காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,
அவனை நோக்கி: வனாந்தரத்தில் எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடவேண்டும் என்று சொல்லும்படி எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் என்னை உம்மிடத்திற்கு அனுப்பியும், இதுவரைக்கும் நீர் கேளாமற்போனீர்.
இதோ, என் கையில் இருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர்மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,
நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக்கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
மேலும், கர்த்தர் மோசேயை நோக்கி: நீ ஆரோனிடத்தில் உன் கோலை எடுத்துக்கொண்டு எகிப்தின் நீர்நிலைகளாகிய அவர்கள் வாய்க்கால்கள்மேலும் நதிகள்மேலும் குளங்கள்மேலும் தண்ணீர் நிற்கிற எல்லா இடங்கள்மேலும், அவைகள் இரத்தமாகும்படிக்கு, உன் கையை நீட்டு; அப்பொழுது எகிப்துதேசம் எங்கும் மரப் பாத்திரங்களிலும் கற்பாத்திரங்களிலும் இரத்தம் உண்டாயிருக்கும் என்று சொல் என்றார்.
கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி, நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.
நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற்போயிற்று, எகிப்துதேசமெங்கும் இரத்தமாயிருந்தது.
எகிப்தின் மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்தார்கள்; கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனின் இருதயம் கடினப்பட்டது. அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.
பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
நதியின் தண்ணீர் குடிக்க உதவாதபடியால், குடிக்கத்தக்க தண்ணீருக்காக எகிப்தியர் எல்லாரும் நதியோரத்தில் ஊற்றுத் தோண்டினார்கள்.
கர்த்தர் நதியை அடித்து ஏழு நாள் ஆயிற்று.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனைசெய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.
நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்.
நதி தவளைகளைத் திரளாய்ப் பிறப்பிக்கும்; அவைகள் உன் வீட்டிலும் உன் படுக்கை அறையிலும், உன் மஞ்சத்தின்மேலும், உன் ஊழியக்காரர் வீடுகளிலும், உன் ஜனங்களிடத்திலும், உன் அடுப்புகளிலும், மாப்பிசைகிற உன் தொட்டிகளிலும் வந்து ஏறும்.
அந்தத் தவளைகள் உன்மேலும், உன் ஜனங்கள்மேலும், உன் ஊழியக்காரர் எல்லார்மேலும் வந்து ஏறும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையில் இருக்கிற கோலை நதிகள்மேலும் வாய்க்கால்கள்மேலும் குளங்கள்மேலும் நீட்டி, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.
அப்படியே ஆரோன் தன் கையை எகிப்திலுள்ள தண்ணீர்கள்மேல் நீட்டினான்; அப்பொழுது தவளைகள் வந்து, எகிப்துதேசத்தை மூடிக்கொண்டது.
மந்திரவாதிகளும் தங்கள் மந்திரவித்தையினால் அப்படிச் செய்து, எகிப்துதேசத்தின்மேல் தவளைகளை வரப்பண்ணினார்கள்.
பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.
அப்பொழுது மோசே பார்வோனை நோக்கி: தவளைகள் நதியிலேமாத்திரம் இருக்கத்தக்கதாய் அவைகளை உம்மிடத்திலும் உம்முடைய வீட்டிலும் இல்லாமல் ஒழிந்துபோகும்படிசெய்ய, உமக்காகவும் உம்முடைய ஊழியக்காரருக்காகவும் உம்முடைய ஜனங்களுக்காகவும் நான் விண்ணப்பம்பண்ணவேண்டிய காலத்தைக் குறிக்கும் மேன்மை உமக்கே இருப்பதாக என்றான்.
அதற்கு அவன்: நாளைக்கு என்றான். அப்பொழுது இவன்: எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு ஒப்பானவர் இல்லை என்பதை நீர் அறியும்படிக்கு உம்முடைய வார்த்தையின்படி ஆகக்கடவது.
தவளைகள் உம்மையும் உம்முடைய வீட்டையும் உம்முடைய ஊழியக்காரரையும் உம்முடைய ஜனங்களையும் விட்டு நீங்கி, நதியிலேமாத்திரம் இருக்கும் என்றான்.
மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.
கர்த்தர் மோசேயின் சொற்படி செய்தார்; வீடுகளிலும் முற்றங்களிலும் வயல்களிலும் இருந்த தவளைகள் செத்துப்போயிற்று.
அவைகளைக் குவியல் குவியலாகச் சேர்த்தார்கள்; அதினால் பூமியெங்கும் நாற்றம் எடுத்தது.