், ராஜா யூதருக்குக் கட்டளையிட்டார் என்று எழுதியிருந்தது.
யூதர் தங்கள் பகைஞருக்குச் சரிக்குச் சரிக்கட்டும்படி நியமித்த அன்றையதினத்தில் ஆயத்தமாயிருக்கவேண்டுமென்று அந்தந்த நாட்டிலுள்ள சகல ஜனங்களுக்கும் கூறப்படுகிறதற்காகக் கொடுக்கப்பட்ட கட்டளையின் நகல் இதுவே; இது ஒவ்வொரு நாட்டிலும் பிரசித்தம்பண்ணப்பட்டது.
அப்படியே வேகமான ஒட்டகங்கள்மேலும், கோவேறு கழுதைகள்மேலும் ஏறின அஞ்சற்காரர் ராஜாவின் வார்த்தையினாலே ஏவப்பட்டு, தீவிரத்தோடே புறப்பட்டுப்போனார்கள்; அந்தக் கட்டளை சூசான் அரமனையில் கொடுக்கப்பட்டது.
அப்பொழுது மொர்தெகாய் இளநீலமும் வெள்ளையுமான ராஜவஸ்திரமும், பெரிய பொன்முடியும், பட்டும் இரத்தாம்பரமும் அணிந்தவனாய் ராஜாவினிடத்திலிருந்து புறப்பட்டான்; சூசான் நகரம் ஆர்ப்பரித்து மகிழ்ந்திருந்தது.
இவ்விதமாய் யூதருக்கு வெளிச்சமும், மகிழ்ச்சியும், களிப்பும், கனமும் உண்டாயிற்று.
ராஜாவின் வார்த்தையும் அவனுடைய கட்டளையும் போய்ச்சேர்ந்த எல்லா நாடுகளிலும், எல்லாப் பட்டணங்களிலும், யூதருக்குள்ளே அது மகிழ்ச்சியும், களிப்பும், விருந்துண்டு கொண்டாடும் நல்ல நாளுமாயிருந்தது; யூதருக்குப் பயப்படுகிறபயம் தேசத்து ஜனங்களைப் பிடித்ததினால், அவர்களில் அநேகர் யூதமார்க்கத்தில் அமைந்தார்கள்.
ராஜாவின் வார்த்தையின்படியும் அவனுடைய கட்டளையின்படியும் செய்யப்படுகிறதற்கு, ஆதார் மாதம் என்கிற பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, யூதரின் பகைஞர் அவர்களை மேற்கொள்ளலாம் என்று நம்பினார்களே; அந்நாளிலேதானே, யூதரானவர்கள் தங்கள் பகைஞரை மேற்கொள்ளும்படிக்குக் காரியம் மாறுதலாய் முடிந்தது.
யூதர் அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள பட்டணங்களிலே தங்களுக்குப் பொல்லாப்பு வரப்பண்ணப்பார்த்தவர்கள்மேல் கைபோடக் கூடிக்கொண்டார்கள்; ஒருவரும் அவர்களுக்கு முன்பாக நிற்கக்கூடாதிருந்தது; அவர்களைப்பற்றி சகல ஜனங்களுக்கும் பயமுண்டாயிற்று.
நாடுகளின் சகல அதிகாரிகளும், தேசாதிபதிகளும், துரைகளும், ராஜாவின் காரியங்களை நடப்பிக்கிறவர்களும், யூதருக்குத் துணைநின்றார்கள்; மொர்தெகாயினால் உண்டான பயங்கரம் அவர்களைப் பிடித்தது.
மொர்தெகாய் ராஜாவின் அரமனையில் பெரியவனாயிருந்தான்; அவனுடைய கீர்த்தி எல்லா நாடுகளிலும் பிரசித்தமாயிற்று; இந்த மொர்தெகாய் என்பவன் மேன்மேலும் பெரியவனானான்.
அப்படியே யூதர் தங்கள் சத்துருக்களையெல்லாம் பட்டயத்தால் வெட்டிக்கொன்று நிர்மூலமாக்கி, தங்கள் இஷ்டப்படி தங்கள் பகைஞருக்குச் செய்தார்கள்.
யூதர் சூசான் அரமனையிலும் ஐந்நூறுபேரைக் கொன்று நிர்மூலமாக்கினார்கள்.
அம்மெதாத்தாவின் குமாரனாகிய ஆமான் என்னும் யூதருடைய சத்துருவின் குமாரரான பர்சான்தாத்தா, தல்போன், அஸ்பாதா,
பொராதா, அதலியா, அரிதாத்தா,
பர்மஷ்டா, அரிசாய், அரிதாய், வாய்சாதா ஆகிய பத்துப்பேரையும் கொன்றுபோட்டார்கள்.
ஆனாலும் கொள்ளையிடத் தங்கள் கையை நீட்டவில்லை.
அன்றையதினம் சூசான் அரமனையில் கொன்றுபோடப்பட்டவர்களின் தொகை ராஜசமுகத்தில் கொண்டுவரப்பட்டது.
அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.
அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையதினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.
அப்படியே செய்யும்படிக்கு ராஜா உத்தரவு கொடுத்தான்; அதற்குச் சூசானிலே கட்டளை பிறந்தது; ஆமானின் பத்துக் குமாரருடைய உடலையும் தூக்கிப்போட்டார்கள்.