என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.
என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது.
தீமையைக் கட்டளையினால் பிறப்பிக்கிற கொடுங்கோலாசனம் உமக்கு இசைந்திருக்குமோ?
அவர்கள் நீதிமானுடைய ஆத்துமாவுக்கு விரோதமாய்க் கூட்டங்கூடி, குற்றமில்லாத இரத்தத்தைக் குற்றப்படுத்துகிறார்கள்.
கர்த்தரோ எனக்கு அடைக்கலமும், என் தேவன் நான் நம்பியிருக்கிற கன்மலையுமாயிருக்கிறார்.
அவர்களுடைய அக்கிரமத்தை அவர்கள்மேல் திருப்பி, அவர்களுடைய பொல்லாப்பினிமித்தம் அவர்களைச் சங்கரிப்பார்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் அவர்களைச் சங்கரிப்பார்.
கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடி, நம்முடைய இரட்சணியக் கன்மலையைச் சங்கீர்த்தனம் பண்ணக்கடவோம் வாருங்கள்.
துதித்தலுடனே அவர் சந்நிதிக்கு முன்பாக வந்து, சங்கீதங்களால் அவரை ஆர்ப்பரித்துப் பாடக்கடவோம்.
கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.
பூமியின் ஆழங்கள் அவர் கையில் இருக்கிறது; பர்வதங்களின் உயரங்களும் அவருடையவைகள்.
சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.
நம்மை உண்டாக்கின கர்த்தருக்கு முன்பாக நாம் பணிந்து குனிந்து முழங்காற்படியிடக்கடவோம் வாருங்கள்.
அவர் நம்முடைய தேவன்; நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.
இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களாகில், வனாந்தரத்தில் கோபம் மூட்டினபோதும் சோதனை நாளிலும் நடந்ததுபோல, உங்கள் இருதயத்தைக் கடினப்படுத்தாதேயுங்கள்.
அங்கே உங்கள் பிதாக்கள் என்னைச் சோதித்து, என்னைப் பரீட்சை பார்த்து, என் கிரியையையும் கண்டார்கள்.
நாற்பது வருஷமாய் நான் அந்தச் சந்ததியை அரோசித்து, அவர்கள் வழுவிப்போகிற இருதயமுள்ள ஜனமென்றும், என்னுடைய வழிகளை அறியாதவர்களென்றும் சொல்லி,
என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லையென்று, என்னுடைய கோபத்திலே ஆணையிட்டேன்.
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள்.
கர்த்தரைப் பாடி, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரித்து, நாளுக்கு நாள் அவருடைய இரட்சிப்பைச் சுவிசேஷமாய் அறிவியுங்கள்.
ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.
கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
சகல ஜனங்களுடைய தேவர்களும் விக்கிரகங்கள்தானே; கர்த்தரோ வானங்களை உண்டாக்கினவர்.
மகிமையும் கனமும் அவர் சமுகத்தில் இருக்கிறது, வல்லமையும் மகத்துவமும் அவர் பரிசுத்த ஸ்தலத்திலுள்ளது.
ஜனங்களின் வம்சங்களே, கர்த்தருக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள், கர்த்தருக்கே அதைச் செலுத்துங்கள்.
கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய பிராகாரங்களில் பிரவேசியுங்கள்.