தாம் சொன்ன இந்த வார்த்தையின்படி கர்த்தர் செய்வார் என்பதற்கு இது கர்த்தரால் உனக்கு அடையாளமாயிருக்கும் என்று சொல் என்றார்; அப்படியே கடியாரத்தில் இறங்கியிருந்த சூரியசாயை பத்துப்பாகை திரும்பிற்று.
யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா வியாதிப்பட்டு, தன் வியாதி நீங்கிச் சொஸ்தமானபோது எழுதிவைத்ததாவது:
நான் என் பூரண ஆயுசின் வருஷங்களுக்குச் சேராமல் பாதாளத்தின் வாசல்களுக்குட்படுவேன் என்று என் நாட்கள் அறுப்புண்கிறபோது சொன்னேன்.
கர்த்தரை, கர்த்தரை, நான் இனி உயிரோடிருக்கிறவர்களின் தேசத்திலே தரிசிப்பதில்லை; இனி பூலோகக்குடிகளோடே இருந்து மனுஷரை நான் காண்பதில்லை.
என் ஆயுசு மேய்ப்பனுடைய கூடாரத்தைப்போல என்னைவிட்டுப் பெயர்ந்துபோகிறது; நெய்கிறவன் பாவை அறுக்கிறதுபோல என் ஜீவனை அறுக்கக் கொடுக்கிறேன்; என்னைப் பாவிலிருந்து அறுத்துவிடுகிறார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர்.
விடியற்காலமட்டும் நான் எண்ணமிட்டுக்கொண்டிருந்தேன்; அவர் சிங்கம்போல என் எலும்புகளையெல்லாம் நொறுக்குவார்; இன்று இரவுக்குள்ளே என்னை முடிவடையப்பண்ணுவீர் என்று சொல்லி,
நமுட்டைப்போலும், தகைவிலான் குருவியைப்போலும் கூவினேன், புறாவைப்போல் புலம்பினேன்; என் கண்கள் உயரப் பார்க்கிறதினால் பூத்துப்போயின; கர்த்தாவே, ஒடுங்கிப்போகிறேன்; என் காரியத்தை மேற்போட்டுக்கொள்ளும் என்றேன்.
நான் என்ன சொல்லுவேன்? அவர் எனக்கு வாக்கு அருளினார்; அந்தப்பிரகாரமே செய்தார்; என் ஆயுசின் வருஷங்களிலெல்லாம் என் ஆத்துமாவின் கசப்பை நினைத்து நடந்துகொள்வேன்.
ஆண்டவரே, இவைகளினால் மனுஷர் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னைச் சொஸ்தப்படவும் பிழைக்கவும்பண்ணினீர்.
இதோ, சமாதானத்துக்குப் பதிலாக மகா கசப்பு வந்திருந்தது, தேவரீரோ என் ஆத்துமாவை நேசித்து அழிவின் குழிக்கு விலக்கினீர்; என் பாவங்களையெல்லாம் உமது முதுகுக்குப் பின்னாக எறிந்துவிட்டீர்.
பாதாளம் உம்மைத் துதியாது, மரணம் உம்மைப் போற்றாது; குழியில் இறங்குகிறவர்கள் உம்முடைய சத்தியத்தை தியானிப்பதில்லை.
நான் இன்று செய்கிறதுபோல, உயிரோடிருக்கிறவன், உயிரோடிருக்கிறவனே, உம்மைத் துதிப்பான், தகப்பன் பிள்ளைகளுக்கு உமது சத்தியத்தைத் தெரிவிப்பான்.
கர்த்தர் என்னை இரட்சிக்க வந்தார்; ஆகையால் எங்கள் ஜீவநாளெல்லாம் கர்த்தருடைய ஆலயத்திலே என் கீதவாத்தியங்களை வாசித்துப் பாடுவோம் என்று எழுதிவைத்தான்.
