பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.
அப்பொழுது அவர் தமது கோபத்திலே அவர்களோடே பேசி, தமது உக்கிரத்திலே அவர்களைக் கலங்கப்பண்ணுவார்.
நான் என்னுடைய பரிசுத்த பர்வதமாகிய சீயோன்மீதில் என்னுடைய ராஜாவை அபிஷேகம்பண்ணி வைத்தேன் என்றார்.
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;
என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்;
இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
இப்போதும் ராஜாக்களே, உணர்வடையுங்கள், பூமியின் நியாயாதிபதிகளே, எச்சரிக்கையாயிருங்கள்.
பயத்துடனே கர்த்தரைச் சேவியுங்கள், நடுக்கத்துடனே களிகூருங்கள்.
குமாரன் கோபங்கொள்ளாமலும், நீங்கள் வழியிலே அழியாமலும் இருக்கும்படிக்கு, அவரை முத்தஞ்செய்யுங்கள்; கொஞ்சக்காலத்திலே அவருடைய கோபம் பற்றியெரியும்; அவரை அண்டிக்கொள்ளுகிற யாவரும் பாக்கியவான்கள்.
(தாவீது தன் குமாரன் அப்சலோமுக்குத் தப்பி ஓடிப்போகையில் பாடின சங்கீதம்.) கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.
தேவனிடத்தில் அவனுக்கு இரட்சிப்பு இல்லையென்று, என் ஆத்துமாவைக் குறித்துச் சொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள். (சேலா.)
ஆனாலும் கர்த்தாவே, நீர் என் கேடகமும், என் மகிமையும், என் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறீர்.
நான் கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவிகொடுத்தார். (சேலா.)
நான் படுத்து நித்திரை செய்தேன்; விழித்துக்கொண்டேன்; கர்த்தர் என்னைத் தாங்குகிறார்.
எனக்கு விரோதமாகச் சுற்றிலும் படையெடுத்து வருகிற பதினாயிரம்பேருக்கும் நான் பயப்படேன்.
கர்த்தாவே, எழுந்தருளும்; என் தேவனே, என்னை இரட்சியும். நீர் என் பகைஞர் எல்லாரையும் தாடையிலே அடித்து, துன்மார்க்கருடைய பற்களைத் தகர்த்துப்போட்டீர்.
இரட்சிப்பு கர்த்தருடையது; தேவரீருடைய ஆசீர்வாதம் உம்முடைய ஜனத்தின்மேல் இருப்பதாக. (சேலா.)
(நெகினோத்தென்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட தாவீதின் சங்கீதம்.) என் நீதியின் தேவனே, நான் கூப்பிடுகையில் எனக்குச் செவிகொடும்; நெருக்கத்தில் இருந்த எனக்கு விசாலமுண்டாக்கினீர்; எனக்கு இரங்கி, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்.
மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா.)
பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.
நீங்கள் கோபங்கொண்டாலும், பாவஞ்செய்யாதிருங்கள்; உங்கள் படுக்கையிலே உங்கள் இருதயத்தில் பேசிக்கொண்டு அமர்ந்திருங்கள். (சேலா.)
நீதியின் பலிகளைச் செலுத்தி, கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருங்கள்.
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிறகாலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்.
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.