Total Matches: 31082

ஏசாயா 37:21

அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா, எசேக்கியாவுக்குச் சொல்லியனுப்பினது: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் உரைக்கிறது என்னவென்றால், அசீரியா ராஜாவாகிய சனகெரிபினிமித்தம் நீ என்னை நோக்கி விண்ணப்பம்பண்ணினாயே.

ஏசாயா 37:22

அவனைக்குறித்துக் கர்த்தர் சொல்லுகிற வசனமாவது: சீயோன் குமாரத்தியாகிய கன்னியாஸ்திரீ உன்னை இகழ்ந்து, உன்னைப் பரிகாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உன் பின்னாலே தலையைத் துலுக்குகிறாள்.

ஏசாயா 37:23

யாரை நிந்தித்துத் தூஷித்தாய்? யாருக்கு விரோதமாய் உன் சத்தத்தை உயர்த்தினாய்? நீ இஸ்ரவேலின் பரிசுத்தருக்கு விரோதமாய் அல்லவோ உன் கண்களை மேட்டிமையாய் ஏறெடுத்தாய்.

ஏசாயா 37:24

உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,

ஏசாயா 37:25

நான் கிணறு வெட்டித் தண்ணீர் குடித்தேன்; என் உள்ளங்காலினால் அரணிப்பான இடங்களின் அகழிகளையெல்லாம் வறளவும் பண்ணினேன் என்றும் சொன்னாய்.

ஏசாயா 37:26

நான் வெகுகாலத்துக்குமுன் அதை நியமித்து, பூர்வநாட்கள்முதல் அதைத் திட்டம்பண்ணினேன் என்பதை நீ கேட்டதில்லையோ? இப்பொழுது நீ அரணான பட்டணங்களைப் பாழான மண்மேடுகளாக்கும்படி நானே அதைச் சம்பவிக்கப்பண்ணினேன்.

ஏசாயா 37:27

அதினாலே அவைகளின் குடிகள் கையிளைத்தவர்களாகி, கலங்கி வெட்கப்பட்டு, வெளியின் பூண்டுக்கும், பச்சிலைக்கும், வீடுகளின்மேல் முளைக்கும் புல்லுக்கும், ஓங்கி வளருமுன் தீய்ந்துபோம் பயிருக்கும் சமானமானார்கள்.

ஏசாயா 37:28

உன் இருப்பையும், உன் போக்கையும், உன் வரவையும், நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளிக்கிறதையும் அறிவேன்.

ஏசாயா 37:29

நீ எனக்கு விரோதமாய்க் கொந்தளித்து, வீரியம்பேசினது என் செவிகளில் ஏறினபடியினாலே, நான் என் துறட்டை உன் மூக்கிலும், என் கடிவாளத்தை உன் வாயிலும் போட்டு, நீ வந்த வழியே உன்னைத் திரும்பப்பண்ணுவேன்.

ஏசாயா 37:30

உனக்கு அடையாளமாயிருப்பது என்னவென்றால்: இந்த வருஷத்திலே தப்பிப் பயிராகிறதையும், இரண்டாம் வருஷத்திலே தானாய் விளைகிறதையும் சாப்பிடுவீர்கள்; மூன்றாம் வருஷத்திலோ விதைத்து அறுத்து, திராட்சத்தோட்டங்களை நாட்டி, அவைகளின் கனிகளைப் புசிப்பீர்கள்.

ஏசாயா 37:31

யூதா வம்சத்தாரில் தப்பி மீந்திருக்கிறவர்கள் மறுபடியும் கீழே வேர்பற்றி மேலே கனிகொடுப்பார்கள்.

ஏசாயா 37:32

மீதியாயிருக்கிறவர்கள் எருசலேமிலும், தப்பினவர்கள் சீயோன் மலையிலுமிருந்து புறப்படுவார்கள்; சேனைகளுடைய கர்த்தரின் வைராக்கியம் இதைச் செய்யும்.

ஏசாயா 37:33

ஆகையால் கர்த்தர் அசீரியா ராஜாவைக்குறித்து: அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசிப்பதில்லை; இதின்மேல் அம்பு எய்வதுமில்லை; இதற்கு முன்பாகக் கேடகத்தோடே வருவதுமில்லை; இதற்கு எதிராகக் கொத்தளம்போடுவதுமில்லை.

ஏசாயா 37:34

அவன் இந்த நகரத்துக்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.

ஏசாயா 37:35

என்னிமித்தமும் என் தாசனாகிய தாவீதினிமித்தமும், நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.

ஏசாயா 37:36

அப்பொழுது கர்த்தருடைய தூதன் புறப்பட்டு, அசீரியரின் பாளயத்தில் லட்சத்தெண்பத்தையாயிரம் பேரைச் சங்கரித்தான்; அதிகாலமே எழுந்திருக்கும்போது, இதோ, அவர்களெல்லாரும் செத்த பிரேதங்களாய்க் கிடந்தார்கள்.

ஏசாயா 37:37

அப்பொழுது அசீரியா ராஜாவாகிய சனகெரிப் பிரயாணப்பட்டுத் திரும்பிப்போய், நினிவேயில் இருந்துவிட்டான்.

ஏசாயா 37:38

அவன் தன் தேவனாகிய நிஸ்ரோகின் கோவிலிலே பணிந்துகொள்ளுகிறபோது, அவன் குமாரராகிய அத்ரமலேக்கும் சரேத்சேரும் அவனைப் பட்டயத்தினால் வெட்டிப்போட்டு, அரராத் தேசத்துக்குத் தப்பி ஓடிப்போனார்கள்; அவன் குமாரனாகிய எசரத்தோன் அவன் பட்டத்திற்கு வந்து அரசாண்டான்.

ஏசாயா 38:1

அந்நாட்களில் எசேக்கியா வியாதிப்பட்டு மரணத்துக்கு ஏதுவாயிருந்தான்; அப்பொழுது ஆமோத்சின் குமாரனாகிய ஏசாயா என்னும் தீர்க்கதரிசி அவனிடத்தில் வந்து, அவனை நோக்கி: நீர் உமது வீட்டுக்காரியத்தை ஒழுங்குப்படுத்தும், நீர் பிழைக்கமாட்டீர், மரித்துப்போவீர் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.

ஏசாயா 38:2

அப்பொழுது எசேக்கியா தன் முகத்தைச் சுவர்ப்புறமாகத் திருப்பிக்கொண்டு, கர்த்தரை நோக்கி:

ஏசாயா 38:3

ஆ கர்த்தாவே, நான் உமக்கு முன்பாக உண்மையும் மன உத்தமமுமாய் நடந்து, உமது பார்வைக்கு நலமானதைச் செய்தேன் என்பதை நினைத்தருளும் என்று விண்ணப்பம்பண்ணி, எசேக்கியா மிகவும் அழுதான்.

ஏசாயா 38:4

அப்பொழுது ஏசாயாவுக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையாவது:

ஏசாயா 38:5

நீ போய் எசேக்கியாவை நோக்கி: உன் தகப்பனாகிய தாவீதின் தேவனாயிருக்கிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால், உன் விண்ணப்பத்தைக் கேட்டேன்; உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, உன் நாட்களோடே பதினைந்து வருஷம் கூட்டுவேன்.

ஏசாயா 38:6

நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன்.

ஏசாயா 38:7

இதோ, ஆகாசுடைய சூரியகடியாரத்தில் பாகைக்குப் பாகை இறங்கின சாயையைப் பத்துப்பாகை பின்னிட்டுத் திருப்புவேன் என்றார்.

Start Downloading Your Apps