நான் எழுந்து நகரத்தின் வீதிகளிலும் தெருக்களிலும் திரிந்து, என் ஆத்தும நேசரைத் தேடுவேன் என்றேன்; தேடியும் நான் அவரைக் காணவில்லை.
நகரத்திலே திரிகிற காவலாளர் என்னைக் கண்டார்கள்: என் ஆத்துமநேசரைக் கண்டீர்களா என்று அவர்களைக் கேட்டேன்.
நான் அவர்களை விட்டுக் கொஞ்சதூரம் கடந்துபோனவுடனே, என் ஆத்தும நேசரைக் கண்டேன்; அவரை நான் என் தாயின் வீட்டிலும் என்னைப் பெற்றவளின் அறையிலும் கொண்டுவந்து விடுமட்டும் விடாமல் பற்றிக்கொண்டேன்.
எருசலேமின் குமாரத்திகளே! எனக்குப் பிரியமானவளுக்கு மனதாகுமட்டும் நீங்கள் அவளை விழிக்கப்பண்ணாமலும் எழுப்பாமலுமிருக்கும்படி, வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் உங்களை ஆணையிடுகிறேன்.
வெள்ளைப்போளத்தினாலும் சாம்பிராணியினாலும் வர்த்தகருடைய சகலவித கந்தப்பொடியினாலும் உண்டாகிய வாசனையை வீசி, தூபஸ்தம்பங்களைப்போல் வனாந்தரத்திலிருந்து வருகிற இவர் யார்?
இதோ, சாலொமோனுடைய மஞ்சம்; இஸ்ரவேலின் சவுரியவான்களில் அறுபது சவுரியவான்கள் அதைச் சுற்றி நிற்கிறார்கள்.
இவர்களெல்லாரும் பட்டயம் பிடித்து, யுத்தத்துக்குப் பழகினவர்களாயிருக்கிறார்கள்; இராக்கால பயத்தினிமித்தம் அவனவனுடைய பட்டயம் அவனவன் அரையிலிருக்கிறது.
சாலொமோன் ராஜா தனக்கு லீபனோனின் மரத்தினால் ஒரு இரதத்தைப் பண்ணுவித்தார்.
அதின் தூண்களை வெள்ளியினாலும், அதின் தட்டைப் பொன்னினாலும், அதின் ஆசனத்தை இரத்தாம்பரத்தினாலும் பண்ணுவித்தார்; அதின் உட்புறத்திலே எருசலேமின் குமாரத்திகளினிமித்தம் நேசம் என்னும் சமுக்காளம் விரித்திருந்தது.
சீயோன் குமாரத்திகளே! நீங்கள் புறப்பட்டுப்போய், ராஜாவாகிய சாலொமோனின் கலியாண நாளிலும், மனமகிழ்ச்சியின் நாளிலும், அவருடைய தாயார் அவருக்குச் சூட்டின முடியோடிருக்கிற அவரைப் பாருங்கள்.
நீ ருபவதி, என் பிரியமே! நீ ருபவதி; உன் முக்காட்டின் நடுவே உன் கண்கள் புறாக்கண்களாயிருக்கிறது; உன் கூந்தல் கீலேயாத் மலையில் தழைமேயும் வெள்ளாட்டு மந்தையைப்போலிருக்கிறது.
உன் பற்கள், மயிர் கத்தரிக்கப்பட்டபின் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிறவைகளும், ஒன்றாகிலும் மலடாயிராமல் எல்லாம் இரட்டைக்குட்டியீன்றவைகளுமான ஆட்டுமந்தையைப்போலிருக்கிறது.
உன் உதடுகள் சிவப்புநூலுக்குச் சமானமும், உன் வாக்கு இன்பமுமாயிருக்கிறது; உன் முக்காட்டின் நடுவே உன் கன்னங்கள் வெடித்த மாதளம் பழம்போலிருக்கிறது.
உன் கழுத்து, பராக்கிரமசாலிகளின் கேடகங்களாகிய ஆயிரம் பரிசைகள் தூக்கியிருக்கிற ஆயுதசாலையாக்கப்பட்ட தாவீதின் கோபுரம்போலிருக்கிறது.
உன் இரண்டு ஸ்தனங்களும் லீலிபுஷ்பங்களில் மேயும் வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானம்.
பகல் குளிர்ச்சியாகி நிழல் சாய்ந்துபோகும்வரைக்கும், நான் வெள்ளைப்போளமலையிலும் சாம்பிராணிமலையிலும் போயிருப்பேன்.
என் பிரியமே! நீ பூரண ரூபவதி; உன்னில் பழுதொன்றுமில்லை.
லீபனோனிலிருந்து என்னோடே வா, என் மணவாளியே! லீபனோனிலிருந்து என்னோடே வா. அமனாவின் கொடுமுடியிலிருந்தும், சேனீர் எர்மோனின் கொடுமுடியிலிருந்தும், சிங்கங்களின் தாபரங்களிலிருந்தும், சிவிங்கிகளின் மலைகளிலிருந்தும் கீழே பார்.
என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்; என் சகோதரியே! என் மணவாளியே! உன் கண்களிலொன்றினாலும் உன் கழுத்திலுள்ள ஒரு சரப்பணியினாலும் என் இருதயத்தைக் கவர்ந்துகொண்டாய்.
உன் நேசம் எவ்வளவு இன்பமாயிருக்கிறது; என் சகோதரியே! என் மணவாளியே! திராட்சரசத்தைப்பார்க்கிலும் உன் நேசம் எவ்வளவு மதுரமாயிருக்கிறது! சகல கந்தவர்க்கங்களைப்பார்க்கிலும் உன் பரிமளதைலங்கள் எவ்வளவு வாசனையாயிருக்கிறது!
என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின்கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.
என் சகோதரியே! என் மணவாளியே! நீ அடைக்கப்பட்ட தோட்டமும், மறைவு கட்டப்பட்ட நீரூற்றும், முத்திரிக்கப்பட்ட கிணறுமாயிருக்கிறாய்.
உன் தோட்டம் மாதளஞ்செடிகளும், அருமையான கனிமரங்களும், மருதோன்றிச் செடிகளும், நளதச்செடிகளும்,
நளதமும், குங்குமமும், வசம்பும், லவங்கமும், சகலவித தூபவர்க்க மரங்களும், வெள்ளைப்போளச்செடிகளும், சந்தன விருட்சங்களும், சகலவித கந்தவர்க்கச்செடிகளுமுள்ள சிங்காரவனமாயிருக்கிறது.
தோட்டங்களுக்கு நீரூற்றும், ஜீவத்தண்ணீரின் துரவும், லீபனோனிலிருந்து ஓடிவரும் வாய்க்கால்களும் உண்டாயிருக்கிறது.