அத்திப்பழத்து அடையைக் கொண்டுவந்து, பிளவையின்மேல் பற்றுப்போடுங்கள்; அப்பொழுது பிழைப்பார் என்று ஏசாயா சொல்லியிருந்தான்.
அப்பொழுது எசேக்கியா: நான் கர்த்தருடைய ஆலயத்துக்குப் போவதற்கு அடையாளம் என்னவென்று கேட்டிருந்தான்.
அக்காலத்திலே பலாதானின் குமாரனாகிய மெரோதாக்பலாதான் என்னும் பாபிலோனின் ராஜா, எசேக்கியா வியாதிப்பட்டிருந்து ஆரோக்கியமானதைக் கேள்விப்பட்டு, அவனிடத்திற்கு நிருபங்களையும் வெகுமானத்தையும் அனுப்பினான்.
எசேக்கியா அவர்களைக் கண்டு சந்தோஷப்பட்டு, தன் பொக்கிஷசாலையையும், வெள்ளியையும், பொன்னையும், கந்தவர்க்கங்களையும், நல்ல பரிமளதைலத்தையும், தன் ஆயுதசாலை அனைத்தையும், தன் பொக்கிஷசாலைகளில் உள்ளதெல்லாவற்றையும் அவர்களுக்குக் காண்பித்தான்; எசேக்கியா தன் அரமனையிலும், தன் ராஜ்யத்தில் எங்கும் அவர்களுக்குக் காண்பியாதப் பொருள் ஒன்றும் இல்லை.
அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியா ராஜாவினிடத்தில் வந்து: அந்த மனுஷர் என்ன சொன்னார்கள், எங்கேயிருந்து உம்மிடத்தில் வந்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: பாபிலோன் என்னும் தூரதேசத்திலிருந்து என்னிடத்திற்கு வந்தார்கள் என்றான்.
அப்பொழுது அவன்: உம்முடைய வீட்டில் என்னத்தைப் பார்த்தார்கள் என்று கேட்டான். அதற்கு எசேக்கியா: என் வீட்டிலுள்ளதெல்லாவற்றையும் பார்த்தார்கள்; என் பொக்கிஷங்களில் நான் அவர்களுக்குக் காண்பியாத பொருள் ஒன்றும் இல்லை என்றான்.
அப்பொழுது ஏசாயா எசேக்கியாவை நோக்கி: சேனைகளுடைய கர்த்தரின் வார்த்தையைக் கேளும்.
இதோ, நாட்கள் வரும்; அப்பொழுது உன் வீட்டில் உள்ளதிலும், உன் பிதாக்கள் இந்நாள்வரைக்கும் சேர்த்ததிலும் ஒன்றும் மீதியாய் வைக்கப்படாமல் எல்லாம் பாபிலோனுக்குக் கொண்டுபோகப்படும்.
நீ பெறப்போகிற உன் சந்ததியாகிய உன் குமாரரிலும் சிலர் பாபிலோன் ராஜாவின் அரமனையிலே அரமனை வேலைக்காரராயிருப்பார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.
அப்பொழுது எசேக்கியா ஏசாயாவை நோக்கி: நீர் சொன்ன கர்த்தருடைய வார்த்தை நல்லதுதான் என்று சொல்லி, என் நாட்களிலாவது சமாதானமும் உண்மையும் இருக்குமே என்றான்.
என் ஜனத்தை ஆற்றுங்கள், தேற்றுங்கள்;
எருசலேமுடன் பட்சமாய்ப் பேசி, அதின் போர் முடிந்தது என்றும், அதின் அக்கிரமம் நிவிர்த்தியாயிற்று என்றும், அது தன் சகல பாவங்களினிமித்தமும் கர்த்தரின் கையில் இரட்டிப்பாய் அடைந்து தீர்ந்தது என்றும், அதற்குக் கூறுங்கள் என்று உங்கள் தேவன் சொல்லுகிறார்.