தேவனே, உம்முடைய நடைகளைக் கண்டார்கள்; என் தேவனும் என் ராஜாவும் பரிசுத்த ஸ்தலத்திலே நடந்துவருகிற நடைகளையே கண்டார்கள்.
முன்னாகப் பாடுகிறவர்களும், பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள்.
இஸ்ரவேலின் ஊற்றிலிருந்து தோன்றினவர்களே, சபைகளின் நடுவே ஆண்டவராகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்.
அங்கே அவர்களை ஆளுகிற சின்ன பென்யமீனும், யூதாவின் பிரபுக்களும், அவர்கள் கூட்டமும், செபுலோனின் பிரபுக்களும், நப்தலியின் பிரபுக்களும் உண்டு.
உன் தேவன் உனக்குப் பலத்தைக் கட்டளையிட்டார்; தேவனே, நீர் எங்கள்நிமித்தம் உண்டுபண்ணினதைத் திடப்படுத்தும்.
எருசலேமிலுள்ள உம்முடைய ஆலயத்தினிமித்தம், ராஜாக்கள் உமக்குக் காணிக்கைகளைக் கொண்டுவருவார்கள்.
நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார்.
பிரபுக்கள் எகிப்திலிருந்து வருவார்கள்; எத்தியோப்பியா தேவனை நோக்கி கையெடுக்கத் தீவிரிக்கும்.
பூமியின் ராஜ்யங்களே, தேவனைப் பாடி, ஆண்டவரைக் கீர்த்தனம் பண்ணுங்கள். (சேலா.)
ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள்; இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார்.
தேவனுடைய வல்லமையைப் பிரசித்தப்படுத்துங்கள்; அவருடைய மகிமை இஸ்ரவேலின்மேலும், அவருடைய வல்லமை மேகமண்டலங்களிலும் உள்ளது.
தேவனே, உமது பரிசுத்த ஸ்தலங்களிலிருந்து பயங்கரமாய் விளங்குகிறீர்; இஸ்ரவேலின் தேவன் தம்முடைய ஜனங்களுக்குப் பெலனையும் சத்துவத்தையும் அருளுகிறவர்; தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக.
தேவனே, என்னை இரட்சியும்; வெள்ளங்கள் என் ஆத்துமாமட்டும் பெருகிவருகிறது.
ஆழமான உளையில் அமிழ்ந்திருக்கிறேன், நிற்க நிலையில்லை, நிலையாத ஜலத்தில் ஆழ்ந்திருக்கிறேன்; வெள்ளங்கள் என்மேல் புரண்டுபோகிறது.
நான் கூப்பிடுகிறதினால் இளைத்தேன்; என் தொண்டை வறண்டுபோயிற்று; என் தேவனுக்கு நான் காத்திருக்கையால், என் கண்கள் பூத்துப்போயிற்று.
நிமித்தமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறார்கள்; வீணாக எனக்குச் சத்துருக்களாகி என்னைச் சங்கரிக்கவேண்டுமென்றிருக்கிறவர்கள் பலத்திருக்கிறார்கள்; நான் எடுத்துக்கொள்ளாததை நான் கொடுக்கவேண்டியதாயிற்று.
தேவனே, நீர் என் புத்தியீனத்தை அறிந்திருக்கிறீர்; என் குற்றங்கள் உமக்கு மறைந்திருக்கவில்லை.
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவரே, உமக்காகக் காத்திருக்கிறவர்கள் என்னிமித்தம் வெட்கப்பட்டுப்போகாதிருப்பார்களாக; இஸ்ரவேலின் தேவனே, உம்மைத் தேடுகிறவர்கள் என்னிமித்தம் நாணமடையாதிருப்பார்களாக.
உமதுநிமித்தம் நிந்தையைச் சகித்தேன்; இலச்சை என் முகத்தை மூடிற்று.
என் சகோதரருக்கு வேற்று மனுஷனும், என் தாயின் பிள்ளைகளுக்கு அந்நியனுமானேன்.
உம்முடைய வீட்டைக்குறித்து உண்டான பக்திவைராக்கியம் என்னைப் பட்சித்தது; உம்மை நிந்திக்கிறவர்களுடைய நிந்தனைகள் என்மேல் விழுந்தது.
என் ஆத்துமா வாடும்படி உபவாசித்து அழுதேன்; அதுவும் எனக்கு நிந்தையாய் முடிந்தது.
இரட்டை என் உடுப்பாக்கினேன்; அப்பொழுதும் அவர்களுக்குப் பழமொழியானேன்.
வாசலில் உட்கார்ந்திருக்கிறவர்கள் எனக்கு விரோதமாய்ப் பேசுகிறார்கள்; மதுபானம்பண்ணுகிறவர்களின் பாடலானேன்.
ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.