அந்நாளில் நீ உன் புத்திரனை நோக்கி: நான் எகிப்திலிருந்து புறப்படுகையில், கர்த்தர் எனக்குச் செய்ததற்காக இப்படி நடப்பிக்கப்படுகிறது என்று சொல்.
கர்த்தரின் நியாயப்பிரமாணம் உன் வாயிலிருக்கும்படிக்கு, இது உன் கையிலே ஒரு அடையாளமாகவும் உன் கண்களின் நடுவே நினைப்பூட்டுதலாகவும் இருக்கக்கடவது; பலத்த கையினால் கர்த்தர் உன்னை எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
ஆகையால், நீ வருஷந்தோறும் குறித்த காலத்தில் இந்த நியமத்தை ஆசரித்து வருவாயாக.
மேலும், கர்த்தர் உனக்கும் உன் பிதாக்களுக்கும் ஆணையிட்டபடியே, உன்னைக் கானானியரின் தேசத்திலே வரப்பண்ணி, அதை உனக்குக் கொடுக்கும்போது,
கர்ப்பந்திறந்து பிறக்கும் அனைத்தையும், உனக்கு இருக்கும் மிருகஜீவன்களின் தலையீற்றனைத்தையும், கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பாயாக; அவைகளிலுள்ள ஆண்கள் கர்த்தருடையவைகள்.
கழுதையின் தலையீற்றையெல்லாம் ஒரு ஆட்டுக்குட்டியால் மீட்டுக்கொள்வாயாக; மீட்காவிட்டால், அதின் கழுத்தை முறித்துப்போடு. உன் பிள்ளைகளில் முதற்பேறான சகல நரஜீவனையும் மீட்டுக்கொள்வாயாக.
பிற்காலத்தில் உன் குமாரன்: இது என்ன என்று உன்னைக் கேட்டால்; நீ அவனை நோக்கி: கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்.
எங்களை விடாதபடிக்கு, பார்வோன் கடினப்பட்டிருக்கும்போது, கர்த்தர் எகிப்துதேசத்தில் மனிதரின் தலைப்பிள்ளைகள்முதல் மிருகஜீவன்களின் தலையீற்றுகள் வரைக்கும் உண்டாயிருந்த முதற்பேறுகள் யாவையும் கொன்றுபோட்டார்; ஆகையால், கர்ப்பந்திறந்து பிறக்கும் ஆணையெல்லாம் நான் கர்த்தருக்குப் பலியிட்டு என் பிள்ளைகளில் முதற்பேறனைத்தையும் மீட்டுக்கொள்ளுகிறேன்.
கர்த்தர் எங்களைப் பலத்த கையினால் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினதற்கு, இது உன் கையில் அடையாளமாகவும், உன் கண்களின் நடுவே ஞாபகக்குறியாகவும் இருக்கக்கடவது என்று சொல்வாயாக என்றான்.
பார்வோன் ஜனங்களைப் போக விட்டபின்: ஜனங்கள் யுத்தத்தைக் கண்டால் மனமடிந்து, எகிப்துக்குத் திரும்புவார்கள் என்று சொல்லி; பெலிஸ்தரின் தேசவழியாய்ப் போவது சமீபமானாலும், தேவன் அவர்களை அந்த வழியாய் நடத்தாமல்,
சிவந்த சமுத்திரத்தின் வனாந்தர வழியாய் ஜனங்களைச் சுற்றிப் போகப்பண்ணினார். இஸ்ரவேல் புத்திரர் எகிப்துதேசத்திலிருந்து அணியணியாய்ப் புறப்பட்டுப்போனார்கள்.
மோசே தன்னோடேகூட யோசேப்பின் எலும்புகளை எடுத்துக்கொண்டு போனான். தேவன் நிச்சயமாய் உங்களைச் சந்திப்பார்; அப்பொழுது உங்களோடேகூட என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோங்கள் என்று யோசேப்பு சொல்லி, இஸ்ரவேல் புத்திரரை உறுதியாய் ஆணையிடும்படி செய்திருந்தான்.
அவர்கள் சுக்கோத்திலிருந்து பிரயாணப்பட்டு, வனாந்தரத்தின் ஓரமாய் ஏத்தாமிலே பாளயமிறங்கினார்கள்.
அவர்கள் இரவும் பகலும் வழிநடக்கக்கூடும்படிக்கு, கர்த்தர் பகலில் அவர்களை வழிநடத்த மேகஸ்தம்பத்திலும், இரவில் அவர்களுக்கு வெளிச்சங்காட்ட அக்கினிஸ்தம்பத்திலும் அவர்களுக்கு முன் சென்றார்.
பகலிலே மேகஸ்தம்பமும், இரவிலே அக்கினிஸ்தம்பமும் ஜனங்களிடத்திலிருந்து விலகிப்போகவில்லை.
கர்த்தர் மோசேயை நோக்கி:
நீங்கள் திரும்பி மிக்தோலுக்கும் சமுத்திரத்துக்கும் நடுவே பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கவேண்டும் என்று இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லு; அதற்கு எதிராகச் சமுத்திரக்கரையிலே பாளயமிறங்குவீர்களாக.
அப்பொழுது பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து: அவர்கள் தேசத்திலே திகைத்துத் திரிகிறார்கள்; வனாந்தரம் அவர்களை அடைத்துப்போட்டது என்று சொல்லுவான்.
ஆகையால், பார்வோன் அவர்களைப் பின்தொடரும்படிக்கு, நான் அவன் இருதயத்தைக் கடினப்படுத்தி, நானே கர்த்தர் என்பதை எகிப்தியர் அறியும்படி, பார்வோனாலும் அவனுடைய எல்லா ராணுவத்தாலும் மகிமைப்படுவேன் என்றார்; அவர்கள் அப்படியே செய்தார்கள்.
ஜனங்கள் ஓடிப்போய்விட்டார்கள் என்று எகிப்தின் ராஜாவுக்கு அறிவிக்கப்பட்டபோது, ஜனங்களுக்கு விரோதமாகப் பார்வோனும் அவன் ஊழியக்காரரும் மனம் வேறுபட்டு: நமக்கு வேலை செய்யாதபடிக்கு நாம் இஸ்ரவேலரைப் போகவிட்டது என்ன காரியம் என்றார்கள்.
அவன் தன் இரதத்தைப் பூட்டி, தன் ஜனங்களைக் கூட்டிக்கொண்டு,
பிரதானமான அறுநூறு இரதங்களையும், எகிப்திலுள்ள மற்ற சகல இரதங்களையும், அவைகள் எல்லாவற்றிற்கும் அதிபதிகளான வீரரையும் கூட்டிக்கொண்டு போனான்.
கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.
எகிப்தியர் பார்வோனுடைய சகல குதிரைகளோடும் இரதங்களோடும் அவனுடைய குதிரைவீரரோடும் சேனைகளோடும் அவர்களைத் தொடர்ந்துபோய், சமுத்திரத்தண்டையிலே பாகால்செபோனுக்கு எதிரே இருக்கிற ஈரோத் பள்ளத்தாக்கின் முன்னடியிலே பாளயமிறங்கியிருக்கிற அவர்களைக் கிட்டினார்கள்.
பார்வோன் சமீபித்து வருகிறபோது, இஸ்ரவேல் புத்திரர் தங்கள் கண்களை ஏறெடுத்துப்பார்த்து, எகிப்தியர் தங்களுக்குப் பின்னே வருகிறதைக் கண்டு, மிகவும் பயந்தார்கள்; அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள்.