நான் பூமியை உண்டுபண்ணி, நானே அதின்மேல் இருக்கிற மனுஷனைச் சிருஷ்டித்தேன்; என் கரங்கள் வானங்களை விரித்தன; அவைகளின் சர்வசேனையையும் நான் கட்டளையிட்டேன்.
நான் நீதியின்படி அவனை எழுப்பினேன்; அவன் வழிகளையெல்லாம் செவ்வைப்படுத்துவேன்; அவன் என் நகரத்தைக் கட்டி, சிறைப்பட்டுப்போன என்னுடையவர்களைக் கிரயமில்லாமலும் பரிதானமில்லாமலும் விடுதலையாக்குவான் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.
எகிப்தின் சம்பாத்தியமும், எத்தியோப்பியாவின் வர்த்தகலாபமும், நெடிய ஆட்களாகிய சபேயரின் வர்த்தகலாபமும், உன்னிடத்திற்குத் தாண்டிவந்து, உன்னுடையதாகும்; அவர்கள் உன் பின்னே சென்று, விலங்கிடப்பட்டு நடந்துவந்து: உன்னுடனேமாத்திரம் தேவன் இருக்கிறார் என்றும், அவரையல்லாமல் வேறே தேவன் இல்லையென்றும் சொல்லி, உன்னைப் பணிந்துகொண்டு, உன்னை நோக்கி விண்ணப்பம்பண்ணுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
இஸ்ரவேலின் தேவனும் இரட்சகருமாகிய நீர் மெய்யாகவே உம்மை மறைத்துக்கொண்டிருக்கிற தேவனாயிருக்கிறீர்.
விக்கிரகங்களை உண்டுபண்ணுகிற அனைவரும் வெட்கப்பட்டு இலச்சையடைந்து, ஏகமாய்க் கலங்கிப்போவார்கள்.
இஸ்ரவேலோ, கர்த்தராலே நித்திய இரட்சிப்பினால் இரட்சிக்கப்படுவான்; நீங்கள் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் வெட்கப்படாமலும் கலங்காமலும் இருப்பீர்கள்.
வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச்செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வேறொருவர் இல்லை.
நான் அந்தரங்கத்திலும், பூமியின் அந்தகாரமான இடத்திலும் பேசினதில்லை; விருதாவாக என்னைத் தேடுங்களென்று நான் யாக்கோபின் சந்ததிக்குச் சொன்னதுமில்லை; நான் நீதியைப்பேசி, யதார்த்தமானவைகளை அறிவிக்கிற கர்த்தர்.
ஜாதிகளினின்று தப்பினவர்களே, கூட்டங்கூடி வாருங்கள்; ஏகமாய்ச் சேருங்கள்; தங்கள் விக்கிரகமாகிய மரத்தைச் சுமந்து, இரட்சிக்கமாட்டாத தேவனைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் அறிவில்லாதவர்கள்.
நீங்கள் தெரிவிக்கும்படி சேர்ந்து, ஏகமாய் யோசனைபண்ணுங்கள்; இதைப் பூர்வகாலமுதற்கொண்டு விளங்கப்பண்ணி, அந்நாள்துவக்கி இதை அறிவித்தவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவோ? நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.
பூமியின் எல்லையெங்குமுள்ளவர்களே, என்னை நோக்கிப்பாருங்கள்; அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை.
முழங்கால் யாவும் எனக்கு முன்பாக முடங்கும், நாவு யாவும் என்னை முன்னிட்டு ஆணையிடும் என்று நான் என்னைக்கொண்டே ஆணையிட்டிருக்கிறேன்; இந்த நீதியான வார்த்தை என் வாயிலிருந்து புறப்பட்டது; இது மாறுவது இல்லையென்கிறார்.
கர்த்தரிடத்தில்மாத்திரம் நீதியும் வல்லமையுமுண்டென்று அவனவன் சொல்லி அவரிடத்தில் வந்து சேருவான்; அவருக்கு விரோதமாய் எரிச்சல்கொண்டிருக்கிற யாவரும் வெட்கப்படுவார்கள்.
இஸ்ரவேலின் சந்ததியாகிய யாவரும் கர்த்தருக்குள் நீதிமான்களாக்கப்பட்டு மேன்மைபாராட்டுவார்கள்.
பேல் பணியும், நேபோ குனியும், அவைகளின் விக்கிரகங்கள் காட்டுமிருகங்களுக்கும் நாட்டுமிருகங்களுக்கும் சுமையாகும்; நீங்கள் சுமந்த சுமைகள் இளைத்துப்போன மிருகங்களுக்குப் பாரமாயிருக்கும்.
அவைகள் ஏகமாய்க் குனிந்து பணியும்; சுமைகளை அவைகள் தப்புவிக்கமாட்டாது; அவைகள் தாமே சிறைப்பட்டுப்போகும்.
யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்.
உங்கள் முதிர்வயதுவரைக்கும் நான் அப்படிச் செய்வேன்; நரைவயதுமட்டும் நான் உங்களைத் தாங்குவேன்; நான் அப்படிச் செய்துவந்தேன்; இனிமேலும் நான் ஏந்துவேன், நான் சுமப்பேன், தப்புவிப்பேன்.
யாருக்கு என்னைச் சாயலும் சமமுமாக்கி, யாருக்கு நான் ஒப்பாகும்படிக்கு என்னை ஒப்பிடுவீர்கள்?
பையிலிருக்கிற பொன்னைக்கொட்டி, வெள்ளியைத் தராசில் நிறுத்து, தட்டானுடனே கூலிபொருத்திக்கொள்ளுகிறார்கள்; அவன் ஒரு தெய்வத்தை உண்டாக்குகிறான்; அதை வணங்கிப் பணிந்துகொள்ளுகிறார்கள்.
அதைத் தோளின்மேல் எடுத்து, அதைச் சுமந்து, அதை அதின் ஸ்தானத்திலே வைக்கிறார்கள்; அங்கே அது நிற்கும்; தன் இடத்தைவிட்டு அசையாது; ஒருவன் அதை நோக்கிக் கூப்பிட்டால், அது மறுஉத்தரவு கொடுக்கிறதுமில்லை, அவன் இக்கட்டை நீக்கி அவனை இரட்சிக்கிறதுமில்லை.
இதை நினைத்துப் புருஷராயிருங்கள்; பாதகரே, இதை மனதில் வையுங்கள்.
முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்; நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை.
அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் என்று சொல்லி,
உராய்ஞ்சுகிற ஒரு பட்சியைக் கிழக்கிலிருந்தும், என் ஆலோசனையை நிறைவேற்றும் மனுஷனை தூரதேசத்திலிருந்தும் வரவழைக்கிறவராயிருக்கிறேன்; அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.