அவன் வல்லமையை நான் கண்டு, உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
என் தேவன் தம்முடைய கிருபையினால் என்னைச் சந்திப்பார்; தேவன் என் சத்துருக்களுக்கு வரும் நீதிசரிக்கட்டுதலை நான் காணும்படி செய்வார்.
அவர்களைக் கொன்றுபோடாதேயும், என் ஜனங்கள் மறந்துபோவார்களே; எங்கள் கேடகமாகிய ஆண்டவரே, உமது வல்லமையினால் அவர்களைச் சிதறடித்து, அவர்களைத் தாழ்த்திப்போடும்.
அவர்கள் உதடுகளின் பேச்சு அவர்கள் வாயின் பாவமாயிருக்கிறது; அவர்கள் இட்ட சாபமும் சொல்லிய பொய்யும் ஆகிய இவைகளினிமித்தம் தங்கள் பெருமையில் அகப்படுவார்களாக.
தேவன் பூமியின் எல்லைவரைக்கும் யாக்கோபிலே அரசாளுகிறவர் என்று அவர்கள் அறியும்பொருட்டு, அவர்களை உம்முடைய உக்கிரத்திலே நிர்மூலமாக்கும்; இனி இராதபடிக்கு அவர்களை நிர்மூலமாக்கும். (சேலா.)
அவர்கள் சாயங்காலத்தில் திரும்பிவந்து, நாய்களைப்போல ஊளையிட்டு, ஊரைச்சுற்றித் திரிகிறார்கள்.
அவர்கள் உணவுக்காக அலைந்து திரிந்து திருப்தியடையாமல், முறுமுறுத்துக்கொண்டிருப்பார்கள்.
நானோ உம்முடைய வல்லமையைப் பாடி, காலையிலே உம்முடைய கிருபையை மகிழ்ச்சியோடு புகழுவேன்; எனக்கு நெருக்கமுண்டான நாளிலே நீர் எனக்குத் தஞ்சமும் உயர்ந்த அடைக்கலமுமானீர்.
என் பெலனே, உம்மைக் கீர்த்தனம்பண்ணுவேன்; தேவன் எனக்கு உயர்ந்த அடைக்கலமும், கிருபையுள்ள என் தேவனுமாயிருக்கிறார்.
தேவனே, நீர் எங்களைக் கைவிட்டீர், எங்களைச் சிதறடித்தீர், எங்கள்மேல் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடமாய்த் திரும்பியருளும்.
பூமியை அதிரப்பண்ணி, அதை வெடிப்பாக்கினீர்; அதின் வெடிப்புகளைப் பொருந்தப்பண்ணும்; அது அசைகின்றது.
உம்முடைய ஜனங்களுக்குக் கடினமான காரியத்தைக் காண்பித்தீர்; தத்தளிப்பின் மதுபானத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்தீர்.
சத்தியத்தினிமித்தம் ஏற்றும்படியாக, உமக்குப் பயந்து நடக்கிறவர்களுக்கு ஒரு கொடியைக் கொடுத்தீர். (சேலா.)
உமது பிரியர் விடுவிக்கப்படும்படி, உமது வலதுகரத்தினால் இரட்சித்து, எனக்குச் செவிகொடுத்தருளும்.
தேவன் தமது பரிசுத்தத்தைக்கொண்டு விளம்பினார், ஆகையால் களிகூருவேன்; சீகேமைப் பங்கிட்டு சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொள்ளுவேன்.
கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.
மோவாப் என் பாதபாத்திரம், ஏதோமின்மேல் என் பாதரட்சையை எறிந்துபோடுவேன்; பெலிஸ்தியாவே, என்னிமித்தம் ஆர்ப்பரித்துக்கொள்.
அரணான பட்டணத்திற்குள் என்னை நடத்திக்கொண்டுபோகிறவர் யார்? ஏதோம் மட்டும் எனக்கு வழிகாட்டுகிறவர் யார்?
எங்கள் சேனைகளோடே புறப்படாமலிருந்த தேவரீர் அல்லவோ? எங்களைத் தள்ளிவிட்டிருந்த தேவரீர் அல்லவோ?
இக்கட்டில் எங்களுக்கு உதவிசெய்யும்; மனுஷனுடைய உதவி விருதா.
தேவனாலே பராக்கிரமம் செய்வோம்; அவரே எங்கள் சத்துருக்களை மிதித்துப்போடுவார்.
தேவனே, என் கூப்பிடுதலைக்கேட்டு, என் விண்ணப்பத்தைக் கவனியும்.
என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.
நீர் எனக்கு அடைக்கலமும், சத்துருவுக்கு எதிரே பெலத்த துருகமுமாயிருந்தீர்.
நான் உம்முடைய கூடாரத்தில் சதாகாலமும் தங்குவேன்; உமது செட்டைகளின் மறைவிலே வந்து அடைவேன். (சேலா.)